முரட்டுக்காளை திரை விமர்சனம்

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'முரட்டுக்காளை' படத்தின் கதையைப் போன்றே இப்படத்தையும் எடுத்திருக்கிறார்கள்.  தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயத்தைப் பார்த்துக் கொண்டு, தனது நான்கு தம்பிகளோடு கிராமத்தில் வாழ்கிறார் காளை. பக்கத்து ஊரில் ரேக்ளா பந்தயம் நடக்கவே, அதில் கலந்து கொள்ளும் காளை வெற்றி மகுடம் சூட்டுகிறார்.

அந்த ஊரின் பெரியபுள்ளியான வரதராஜனின் தங்கை பிரியா, காளையைப் பார்த்ததும் அவர் மேல் ஒருதலையாய் காதல் கொள்கிறார். தனது ஆசையை தனது வீட்டில் வேலையாளாக இருக்கும் திருநங்கை சரோஜாவிடம் தெரிவிக்கிறார்.


காளையின் ஊருக்கு வரும் சரோஜா, காளையை பற்றி முழு தகவல்களை அறிந்து கொண்டு பிரியாவிடம் வருகிறார். காளைக்கு நான்கு தம்பிகள் இருக்கிறார்கள் என்றும், அவர்கள் சம்மதம் சொன்னால் காளை உன்னை திருமணம் செய்து கொள்வார் என்றும் சொல்கிறார்.


இதனையடுத்து காளையின் தம்பிகளை சந்திக்கும் பிரியா, தனது கல்யாணத்திற்கு அவர்களிடம் சம்மதமும் வாங்கிக் கொள்கிறார்.


வரதராஜன் தன்னிடம் வேலையாளாக இருப்பவரின் தங்கையாக வரும் புவனா மீது மோகம் கொள்கிறார். அவரை அடைய நினைக்கும் முயற்சியில் புவனாவின் அக்காவை கொலை செய்து விடுகிறார். இதனால் தனித்து விடப்படும் புவனா உயிர் பிழைத்துக் கொள்ள காளையின் வீட்டில் அடைக்கலமாகிறார். அவருக்கு காளையும் அடைக்கலம் தருகிறார்.


இந்நிலையில் தனது தங்கை காதலிக்கும் ஆள் 'காளை' என்பதை விட,  அவரது நிலத்தில் கனிமப் பொருள் இருப்பது வரதராஜனுக்கு தெரியவரவே, அவர் மாப்பிள்ளை கேட்டு காளை வீட்டிற்கு வருகிறார். இது அறியாமல் திருமணத்திற்கு சம்மதிக்கிறார் காளை.


நிச்சயதார்த்தத்தின் போது வரதராஜனின் நிலத்தாசை தெரிய வருகிறது. பிரியா தன் தம்பிகள் மேல் வெறுப்பு காட்டுவதும் தெரிய வருகிறது. இதனால் நிச்சயதார்த்தத்தை நிறுத்தி விடுகிறார். இதனால் காளையும் வரதராஜனும் எதிரிகளாகி விடுகின்றனர்.


தம்பிகள் மேல் அன்பு காட்டும் புவனாவை காளைக்கு பிடித்துப் போகிறது. அவரை கைப்பிடிக்க நினைக்கிறார். இதற்கு பலவிதமான முட்டுக் கட்டைகளைப் போடுவது மட்டுமின்றி ஒரு கொலைப்பழியையும் அவர் மீது சுமத்துகிறார் வரதராஜன்.


இத்தனை பிரச்சினைகளையும் காளை சமாளித்தாரா? புவனாவை கரம் பிடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.


காளை வேடத்தில் சுந்தர் சி நடித்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளிலும், ரேக்ளா பந்தயக் காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். புவனா கேரக்டரில் வரும் சினேகா அழகாய் நடித்திருப்பது மட்டுமின்றி, பாடல் காட்சிகளில் கவர்ச்சியும் காட்டியிருக்கிறார்.


வரதராஜன் வேடத்தில் வரும் சுமன் வில்லன் நடிப்பில் அசத்துகிறார். பிரியா கேரக்டரில் வரும் சிந்து துலானி தன் பங்கை உணர்ந்து நடித்திருகிறார்.


திருநங்கை சரோஜாவாக வரும் விவேக் சிறப்பாக நடித்திருக்கிறார். சுமனோடு இருந்து கொண்டு அவருக்கு எதிராக காளையை கொம்பு சீவி விடும் பாத்திரத்தை மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார்.


தனி டிராக்கில் இவர் நடத்தும் காமெடி, சில காட்சிகளில் சிரிப்பைத் தருகிறது. இவர் குளியல் போடும் காட்சிகளில் அருவறுப்பைத் தருகிறது.


ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் 5 பாடல்கள். 'பொதுவாக என் மனசு தங்கம்' ரீமிக்ஸ் பாடல், சிம்பு பாடிய 'சுந்தர புருஷா' பாடல் தாளம் போட வைக்கிறது.


ரேக்ளா பந்தயம், டிரெயின் சண்டை காட்சி, கிராமத்து பசுமை ஆகியவற்றை சான்டோனியோ கேமிரா அள்ளி வந்திருக்கிறது. அதனை அழகாக திரையில் கொண்டு வந்திருக்கிறார்கள் படத்தொகுப்பாளர்களான பிரவீண் மற்றும் ஸ்ரீகாந்த்.


ரஜினியின் முரட்டுக் காளையை இப்படத்தில் மீள்பதிவு செய்ய முயன்றிருக்கிறார் இயக்குனர் செல்வபாரதி. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வந்திருக்க வேண்டிய படம் இது. இப்போது வந்திருந்தாலும் ரசிக்கும் படியாகவே கொடுத்திருக்கிறார் செல்வபாரதி.


முரட்டுக் காளை... முட்டும் காளை.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget