'பண்டோரா' என்ற கிரகத்தில் 'யுனப்டேனியம்' என்ற கனிமத்தை சுரண்டுவதற்காக அந்த கிரகத்து மக்களையே அழித்து ஒழிக்கும் ஜேம்ஸ் கேமரூனின் அட்டகாசமான 'அவதார்' படத்தை இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும் நாம் மறப்பது சாத்தியமில்லை.
இது கதையல்ல நிஜம் என்கிற மாதிரி ஒரு சமாச்சாரம் நடக்கப் போகிறது.
பிளாட்டினம் உள்ளிட்ட சில அரிய கனிமங்களை வெட்டி எடுத்து வர விண்கற்களுக்கு (asteroids) 'புல்டோசர்களை' அனுப்பப் போகிறது Planetary Resources Inc என்ற அமெரிக்க நிறுவனம்.
இந்தத் திட்டமே சயின்ஸ் பிக்சன் சினிமா மாதிரி இருந்தாலும், இதற்கு நிதியுதவி செய்ய கூகுள் நிறுவன அதிபர்களான லேரி பேஜ், எரிக் ஸுமிட் உள்ளிட்ட பல பெரும் தலைகள் முன் வந்துள்ளனர்.
முதல்கட்டமாக பூமிக்கு அருகாமையில் சுற்றி வரும் எரிகற்களை (near-Earth asteroids) இந்த நிறுவனம் குறி வைக்கப் போகிறது. சுமார் 1,500 எரிகற்கள் பூமியை மிக நெருக்கமாகவே சுற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே நாஸாவின் ஒரு செயற்கைக் கோள் ஒரு எரிகல்லில் லேண்ட் ஆகி, அதில் சில ரசாயன சோதனைகளையும் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
எரிகற்களில் தரையிறங்குவது கொஞ்சம் ஈசியான விஷயம் தான். நிலவிலோ அல்லது வேறு கோள்களிலோ நுழைந்து தரையிறங்க அதிக சக்தி வாய்ந்த ராக்கெட்டுகளும், பாராசூட்களும், பெரும் கவசங்கள் கொண்ட விண் கலன்களும் தேவை.
ஆனால், எரிகற்களில் ஈர்ப்பு விசையும், அழுத்தமும் மிக மிகக் குறைவு. சுமார் 20 சதவீத எரிகற்கள் பனிகட்டிகளால் ஆனவை தான். மற்றவை கல்- கனிமங்களால் ஆனவை. இதனால், அங்கு ஒரு ரோபா போன்ற கருவியை தரையிறக்குவது கொஞ்சம் எளிதான விஷயம் தான்.
இங்கு சுரங்கம் தோண்டும் ரோபாக்களை அனுப்பி, தேவையான கனிமத்தை வெட்டி எடுத்துக் கொண்டு திரும்பி வந்துவிடலாம் என்கிறார் இந்த நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான ஆண்டர்ஸன்.
ஒரு அவுன்ஸ் பிளாட்டினம் 1,500 டாலர்கள் விலை போகும் நிலையில், எரிகற்களுக்கு ரோபோவை அனுப்பி அங்கிருந்து பிளாட்டினத்தை வெட்டி எடுத்து வருவது நிச்சயம் லாபகரமான தொழிலாகவே இருக்கும் என்கிறார்.
இந்த நிறுவனத்தின் இன்னொரு நிறுவனரான பீட்டர் டையமன்டிஸ் ஏற்கனவே 'விண்வெளி டூர்' நிறுவனத்தை நடத்தி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை 8 பெரும் பில்லியனர்களை சர்வதேச விண்வெளி மையத்துக்கு இவர் அமெரிக்க விண்வெளி அமைப்பான நாஸா மற்றும் ரஷ்ய விண்வெளி அமைப்பு மூலம் சுற்றுலாவுக்கு அனுப்பியுள்ளார். இதில், நாஸாவும் ரஷ்யாவுக்கும் பெரும் லாபம் கூடவே டையமன்டிசும் பெரும் பணத்தைப் பார்த்துவிட்டார்.
இதையடுத்தே எரிகற்களை தோண்டி பிளாட்டினம் எடுக்கும் ஆசை இவருக்கு வந்துள்ளது. தனது நிறுவனத்தின் தலைவராகவும் தலைமைப் பொறியாளராகவும் நாஸாவைச் சேர்ந்த கிரிஸ்டோபர் லெவிக்கியை நியமித்துள்ளார். இவர் நாஸாவின் மார்ஸ் (செவ்வாய்) கிரகத்துக்கு செயற்கைக் கோள்களை அனுப்பும் திட்டத்துக்கான மேலாளராக இருந்தவர்.
மேலும் எரிகற்களைத் தோண்ட லேசர்களை பயன்படுத்தும் முடிவில் இருக்கும் இந்த நிறுவனம் சுமார் 25 லேசர் தொழில்நுட்ப வல்லுனர்களையும் வேலைக்குச் சேர்த்துக் கொண்டுள்ளனர். வாஷிங்டனின் பெல்வியூ பகுதியில் இந்த நிறுவனத்தின் அலுவலகம் அமைந்துள்ளது.
கூகுள் நிறுவனர்கள் தவிர பேரோட் சிஸ்ட்ம்ஸ் நிறுவன அதிபரான ரோஸ் பெரோட், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைமை சாப்ட்வேர் ஆர்கிடெக்ட்டான சார்லஸ் சிமோன்யி (இவர் சர்வதேச விண்வெளி மையத்துக்கு டூர் போய் வந்தவர்) ஆகியோரும் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர்.
நாஸாவின் ஸ்பேஸ் ஷட்டில் விண்கல வீரரான (பலமுறை விண்வெளிக்குப் போய் வந்தவர்) தாமஸ் ஜோன்ஸ் மற்றும் அவதார்- டைடானிக் படங்களின் இயக்குனரான ஜேம்ஸ் கேமரூன் ஆகியோர் இந்த நிறுவனத்தின் அட்வைசர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
முதல் கட்டமாக ஒரு அதிக சக்தி கொண்ட டெலஸ்கோப் மற்றும் லேசர் ஆய்வுக் கருவிகள் அடங்கிய ஒரு சிறிய செயற்கைக் கோளை பூமிக்கு மிக அருகில் சுற்றி வரும் விண் கல்லுக்கு அனுப்பவுள்ளது இந்த நிறுவனம். அடுத்து சில கனிமவியல் விஞ்ஞானிகளை நேரடியாக விண் கற்களுக்கு அனுப்பி சோதனை நடத்திவிட்டு, அடுத்த கட்டமாக கனிமங்களை தோண்டும் வேலையை ஆரம்பிக்கவுள்ளது.
பூமிக்குள் வந்து விழுந்த விண்கற்களில் சிலவற்றில் மிக அதிகளவிலான பிளாட்டினம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிறுவனத்தின் திட்டங்களில் ஒன்று... கால்பந்தாட்ட மைதான அளவுள்ள ஒரு விண் கல்லை ராக்கெட்டுகள் மூலம் பூமிக்கு அருகே நகர்த்தி வந்து, அதில் கனிமங்களை அள்ளுவது!