பாலிவுட்டில் நட்சத்திரமாய் ஜொலித்த இந்தி நடிகை மாதுரி தீட்சித்திற்கு இப்போது ஆகாயத்திலும் நட்சத்திர அந்தஸ்த்து கிடைத்து இருக்கிறது. ஆம்! விண்வெளியில் உள்ள நட்சத்திர கூட்டத்திற்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. அபோத் என்ற படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மாதுரி தீட்சித். தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து பாலிவுட் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தார்.
தற்போது 45 வயது ஆனாலும் கூட இன்றும் இளமை மாறாமல் அப்படியே இருக்கிறார். இன்றளவும் அவரது பிறந்தநாளை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
பிலிம்பேர், பத்மஸ்ரீ உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்ற மாதுரிக்கு, சமீபத்தில் லண்டன் மியூசியத்தில் சிலை வைத்து கவுரவிக்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு மேலும் ஒரு கவுரவம் கிடைத்து இருக்கிறது. விண்வெளியில் உள்ள நட்சத்திர கூட்டத்திற்கு அவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் மாதுரி டி.வி., நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது, இதற்கான சான்றுகளை அவரது ரசிகர்கள் வழங்கியுள்ளனர். ஸ்டார் பவுண்டேசன் என்ற அமைப்பு இதனை வழங்கி இருக்கிறது.
இதுகுறித்து மாதுரி தீட்சித் தன்னுடைய வலைதளத்தில் கூறியிருப்பதாவது, ஓரியான் என்ற விண்மீன் கூட்டத்தில் உள்ள நட்சத்திரம் ஒன்றுக்க எனது பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதனை மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறேன். இதற்காக எனது ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும் அதற்கான சான்றுகளையும் தன்னுடைய வலைதளத்தில் இணைத்துள்ளார்.