Robert De Niro‘வும் Al Pacino‘வும் ஆங்கில பட உலகின் மைல் கற்களில் இருவர். இதில் யாராவது ஒருவரைத் தூக்கி ஒரு படத்தில் போட்டால் போதும், படம் ஒரு நல்ல படமாகிவிடும். எனவே இந்த இருவரையும் சேர்த்துப் போட்டால் எதுவுமே பிழைக்காது என்று முற்றுமுழுதாக நம்பி ஒரு படத்தை எடுத்திருக்கின்றார்கள். (இந்த சோடியின் முன்னைய படைப்புக்கள் (The Godfarther II, Heat) வெற்றிப்படங்கள் என்பதை இங்கு குறிப்பிடவேண்டும்.) இந்த சோடியை மட்டுமே நம்பிவிட்டு படத்தில் வேறு எதுவித புதுமையையும்
காட்ட மறந்துவிட்டார்கள்.
De Niro’வும் Pacino’வும் தசாப்தங்களாக இணைந்து செயற்படும் இரு காவல்துறை துப்பறிவாளர்கள். கிட்டத்தட்ட இளைப்பாறுகின்ற வயதில் இருக்கும் தருவாயில் வந்து சேருகின்றது ஒரு தொடர் கொலை வழக்கு ஒன்று — காவல்துறையினரார் குற்றவாளிகள் என்று தெளிவாக அறியப்பட்டாலும், அதை நிரூபிக்க அத்தாட்சிகள் இல்லாத வகையில் சுதந்திரமாக நடமாடும் குற்றவாளிகள் ஒருவன் பின் ஒருவராக கொலை செய்யப்படுகின்றனர். “நல்ல விசயம், நடக்கட்டும்” என்று விட்டுவிட முடியாமல் அதை துப்புத்துலக்க வேண்டிய நிர்ப்பந்தம். விசாரணையின் போக்கில் இந்த கொலைகளை செய்வது ஒரு காவல்துறை அதிகாரியாகத்தான் இருக்கமுடியும் என்று தெளிவாகத்தெரிகின்றது. விசாரணைகள் மேலும் தொடர, சாட்சியங்கள் அனைத்துமே De Niro’வின் பாத்திரமே கொலையாளியாக இருக்கவேண்டும் என சுட்டிக்காட்ட ஆரம்பிக்கின்றன. அதைப்பற்றி எனக்கு கவைலையில்லை, நான் கொலைகாரன் இல்லை என De Niro’வும், De Niro’வை குற்றச்சாட்டில் இருந்து அகற்ற முயலும் Pacino’வுமாக கதை போகின்றது.
வழமைபோல நடிப்பில் எவ்வித குறையும் வைக்கவில்லை De Niro’வும் Pacino’வும். கூடவே துணை நடிகையாக வரும் Carla Gugino‘வும் கவர்ச்சிகரமான ஒரு சிறிய பாத்திரத்தில் சிறந்த முறையில் நடித்துள்ளார். நடிப்பு, நெறியாக்கம், ஓளிப்பதிவு எல்லாமே சிறப்பாகத்தான் உள்ளது, படத்தின் கதையைத் தவிர. உண்மைக் கொலைகாரன் யார் என்பதில் கடைசித் திருப்பு முனையாக கொண்டுவந்து பார்ப்பவர்களை அதிர்ச்சியடைய வைக்க முயற்சித்திருந்தாலும், அது பெரிய ஆச்சரியமாக எனக்குத் தெரியவில்லை.
De Niro, Pacino ரசிகர்கள் பார்கலாம். ஆக்க்ஷன் என்று எதுவும் இல்லை — கதைத்துத் தள்ளுகின்றார்கள். என்றாலும் விறுவிறுப்பு உண்டு. நீங்கள் தீவிர ஆங்கில பட ரசிகர் என்றால் இதைப் பார்க்கலாம். கொஞ்சம் வயது வந்தவர்களிற்கான படம்.