சூரியனில் உருவாகியுள்ள புயல், பூமியின் காந்த களத்தை தாக்கியுள்ளது. இதனால், மின் தொகுப்பை இணைத்து வழங்கும் கிரிட், செயற்கைக்கோள் இயக்கம், விமானப் போக்குவரத்து பாதை ஆகியவை பாதிக்கப்படலாம் என, விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
சூரியனின் மேல்மட்டத்தில் எழுந்துள்ள அதிர்வலைகள் அல்லது சூரியப் புயல், நேற்று பூமியின் காந்த களத்தை தாக்கியது. இவை புழுதிப் புயல் போல பிரமாண்டமான தோற்றத்துடன் பூமியை நோக்கி அதிவேகமாக வந்தது. சூரியனின் மேற்புறத்தில் பல்வேறு வேதியியல் மாற்றங்களால், சூரியக் கதிர்கள் பெருமளவில் கொந்தளித்து காணப்படுகிறது. கடந்த ஐந்தாண்டுகளில் இல்லாத வகையில் சூரியனின் மேற்புறம் சமீப காலமாக சீற்றத்துடன் உள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 22ம் தேதி, ஒரு சூரியப் புயல் பூமியைத் தாக்கியது. சூரிய காந்த புயல் மூன்று விதத்தில் நிகழும். முதலில் மின்காந்தத் தூண்டல் கதிர்வீச்சும், இரண்டாவதாக, புரோட்டான்கள் நிறைந்த அதிர்வலையால் கதிர்வீச்சும், மூன்றாவதாக, சூரியனின் கரோனா என்ற மேற்புறத்தில் இருந்து எழும் பிளாஸ்மா கதிர்வீச்சும் அடுத்தடுத்து பூமியை நோக்கி வரும். நேற்று தாக்கிய சூரியப் புயல் மிகப் பெரியது எனக் கூறப்படுகிறது. இரு பிரமாண்டமான, "சோப் குமிழி' போன்ற தோற்றத்துடன் தாக்கியதாக, அமெரிக்காவின் "நாசா' விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இந்தப் புயல் சிதறல்கள் மணிக்கு, நான்கு கோடி மைல் வேகத்தில் பயணித்ததாக தெரிவித்தனர். இதனால், விமானப் போக்குவரத்து, செயற்கைக்கோள் செயல்பாடுகள், மின் தொகுப்புகள் ஆகியவை பாதிக்கப்படலாம் என, விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக செயற்கைக்கோள் செயல்பாட்டில் அதிக மின் அழுத்த பாதிப்பு இதனால் ஏற்பட வாய்ப்பு உண்டு. அதே போல, மின்சாரம் கடத்தும் பெரிய அளவிலான கிரிட் மீது, மற்றொரு அதிக சக்தி மின்சாரம் தாக்கும் போது இந்த கிரிட் பாதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. அதே போல, "குளோபல் பொசிஷன் சர்வீஸ்' என்ற தகவல் தொடர்பில் அதி நவீன சேவையும் பாதிப்படைய வாய்ப்பிருக்கிறது. இந்த சூரியப் புயல் இன்று மாலை வரை நீடிக்கும். சூரியப் புயல், பூமியின் வடதுருவத்தில் தான் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.