ஆண்டவ பெருமாள் சினிமா விமர்சனம்


நடிகர்கள்: சிவன், அங்கீதா.
இசை: ரவிச்சந்திரன்
ஒளிப்பதிவு: ராபின் என்.சாமுவேல்
இயக்கம்: ப்ரியன்.
தயாரிப்பு: ஆர்.ஜனா.

சிவன், வேலை வெட்டி எதுவும் பார்க்காத இளைஞர். இவருடைய தந்தை ‘பசங்க’ சிவகுமார். தங்கை கீதா சதீஷ். நண்பர் ‘லொள்ளு சபா’ ஜீவா ‘மெக்கானிக் ஷாப்’
வைத்திருக்கிறார். இவருடைய கடையில் உட்கார்ந்து கொண்டு அந்த வழியாக வரும் மாணவி அங்கீதாவை சிவன் ‘சைட்’ அடிக்கிறார். அவர் போகும் இடமெல்லாம் துரத்திப்போய் காதலிக்கிறார்.

சிவனின் காதலை, அங்கீதா நிராகரித்து விடுகிறார். காதலில் தோல்வி அடைந்த சிவனுக்கு மேலும் ஒரு சோதனை. அவருடைய அப்பா சிவகுமார் திடீர் மரணம் அடைகிறார். தன்னையும், தங்கையையும் காப்பாற்றிக் கொள்வதற்காக சிவன், ‘செல்போன்’ கடை வைக்கிறார்.

இந்த நிலையில், அங்கீதாவுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயமாகிறது. திருமணத்தன்று உள்ளூர் தாதாவின் தம்பியுடன் ஏற்படும் தகராறில், அவரை கன்னத்தில் அறைந்து விடுகிறார், அங்கீதா. தாதா கும்பல் அங்கீதாவை துரத்த, அவர் சிவன் வீட்டில் அடைக்கலமாகிறார்.

சிவன் தாதா கும்பலுடன் மோதி, அவர்களை அடித்து விரட்டுகிறார். அங்கீதாவை தனது ‘பைக்’கில் ஏற்றிப்போய் பத்திரமாக திருமண மண்டபத்தில் சேர்க்கிறார். அங்கீதாவுக்கு சிவன் மீது ஈர்ப்பு ஏற்படுகிறது. அவரை, ‘மிஸ்’ பண்ணி விட்டோமே என்று வருத்தப்படுகிறார்.

இது, மணமகனுக்கு தெரியவர அவர் வில்லனாகிறார். சிவனை தீர்த்துக்கட்ட திட்டம் போடுகிறார். அவருடைய சதித்திட்டத்தில் சிவன் சிக்கினாரா, தப்பித்தாரா? என்பது ‘கிளைமாக்ஸ்.’

சிவன், ஒரு நடுத்தர குடும்பத்தின் யதார்த்தமான இளைஞராக வருகிறார். இவர், அங்கீதாவிடம் தனது காதலை சொல்லப்போகும்போது, அவர் தெலுங்கில் பேசுவதும், மொழி புரியாமல் குழம்புகிற சிவன் தெலுங்கு படங்களை பார்த்து தெலுங்கு கற்றுக்கொள்வதும் ரசிக்கும்படி இருக்கிறது.

அங்கீதாவிடம் திரிஷாவின் சாயல் நிறைய தெரிகிறது. அவரைப் போலவே சிரிக்கிறார், நடிக்கிறார்.

லொள்ளு சபா ஜீவா எல்லா படங்களிலும் போல் இந்த படத்திலும் நண்பராகவே வருகிறார். சசி, தாதாவின் தம்பியாக மிரட்டுகிறார். அப்பாவாக ‘பசங்க’ சிவகுமார், அனுதாபத்தை அள்ளுகிறார். கலகலப்புக்கு, பாவா லட்சுமணன்.

பாடல்கள் ஒன்று கூட நினைவில் நிற்கவில்லை.

காதலையும், தாதா கும்பலையும் கலந்து கலகலப்பாகவும், விறுவிறுப்பாகவும் கதை சொல்ல முயற்சித்து இருக்கிறார், டைரக்டர் ப்ரியன். சிவனின் காதலை நிராகரித்த அங்கீதா, அவர் வீட்டிலேயே அடைக்கலமாவதும், அவரை தவற விட்டுவிட்டோமே என்று வருந்துவதும், எதிர்பாராத திருப்பங்கள்.

அதுவே இருவரையும் இணைத்து விடும் என்று எதிர்பார்க்க வைத்து, உச்சக்கட்ட காட்சியில் ஏமாற்றிவிட்டார், டைரக்டர். கதாநாயகனை பலியாக்கி, வில்லனை வாழவைக்கும் ‘கிளைமாக்ஸ்’ தேவையா?
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget