இந்திய பாக்ஸ் ஆபிஸில் அவதாரின் வசூல் சாதனையை அமேசிங் ஸ்பைடர் மேன் படம் முறியடித்துள்ளது. ஆன்ட்ரூ கார்பீல்ட்-எம்மா ஸ்டோன், பாலிவுட் நடிகர் இர்பான் கான் உள்ளிட்டோர் நடித்த அமேசிங் ஸ்பைடர் மேன் ஹாலிவுட் படம் இந்தியாவில் கடந்த 29ம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் டப் செய்யப்பட்டு 3டி, 2டியில் 1,236 திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. ரிலீஸான அன்று ரூ.8.50 கோடியும், மறுநாள் அதாவது சனிக்கிழமை ரூ.9.60 கோடியும், ஞாயிற்றுக்கிழமை
ரூ.11 கோடியும் வசூலாகியுள்ளது.
ஆக படம் ரிலீஸான 3 நாட்களில் மட்டும் ரூ. 29.10 கோடி வசூலாகியுள்ளது. இந்த வருவாய் இந்தியாவில் கிடைத்தது மட்டுமே. இதுவரை இந்தியாவில் ரிலீஸான ஹாலிவுட் படங்களில் அவதார் படத்திற்கு தான் வார இறுதி நாட்களில் அதிகபட்சமாக ரூ.16 கோடி வசூலானது. தற்போது அவதாரின் சாதனையை அமேசிங் ஸ்பைடர் மேன் முறியடித்துள்ளது.
இந்த படத்தில் நடித்துள்ள பாலிவுட் நடிகர் இர்பான் கான் ஸ்பைடர் மேனின் அடுத்த பாகத்திலும் நடிப்பார் என்று கூறப்படுகிறது. மிஷன் இம்பாசிபில் 4 படத்தில் பாலிவுட் நடிகர் அனில் கபூர் காமெடி பீசாக வந்ததுபோன்று இல்லாமல் இர்பான் தனது கதாபாத்திரத்தை அருமையாக செய்துள்ளார் என்று திரை ரசிகர் வருண் வர்மா தெரிவித்துள்ளார்.