ஒரு நேர்மையான அரசு அதிகாரி, பணிபுரியும் இடத்திலும், குடும்பத்திலும் சந்திக்கும் பல்வேறு பிரச்னைகளையும் விரும்பதகாத சூழல்களையும் சொல்லியிருக்கும் திரைப்படம் தான் "சூழ்நிலை".
கதைப்படி, ஆச்சாரமான மனிதர் நிழல்கள் ரவி, மத்திய அரசு அதிகாரியான அவர், வீட்டிலும், அலுவலகத்திலும் மிகுந்த கண்டிப்பு நிறைந்தவர். நிழல்கள் ரவியின் மகன் சத்யா. சத்யா ஒரு கிருஸ்துவ பெண்ணை காதலிக்க, அதை அடியோடு எதிர்க்கும் ரவி, அலுவலக விஷயமாக அந்தமான் தீவுகளுக்கு செல்கிறார்.
அங்கு எதிராளிகளால் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கும் நிழல்கள் ரவி உயிரிழந்ததாக அறிவிக்கப்படுகிறது. ஆனால் அந்த விபத்தில் தப்பி பிழைக்கும் ரவி, ஆதிவாசிப்பெண் ஒருவரால் உயிர் வாழ்வதுடன் அவரோடு உறவும் வைக்கிறார். அதன் பின் ஒருவரது சூழ்நிலைதான் மனிதனின் மாற்றங்களுக்கும் ஏற்றங்களுக்கும் காரணம் என்பதை உணரும் நிழல்கள் ரவி, ஊர் திரும்பியதும் மகன் சத்யாவின் காதலுக்கு பச்சைகொடி காட்டுவது தான் "சூழ்நிலை" படத்தின் மீதிக்கதை!
ஆச்சாரமான ஆசாமியாக நிழல்கள் ரவி கச்சிதம். அவரது மகனாக "நெல்லு" சத்யா, சத்யாவின் காதலியாக "வெங்காயம்" பவீனா, கஞ்சா கருப்பு, ப்ரியங்கா, மீரா கிருஷ்ணன் உள்ளிட்டவர்களும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர். வில்லனாக நடிகர் அவதாரம் எடுத்திருக்கும் இசையமைப்பாளர் தினாவின் வில்லத்தனத்தை விட அவரது நடை, உடை, பாவனைகள் செம காமெடி என்பது ஹைலைட்! அந்தமான் காட்டுவாசிப் பெண் - நிழல்கள் ரவியின் சந்தர்ப்ப சூழல் காதலில் செம காமநெடி!
விஜய் திருமூலத்தின் ஒளிப்பதிவு, தினாவின் இசை, தர்மசீலன் செந்தூரனின் எழுத்து-இயக்கம் எல்லாம் இருக்கிறது! ஆனாலும் ஏதோ ஒன்று இல்லாத குறையுடன் "சூழ்நிலை" சற்றே சரியில்லை!!