பாஷா சினிமா விமர்சனம்


தூக்கி குப்பையில் போடுங்கள். மாஸ் ஹீரோ படத்தில் கதையாவது, மண்ணாங்கட்டியாவது. மூளையை கழற்றிவிட்டு தியேட்டருக்கு போனோமா, ரசித்தோமா என்று இருக்க வேண்டும். அதை விட்டு விட்டு லாஜிக் சரியில்லை அது சரியில்லை என நொட்டை சொல்வது பஞ்சமா பாதகத்துக்கு சமம். எதற்கு வம்பு? நேரடியாக விஷயத்துக்கு போய்விடலாம். சென்ற வாரம்
ஆந்திராவில் வெளியான (தமிழகத்திலும்தான் சுவாமி. சென்னையில் மட்டுமே 12 திரையரங்குகள்!) ‘பாஷா’ தெலுங்குப் படம், மொத்தமாக திருப்பதி உண்டியலை ஹைஜாக் செய்திருக்கிறது. எல்லா சென்டர்களிலும் ரெக்கார்ட் பிரேக். வசூல் சுனாமியில் மற்றப் படங்கள் அனைத்தும் காலி.

கதை? அந்த கருமத்தையும் பார்த்து விடுவோம். ஜூனியர் என்டிஆர், ஒரு மாஃபியா டானின் மகன். ஆனால், தெற்காசியாவின் நம்பர் ஒன் மாஃபியா தலைவனுக்கு அவரது அப்பா வெறும் அடியாள்தான். இந்நிலையில் வெளிநாட்டுக்கு செல்லும் ஜூனியர் என்டிஆர், அங்கு சுற்றிக் கொண்டிருக்கும் காஜல் அகர்வாலை வலுக்கட்டாயமாக காதலிக்க ஆரம்பிக்கிறார். காஜல் அகர்வாலின் அப்பா, ஒரு போலீஸ் அதிகாரி. இன்னொரு காவல்துறை அதிகாரியின் மகனுடன் காஜலுக்கு ஏற்கனவே நிச்சயம் ஆகிவிட்டது. இந்த சூழலில் எதற்காக ஜூனியர் என்டிஆர், வெளிநாடு சென்று காஜல் அகர்வாலை காதலிக்கிறார், தன் அப்பாவின் தலைவனான நம்பர் ஒன் டானை வீழ்த்திவிட்டு எப்படி தெற்காசியாவின் ‘பாஷா’ (பேரரசர்) ஆக மாறுகிறார் என்பதுதான் இரண்டரை மணிநேர படம்.

ஆனால், இது முழுநீள குடும்பச் சித்திரம் என்பதுதான் மிகப் பெரிய ப்ளஸ். ஆக்ஷன், சென்டிமெண்ட், காமெடி, ரொமான்ஸ்... என சகலமும் சரிவிகிதத்தில் கலந்த உயர்தர காக்டெயில். ஒரே சிப்பில் போதை உறுதி. மொத்தத்தில் இயக்குநர் சீனு வைட்யாலா பிராண்ட். மனிதரின் நாடி, நரம்பெல்லாம் காமெடியும், கமர்ஷியல் அயிட்டங்களும்தான் ஓடுகிறதோ என்று வியக்கும் அளவுக்கு ரவுண்டு கட்டி அடித்து வருகிறார். அதளபாதாளத்தில் மூச்சுத் திணறிக் கொண்டிருந்த தெலுங்கு சினிமாவை, இவர் இயக்கிய ‘தூக்குடு’ படமே தூக்கி நிறுத்தியது. அதன் பிறகு நிற்க நேரமில்லாமல் டோலிவுட் ஓடிக் கொண்டிருக்கிறது. சென்ற ஆண்டு மட்டுமே 12 ப்ளாக் பஸ்டர் படங்களையும், 7 சூப்பர் ஹிட் படங்களையும், 10 ஹிட் படங்களையும் தெலுங்கு திரையுலகம் கொடுத்ததற்கு பின்னால் சீனு வைட்யாலா போட்ட ரோடு இருக்கிறது.

