ரஜினியும் கமலும் எப்போது மீண்டும் இணைந்து நடிப்பார்கள்? , அஜித்தும் விஜய்யும் எப்போது இணைந்து நடிப்பர்கள்? என்பது இதுவரையிலும் கேள்விக்குறியை தாங்கியபடியே நிற்கின்றன.
ரஜினியும் கமலும் இணைந்து அபூர்வ ராகங்கள்,
அலிபாபாவும் அற்புதவிளக்கும், நினைத்தாலே இனிக்கும், இளமை ஊஞ்சலாடுகிறது உட்பட பல படங்களில் நடித்துள்ளனர். அதேபோல் அஜித்தும் விஜய்யும் ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.
ஆனால் அந்த படம் வெற்றிபெறவில்லை. இப்போதைய தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களாக அஜித், விஜய் இருப்பதால் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. ஆனாலும் அஜித், விஜய் இருவரும் ரஜினி, கமல் சொல்வது போல் கதை எனக்கும், அவருக்கும் பிடித்து நேரமும் கூடிவந்தால் கண்டிப்பாக நடக்கும் என்று கூறுகின்றனர்.
கோடம்பாக்கத்தின் தற்போதைய ஹாட் டாப்பிக்கை கையில் எடுத்திருப்பவர், அஜித்தை வைத்து அமராவதி படம் எடுத்த இயக்குனர் செல்வா தான். ரஜினி, கமல் நடித்திருந்த ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்தை ரீமேக் செய்யும் முயற்சியில் இறங்கியிருக்கிறாராம் செல்வா.
தன்னை ஹீரோவாக அறிமுகப்படுத்தி முதல் படத்தையே வெற்றியடையச் செய்த இயக்குனர் என்கிற முறையில் அவர் ரீமேக் செய்யும் இந்த படத்தில் நடிக்க அஜித் ஒப்புக்கொண்டுள்ளாராம். நினைத்தாலே இனிக்கும் படத்தில் கமல் நடித்துள்ள கதாபாத்திரத்தில் நடிக்க அஜித் முன்வந்திருப்பதாக தெரிகிறது.
தமிழ் சினிமா ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் வகையில் இயக்குனர் செயல்பட்டால் அடுத்ததாக விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடக்கும் என்பது கோடம்பாக்கத்து தகவல்.
ஒருவேளை விஜய் இந்த படத்தில் நடிப்பது குறித்து பேசப்பட்டால் அஜித்துடன் இணைந்து நடிக்க விஜய் சம்மத்திப்பாரா? என்பது கேள்விக்குறியே. கேள்விக்குறி ஆச்சர்யக்குறியாக மாறுமா?...