துப்பாக்கி படப்பிடிப்பில் நடிகர் விஜய் எதிர்பாராத விதமாக காயமடைந்தார். அவருக்கு லண்டனில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விஜய், காஜல் அகர்வால் ஜோடியாக நடிக்கும் படம் துப்பாக்கி. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். கலைப்புலி தாணு தயாரிக்கிறார். அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகி வரும் துப்பாக்கியின் படப்பிடிப்பு லண்டனில் நடந்து வருகிறது. படப்பிடிப்பின்போது சண்டைக் காட்சி ஒன்றில் விஜய் நடித்துக் கொண்டிருந்தார்.
அப்போது கால்மூட்டில் அவருக்கு அடிபட்டது. வலியால் துடித்தார் விஜய். எனவே படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.
லண்டன் மருத்துவமனை ஒன்றில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தப் படப்பிடிப்பு முடிந்ததும், மெல்போர்னில் நடைபெறும் இந்திய திரைப்பட விழாவில் பங்கேற்க முடிவு செய்திருந்தார் விஜய். ஆனால் காலில் அடிபட்டதால் அந்த விழாவுக்கு செல்வதை ரத்து செய்துவிட்டதாகத் தெரிகிறது. துப்பாக்கி படப்பிடிப்பு தொடர்ந்து விஜய்க்கு சோதனைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தப் படத்தில் இடம்பெற்ற புகைப் பிடிக்கும் காட்சிக்காக பெரிய சர்ச்சை கிளம்பியது. இதனால் புகைப்பிடிப்பது மாதிரி காட்சிகளே இந்தப் படத்தில் இருக்காது என்று இயக்குநர் முருகதாசும், விஜய்யும் அறிவித்தது நினைவிருக்கலாம்!