3 பாக்ஸ் ஆபிஸ் நம்பர் 1 - திரை விமர்சனம்!


படம் வெளிவருவதற்கு முன்பே உலகம் முழுக்க பாப்புலரான "ஒய் திஸ் கொலவெறி..." பாடல் இடம் பெற்றுள்ள திரைப்படம், தனுஷின் மனைவி ஐஸ்வர்யா தனுஷ் இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கும் திரைப்படம், கமலின் மகள் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடித்திருக்கும் 2வது தமிழ்படம்... என ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் ‌வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் "3". கதைப்படி பள்ளிப்பருவ காதல், பருவ வயதிலும் தொடர்ந்து ‌பெரிதாக, எந்த எதிர்ப்பும் இல்லாமல் திருமணத்தில் இணைகிறது.
தனுஷ் - ஸ்ருதிஹாசன் ஜோடி! பிஸினஸில் பல கோடிகள் நஷ்டமாகும் தனுஷ், "பை போலா டிஸ்ஆர்டர்" எனும் ஒரு வித வாயில் பெயர் நுழையாத மனநோயால் பாதிக்கப்பட்டு, ஆட்டை கடித்து, மாட்டை கடித்து, மனிதரையம் கடித்த கதையாக, பேயைப்பார்த்து, நாயை அடித்து (கொன்று), நண்பனையும் கடித்து, காதல் மனைவியையும் கொல்லத் துடிக்கிறார். மனநோய் முற்றி தனுஷ், மனைவி ஸ்ருதியை கொன்றாரா...? தன்னை தானே மாய்த்துக் கொண்டாரா...? என்பது தான் "3" படத்தின் திருப்பங்களும்(?) குழப்பங்களும்(!) நிறைந்த மீதிக்கதை!


தனுஷ், ராம் என்ற பாத்திரத்தில் மாணவராகவும், மணாளனா(நாயகி ஸ்ருதியின் மனம் கவர்ந்த)கவும், மனநோயாகளியாகவும் வெவ்வேறு பரிமாணங்களில் வித்தியாசமான கதாபாத்திரமாக வாழ்ந்திருக்கிறார்! பள்ளி மாணவராக சக மாணவி ஸ்ருதியின் பின்னால் அலைந்து, அவரது அப்பாவிடம் ப்ளார் என அறை வாங்கிய பின்பும், மறுநாளே அவர் வீட்டு வாசலில் போய் துணிச்சலாக நின்று "ஐ லவ் யூ" சொல்லு என அடம் பிடிப்பதில் தொடங்கி... மனநோய் முற்றி நாயகியின் "பெட்"டான நாயைக் கொன்று நாடகமாடி, நண்பனின் ம‌ண்டையை உடைத்து, நாயகியையும் கொல்லத் துணிவது வரை...பிரமாதமாக ராம் பாத்திரத்தில் பொருந்தி நடித்திருக்கும் தனுஷ், தன்னை தானே மாய்த்துக் கொள்வது, என்னதான் வாயில் பெயர் நுழையாத வியாதி என்றாலும் சற்றே ஓவர் ஆக்டிங்காக தெரிவது பலவீனம்.


ஸ்ருதிஹாசன், ஜனனி பாத்திரத்தில் மாணவி, காதலி, மனைவி என வெவ்‌வேறு காலகட்டத்தில் வெவ்வேறு விதமான நடிப்பைக் காட்டி வெளுத்து வாங்கியிருக்கிறார். கமலின் மகளா கொக்கா...? எனும் அளவிற்கு முத்தக்காட்சிகளிலும் புகுந்து விளையாடியிருப்பது புரட்சி! க்ளைமாக்ஸில் தனுஷ் தன்னைத் தானே தீர்த்துக் கொண்ட விதம் குறித்து அவரது நண்பர் செந்தில் சொல்ல கேட்டு கதறும், அதிரும் காட்சிகளில் ஸ்ருதியின் நடிப்பு திரையரங்கில் பச்சாயத்தை ஏற்படுத்துவதற்கு பதில் சிரிப்பலைகளை ஏற்படுத்துவது "3" படத்தின் மற்றுமொரு பெரிய பலவீனம்!


மற்றபடி தனுஷ், ஸ்ருதி மாதிரியே அவர்களது நண்பர்களாக வரும் செந்தில் மற்றும் குமார் எனும் சிவகார்த்திகேயன், டியூசன் மாஸ்டர், தனுஷின் அப்பா பிரபு, அம்மா பானுப்ரியா, ஸ்ருதியின் அம்மாவாக வரும் ரோஹினி, ஸ்ருதியின் தங்கையாக வாய்பேச முடியாத பள்ளி சிறுமியாக வரும் பேபி நட்சத்திரம் உள்ளிட்ட எல்லோரும் நச் என்று நடித்து நம்மை டச் பண்ணி விடுகிறார்கள் பலே பலே! அதிலும் அப்பா நடிகர் ஆகிவிட்ட பிரபு பிரமாதம்! லைப் மேட்டர் பேசணும்பா... என அடிக்கடி அப்பா பிரபுவின் முன் தனுஷ் நிற்பதும், பிரபு முதலில் மகனை சிரிப்பாக்குவதும், பின் தனுஷ் சொல்லும் விஷயத்தை சீரியஸாக அணுவதும் பிரமாதம். தனுஷ் தான் சாவதற்கு முன் அப்படி ஒரு லைப் மேட்டரை பிரபுவிடம் பேசப்போய், அதற்கு ஓ.கே. சொல்லும் பிரபு, இனி அப்படி பேசவரக்கூடாது என தனுஷை எச்சரிப்பதும் சென்டிமெண்ட் டச்!


ஆர்.வேல்ராஜின் குதுகலமான ஒளிப்பதிவு, அறிமுக இசையமைப்பாளர் அனிருத்தின் கொலவெறி இசை( எதிர்பார்த்த அளவுக்கு விஷூவலாக கொலவெறி ஒன்னும் பெரிதாக இல்லை) உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகளுடன் 3-யை முன்பாதியில் சரியாகவும், பின்பாதியில் சரியும்படியும் இயக்கி இருக்கும் ஐஸ்வர்யா ஆர்.தனுஷ் மிகவும் துணிச்சல்காரர்தான்! இல்லையென்றால் தன் கணவர் தனுஷை, என்னதான் கதைக்காக என்றாலும் கதாநாயகி ஸ்ருதியுடன் அத்தனை நெருக்கமாக நடிக்க வைத்து, அதை வெறும் காமிரா கண்களோடு மட்டும் பார்த்து ரசித்திருக்க முடியுமா...? அந்த தைரியத்திற்காகவே ஐஸ்வர்யாவை பாராட்டலாம்! மேலும் சின்ன வயது முதல் தான் மிகவும் நெருக்கமாக பார்த்து, பயந்த, தெளிந்த யாரோ ஒருவருடைய கதையில் தன் கண்வர் தனுஷை நடிக்க வைத்து, தன் மனதில் இதுநாள் வரை சிறைபட்டுக்கிடந்த சிக்கலான விஷயங்களை எல்லாம் சீனாக்கி "3" படத்தை செதுக்கி இருக்கறாரோ இயக்குநர்...? எனும் அளவிற்கு அறிமுக படத்திலேயே அத்தனை விஷயங்களையும், அவசரம் அவசரமாக திணித்திருக்கும் ஐஸ்வர்யா அடுத்தடுத்த படங்களில் என்ன செய்யப் போகிறார்...? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!


படத்தின் முன்பாதி காமெடி தூணாக விளங்கும் சிவகார்த்திகேயன், சிங்கப்பூர் போய்விட்டதாக திடீரென தனுஷூம், செந்திலும் டயலாக்கிலேயே அவர் எஸ்கேப் ஆன சீனை முடிப்பது ஏன்...? மனைவியிடம் தனக்கு மனநோய் என்பதை காட்டிக் கொண்டு ட்ரீட்மெண்ட் எடுத்து கொள்ள விரும்பாத தனுஷ், நிரந்தரமாக தன்னை மாய்த்துக் கொண்டு மனைவியை அம்போ என விடத்துணிவது எதற்கு...? தனுஷ் படம் என்றாலே உடன் இருக்கும் உயிர் நண்பனின் மண்டையை பீர் பாட்டிலால் தனுஷ் பிளந்தே ஆகவேண்டும் என்பதை ஐஸ்வர்யாவின் படத்திலும் காட்சிபடுத்தியிருப்பது எப்படி...? என்பது உள்ளிட்ட இன்னும் பல விவாத வினாக்கள் "3" படத்தை பார்த்ததும் எழுவது, சகஜமென்றாலும், தன் அக்கா ஸ்ருதி அவரது காதலுக்காக அப்பா, அம்மாவிடம் அடிவாங்கும் காட்சியில் வாய்பேச முடியாத தங்கை தயங்கி, தயங்கி போட்டும் விடுப்பா... என ஆச்சர்யப்படுத்தும் வகையில் பேசி அக்காவின் காதலுக்கு பெற்றோரை அரை மனது குறைமனதாக பச்சைகொடி காட்ட வைக்கும் ஒரு காட்சி போதும் அறிமுக இயக்குநர் ஐஸ்வர்யா ஆர்.தனுஷின் நெறியாள்கை ‌நேர்மைக்கு கட்டியம் கூற! வாவ் கீப் இட் அப் மிஸஸ் தனுஷ்!!


எல்லாதரப்பினரையும் சற்றே மனச்சிதைவு நோய்க்கு உள்ளாக்கி வரும் இன்றைய பரபரப்பான வாழ்வியல் சூழலில், மனநோயாளி சைக்கோ, எக்ஸ்ட்ரா, எக்ஸ்ட்ரா... கேரக்டர்களை ஹீரோவாக்கி அவர்களின் மனம் மேலும் சிதையக் காரணமாகும் இதுபோன்ற கதைகளால் என்ன லாபம் இருக்க முடியும்...?! என இயக்குநரை பார்த்து கேட்கத் தோன்றினாலும், ஐஸ்வர்யா தனுஷ் தான் எடுத்துக் கொண்ட கதைக்கு நூறு சதவிகிதம் உண்மையாக உழைத்திருக்கிறார் என்பதை ஒவ்வொரு பிரேமும் சொல்கிறது! அதுவே "3"க்கு கிடைத்த "நம்பர்-1".


ஆக மொத்தத்தில் "த்ரி(3)" - புதிர் "தீ"
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget