புது நடிகைகள் தமிழ் படங்களில் கலக்குகிறார்கள். முன்னணி நடிகைகள் சம்பளத்தை பல மடங்கு உயர்த்தி உள்ளனர். ஒரே நேரத்தில் பல படங்களுக்கு தேதிகள் ஒதுக்கி கால்ஷீட்டிலும் குழப்பு கின்றனர். இதனால் இயக்குனர்கள் புது நடிகைகளை தேடி படையெடுக்கின்றனர். பெரிய இயக்குனர்கள் எடுக்கும் பல படங்களில் புதுமுகங்கள்தான் கதாநாயகிகளாக ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளனர். புது நடிகைகளில் லட்சுமி மேனன் வேகமாய் வளர்கிறார். இவர் சசி குமார் ஜோடியாக நடித்த சுந்தரபாண்டியன் படம் வெற்றிகரமாய் ஓடியது.
அடுத்து பிரபு மகன் விக்ரம் பிரபுவுடன் ஜோடியாக நடித்த கும்கி படம் ரிலீசாக உள்ளது. இப்படத்தை மைனா படத்தை எடுத்த பிரபுசாலமன் இயக்குகிறார்.
மணிரத்னம் தனது கடல் படத்தில் துளசி என்ற புதுமுக நடிகையை நாயகியாக அறிமுகப்படுத்தியுள்ளார். துளசி பழைய நடிகை ராதாவின் மகள் ஆவார்.
இன்னொரு முன்னணி இயக்குனரான பாலா தனது பரதேசி படத்தில் பிரபலம் இல்லாத தன்ஷிகாவை கதாநாயகியாக நடிக்க வைத்துள்ளார். இது போல் வேதிகா என்ற இன்னொரு நடிகையும் இதில் நடிக்கிறார்.
சூது கவ்வும் என்ற படத்தில் பெங்களூரை சேர்ந்த சஞ்சிதா ஷெட்டி நாயகியாக நடிக்கிறார். வாணவராயன் வல்லவராயன் என்ற படத்தில் மோனல் கஜ்ஜார் நாயகியாக அறிமுகமாகிறார்.
அமைதிப்படை பார்ட்-2 மற்றும் பனிவிழும் மலர் வனம் படங்களில் நடிக்கும் வர்ஷாவும் வளர்கிறார். முகமூடியில் அறிமுகமான பூஜா ஹெக்டேவுக்கும் படங்கள் குவிகிறது. காவலன் படத்தில் அசின் ஜோடியாக வந்த மித்ரா குரியன் நந்தனம் படத்தில் கதாநாயகியாகியுள்ளார்.
மேலும் தற்போது தயாராகிக் கொண்டிருக்கும் 25-க்கும் மேற்பட்ட படங்களில் புது நடிகைகள் கதாநாயகிகளாக நடித்துக் கொண்டு இருக்கின்றனர்.