அதே சாலையில்தான் ‘பாஷா’வும் ஹை ஸ்பீடில் பயணம் செய்திருக்கிறது. பிரும்மானந்தமும், நாராயணனும் காமெடியில் பின்னி எடுக்க, அவர்களுடன் கை கோர்த்தபடி ஜூனியர் என்டிஆர் புகுந்து விளையாட, ஒரே அதகளம்தான். அதுவும் சீனியர் என்டிஆரின் பாடலுக்கு ஜூனியர் அதே பாடிலேங்வேஜுடன் ஆடும்போது திரையரங்கமே கைத்தட்டலால் அதிர்கிறது. என்றாலும் வழக்கம் போல் இந்தப் படத்தின் படப்பிடிப்பிலும் தன் குணத்தை காண்பித்திருக்கிறார், சீனு வைட்யாலா. யெஸ், நான்கு முறை ஒளிப்பதிவாளர்கள் மாற்றப்பட்டிருக்கிறார்கள். அதே போல் இதுநாள் வரை தனது மூளையாக செயல்பட்டு வந்த எழுத்தாள ஜோடியான கோனா வெங்கட் - கோபி மோகனுடன் அளவுக்கு மீறி முரண்பட்டிருக்கிறார். கோபி மோகன் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும் கோனா வெங்கட், கொஞ்சம் மீசையை முறுக்க ஆரம்பித்திருக்கிறார். 

அதனாலேயே இறுதிக்கட்ட டிரெய்லரிலும், கடைசி நேர போஸ்டரிலும் கோனா வெங்கட்டின் பெயரை போடாமல் சீனு வைட்யாலா பழி வாங்கியிருக்கிறார். இது நல்லதுக்கா இல்லையா என்பது இனி வரும் காலங்களில்தான் தெரியும். ஆனால், ‘பாஷா’ படம், உண்மையிலேயே ஜூனியர் என்டிஆரை வசூல் சக்கரவர்த்தியாக உயர்த்தியிருக்கிறது. மாஸ் ப்ளஸ் கிரேஸ் குறையாமல் இருந்தாலும் சொல்லிக் கொள்ளும் வெற்றியை அவர் கொடுத்தே மாமாங்கமாகிறது. அந்தத் துயரத்துக்கு இந்தப் படம் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. இல்லாவிட்டால் சீறீக் கொண்டிருந்த சித்தப்பா பாலகிருஷ்ணா, ‘மகனே...’ என கட்டியணைத்து சீன் போடுவாரா?! அதே போல் ‘கபார் சிங்’ இமாலய வெற்றிக்கு பிறகு முன்னணி தயாரிப்பாளராக மாறிய பண்டலா கணேஷ் பாபுவை இந்தப் படம், டாப் மோஸ்ட் தயாரிப்பாளராக உயர்த்திவிட்டது. 

நிச்சயம் இன்கம்டேக்ஸ் அதிகாரிகளின் மூக்கில் வியர்த்திருக்கும். எப்போது வேண்டுமானாலும் சைரன் அதிர ரெய்டுக்கு வருவார்கள். சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு இந்தப் படத்துக்கு வாய்ஸ் ஓவர் கொடுத்திருக்கிறார் என்பது முதல் அதிசயம். தொழில் ரீதியில் போட்டியாளராக இருக்கும் ஜூனியர் என்டிஆரின் படத்துக்கு இப்படி குரல் கொடுக்க ஒரு மனம் வேண்டும். என்னதான் சீனு வைட்யாலாவின் அடுத்தப் படத்தில் மகேஷ் பாபு நடிக்கப் போகிறார் என்றாலும், நடித்து வரும் படத்தை பண்டலா கணேஷ் தயாரித்து வருகிறார் என்றாலும் குரல் தானம் வழங்க முன்வந்தது பெரிய விஷயம்தான். அதே போல் நடிகர் சித்தார்த், ஓரிரு காட்சிகளில் தலை காட்டியிருக்கிறார். இது இரண்டாவது அதிசயம். நம்மூர் சிம்பு, தமன் இசையில் ஒரு பாடலை (தெலுங்கில்தான்!) பாடியிருக்கிறார். இது மூன்றாவது அதிசயம். இப்படி பல அதிசயங்கள் சர்வ சாதாரணமாக நிகழ்வதாலேயே ஆந்திர திரையுலகம் ஆரோக்கியமாக இருக்கிறது.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget