வங்கதேசத்தைச் சேர்ந்த பிளாக் ஹாட் ஹேக்கர்ஸ் எனும் குழுவினர் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையின் இணையதளம் உட்பட 20 ஆயிரம் இந்திய இணையதளங்களை முடக்கி, கிட்டத்தட்ட ஒரு யுத்தத்தையே நடத்தியுள்ளனர். இது தொடர்பாக தங்களது இணைய பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ள அக்குழு, வங்கதேச எல்லையில் நிறுத்தப்பட்ட இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினரின்
நியாயமற்ற படுகொலைகளுக்கு பழிவாங்கும் வகையிலேயே www.bsf.nic.in உட்பட 20 ஆயிரம் இந்திய இணையதளங்களை சீர்குலைத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இக்குழுவைச் சேர்ந்த ஒருவர் தமது பேஸ்புக் தளத்தில், "இந்தியாவுடன் எங்களுக்கு தனிப்பட்ட எந்த விரோதமும் இல்லை. இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையின் கொடூரமான கொலைகளே இப்படி செய்ய தூண்டியது" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதே குழுவைச் சேர்ந்த மற்றொரு நபர், "1971-ம் ஆண்டு இந்தியா எங்களை ஆதரித்தது. இப்போது அதே இந்தியாதான் எங்களை படுகொலையும் செய்கிறது. பொய்யான நண்பனைவிட வெளிப்படையான எதிரியே மேல்...இதற்காக சாவைக் கண்டு நாங்கள் அஞ்சவில்லை... என்னுடைய தாய்நாட்டைக் காப்பதற்காக..வெற்றி பெறும் வகையில் தொடர்ந்து போரிடுவோம் என்று ஆவேசமாகக் குறிப்பிட்டுள்ளார்.
இக்குழுவினர் பங்கு சந்தை தொடர்பான www.paisacontrol.com என்ற இணைய தளத்தையும் முடக்கியுள்ளனர்.
வங்கதேசத்திலிருந்து இயங்கும் இணையதள ஹேக்கர்ஸ் குழுவின் பெயர் 3xp1r3 Cyber Army என்பதாகும்.
இத்துடன் வங்கதேச எல்லையில் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் படுகொலை செய்யப்படும் காட்சிகள் அடங்கிய வீடியோக்களையும் ஹேக்கர்ஸ் குழு வெளியிட்டுள்ளது.