அஜீத் குமார் நடித்த பில்லா 2 படம் வெளியாகாத சூழலில், தன்னந்தனியாக உற்சாகத்துடன் நாளை மறுநாள் களமிறங்குகிறது கார்த்தி நடித்த சகுனி.
இந்தப் படம் நேரடியாக தெலுங்கிலும் அதே பெயரில் உருவாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இது கார்த்திக்கு முதல் தெலுங்குப் படமாகும்.
சகுனி படம் ஜூன் 22 என அறிவிக்கப்பட்டதும், 21-ம் தேதியே பில்லா 2 வெளியாகும் என்று கூறப்பட்டது. தியேட்டர்கள் முன்பதிவுக்கான வேலைகளை ஆரம்பித்த நிலையில், திடீரென்று சென்சார் பிரச்சினையில் சிக்கிக் கொண்டது பில்லா 2. பட வெளியீடு இந்த மாத இறுதியிலா... அடுத்த மாதமா என்று தெரியாத நிலை.
இது சகுனிக்கு ரொம்ப சாதகமாக அமைந்துள்ளது. தமிழில் சோலோ ரிலீசாகக் களமிறங்கும் இந்தப் படத்துக்கு இதுவரை 450 திரையரங்குகள் ஒப்பந்தமாகியுள்ளன. இதற்கு முன் கார்த்தி என்ன... சூர்யாவின் படமே தமிழகத்தில் இத்தனை அரங்குகளில் வெளியாகியிருக்குமா என்பது சந்தேகம்!
தியேட்டர்காரர்கள் பெரிய தொகையை மினிமம் கேரண்டியாகத் தந்துள்ளனர். காஞ்சிபுரத்தில் ஒரு காம்ப்ளெக்ஸ் மட்டுமே ரூ 30 லட்சத்தை இந்தப் படத்துக்குக் கொடுத்துள்ளதென்றால் சகுனி விற்பனையைப் பார்த்துக் கொள்ளுங்கள்!
விநியோகஸ்தர்கள் பாண்டவர்களாகாமல் இருந்தால் சரி!