இந்த தீபாவளிக்கு விஜய்யின் துப்பாக்கி உள்பட 7 புதிய படங்கள் வெளியாகின்றன. முன்பெல்லாம் தீபாவளி, பொங்கல் என்றால் ஒரு டஜன் படங்கள் வெளியாகி வந்தன. ஆனால் திடீரென இந்த எண்ணிக்கை குறைந்து, ஒன்று இரண்டு வெளியானாலே பெரிய விஷயம் என்றாகி விட்டது. கடந்த ஆண்டு இரண்டு படங்கள்தான் வெளியாகின. ஆனால் இந்த தீபாவளிக்கு துப்பாக்கி, அம்மாவின் கைபேசி, போடா போடி உள்பட 7 படங்கள் வெளியாகின்றன.
இதனால் ஒரே படத்துக்கு பல நூறு திரையரங்குகள் தரும் நிலை மாறியிருக்கிறது.
விஜய்யின் துப்பாக்கி
தலைப்பு பிரச்சினை, தம் பிரச்சினை, ஈயடிச்சான் காப்பி என ஏக பஞ்சாயத்துக்களுக்குப் பிறகு வெளியாகும் ‘துப்பாக்கி'யில் விஜய், காஜல் அகர்வால் ஜோடியாக நடித்துள்ளனர். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார்.
மும்பை குண்டு வெடிப்பை மையமாக வைத்து இப்படம் தயாராகியுள்ளது. மும்பை வாழ் தமிழனாக விஜய் நடித்துள்ளார்.
கும்கி
புதிய நடிகர்கள் நடித்திருந்தாலும், பிரபு சாலமன் என்ற பெயருக்காக பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பிய படம் கும்கி. பிரபு மகன் விக்ரம் பிரபுதான் ஹீரோயின். சுந்தரபாண்டியனில் நடித்த லட்சுமிக்கு இதுதான் ஒரிஜினல் முதல்படம். ஆனால் வெளியாவதில் ஏற்பட்ட தாமதத்தால் சுந்தரபாண்டியன் முந்திக் கொண்டது. ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா இந்தப் படத்தை வெளியிடுகிறார்.
அம்மாவின் கைபேசி
பேசிப் பேசியே கொல்லும் தங்கர் பச்சான் இந்த முறை ‘அம்மாவின் கைபேசி'யோடு தீபாவளிக்கு களமிறங்கிறார்.
தாய்க்கும், மகனுக்குமான பாச போராட்டத்தை விளக்கும் கதையம்சம் உள்ள படமாக தயாராகியுள்ளது. தங்கர் பச்சான் இயக்கியுள்ளார். பாக்யராஜின் மகன் சாந்தனு நாயகனாக நடித்துள்ளார்.
கள்ளத் துப்பாக்கி
விஜய்யின் துப்பாக்கி படத்துக்கு திருகுவலியைக் கொடுத்த ரவிதேவன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் இந்த கள்ளத்துப்பாக்கி. புதியவர்கள் நடிப்பில் திரில்லர் படமாக தயாராகியுள்ளது. இந்தப் படத்தைப் பார்த்த கமல் பாராட்டு தெரிவித்துள்ளது, துப்பாக்கியையே ஜெயித்துவிடும் நம்பிக்கையை அவர்களுக்குத் தந்துள்ளது.
போடாபோடி
சிம்பு நடித்துள்ள போடா போடியும் தீபாவளி ரேஸில் குதித்துள்ளது. சரத்குமார் மகள் வரலட்சுமி நடித்துள்ள முதல் படம் இது. விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார்.
அஜந்தா, லொள்ளு தாதா
இவற்றைத் தவிர, அஜந்தா, லொள்ளு தாதா பராக் பராக் போன்ற படங்களும் வெளியாகின்றன. ‘லொள்ளு தாதா பராக் பராக்' படத்தில் மன்சூர்அலிகான் நாயகனாக நடித்துள்ளார். கந்து வட்டியை மையமாக வைத்து காமெடி படமாக தயாராகியுள்ளது. ‘அஜந்தா' படத்தை ராஜ்பா ரவிசங்கர் திருமால் இயக்கியுள்ளனர். காதல் கதையாக தயாராகியுள்ளது.