நினைத்தாலே இனிக்கும், யுவன் யுவதி படங்களுக்குப் பிறகு ஜிஎன் குமரவேல் இயக்கும் புதிய படம் ஹரிதாஸ். சினேகா - கிஷோர் ஜோடியாக நடிக்கும் இந்தப் படத்தில் பிருத்விராஜ் தாஸ் என்ற சிறுவன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். விஜய் ஆண்டணி இசையமைக்கிறார். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். ராஜா முகமது படத்தொகுப்பை கவனிக்கிறார்.
இந்தப் படம் குறித்து செய்தயாளர்களிடம் கூறியதாவது:
ஹரிதாஸ் என்ற தலைப்பு இந்தக் கதைக்குப் பொருத்தமாக இருந்தது. அதனால் வைத்தோம். இந்தத் தலைப்பை வைத்து இது காதல் படம்தான் என முடிவு செய்துவிட வேண்டாம். காதல், பாசம், குடும்ப உறவுகள் என அனைத்தும் உண்டு. எட்டு கதாபாத்திரங்களின் அன்பைச் சொல்லும் கதை.
இந்தக் கதையை நானே உருவாக்கினேன். இதற்கு முன் நான் இயக்கிய இரு படங்களின் கதை என்னுபடையதல்ல. அந்த வகையில் இதுதான் எனது முதல் படம் எனலாம்.
இந்தக்கதைக்கு பொருத்தமானவர் என்பதால் சினேகாவை ஒப்பந்தம் செய்தோம். அவருக்கு திருமணம் என்பது தெரிந்துதான் ஒப்பந்தம் செய்தோம். மிகச் சிறந்த நடிகை அவர். இன்னும் பெரிய உயரத்துக்கு வருவார். என்னைப் பொறுத்தவரை,சினேகா திருமணத்துக்குப் பிறகும் நடிக்க வேண்டும்.
இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் மஞ்சுளா மற்றும் எக்ஸிகியூடிவ் தயாரிப்பாளர் வேல் முருகன் என் மீது பெரும்நம்பிக்கை வைத்து நான் கேட்ட அனைத்து வசதிகளையும் செய்து தருகின்றனர். சென்னையில் படப்பிடடிப்பு நடத்துவது எத்தனை பெரிய சிரமம் என்பது தெரியும். ஆனால் எனக்கு அந்த கஷ்டமேதெரியாமல் பார்த்துக் கொள்கிறார்கள்.
ஜூனில் இந்தப் படத்தை முடித்துவிடுவோம், என்றார்.
கல்யாணராமன், மீண்டும் கோகிலா போன்ற படங்களைத் தந்த பிரபல இயக்குநர் ஜிஎன் ரங்கராஜனின் மகன்தான் ஜிஎன்ஆர் குமரவேலன் என்பது நினைவிருக்கலாம்.