கோடையை கொழுத்த வரும் சோலார் ஸ்டார் ராஜகுமாரன்


அந்த ஸ்டார், இந்த ஸ்டார், நொந்த ஸ்டார் என்று எக்குத்தப்பாக எத்தனையோ பேர் தமிழ் சினிமாவைக் கலக்கிக் கொண்டிருக்கும் நிலையில் தேவயானியின் கணவர் ராஜகுமாரன் எழுதி, இயக்கி, நடித்து, கூடவே தயாரித்து, கஷ்டப்பட்டு சண்டை போட்டு, கலர் கலராய் சட்டை போட்டு நடித்து அசத்தியுள்ள திருமதி தமிழ் தமிழகம் முழுவதும் 360 தியேட்டர்களில் திரையிடப்படவுள்ளதாம். ராஜுவுக்கு புதுப் பட்டப் பெயரையும் சூட்டி மகிழ்ந்துள்ளது தேவயானி வட்டாரம்.
அதாவது இவருக்குப் பெயர் சோலார் ஸ்டாராம்.

படம் வரும் 19ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. படத்திற்கு 360 தியேட்டர் கிடைத்துள்ளதால் மகிழ்ச்சியில் இருக்கிறார் தேவயானி.

நீ வருவாய் என' , ‘விண்ணுக்கும் மண்ணுக்கும்', ‘காதலுடன்' ஆகிய படங்களை இயக்கிய ராஜகுமாரன் தயாரித்து, இயக்கி, நாயகனாக ‘திருமதி தமிழ்' படம் மூலம் அறிமுகம் ஆகிறார்.

ராஜகுமாரனுடன் தேவயானி, கீர்த்தி சாவ்லா, ரமேஷ் கண்ணா, லிவிங்ஸ்டன், கஞ்சா கருப்பு, ரோகினி, ராதாரவி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ஆஸ்தான இசை அமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமார் இந்தப் படத்திற்கும் இசையமைத்துள்ளார்.

படத்தின் நாயகன் ராஜகுமாரனுக்கு ‘சோலார் ஸ்டார்' என்று பட்டம் கொடுத்திருக்கிறார்களாம். அப்படிப் போட்டுத்தான் விளம்பரம் செய்கின்றனர். இந்தப் பட்டத்திற்காக ஒரு பரிசுப் போட்டியையும் கூட நடத்தியிருந்தனர் என்பது நினைவிருக்கலாம்.

திருமதி தமிழ் ரிலீஸ் ஆகும் நாள் ‘ராமநவமி' அதனால் சென்டிமென்ட் டச்சையும் சேர்த்து விட்டுள்ளார் தேவயானி. அதாவது "ஆடி பூரத்தில்....நீ வருவாய் என, ஸ்ரீ ராமநவமியில் "திருமதி தமிழ்".... என விளம்பரம் செய்கின்றனர்.

இது வரை 74 படங்களில் நடித்துள்ள தேவயானி, தனது கணவர் ஜோடியாக 75 வது படத்தில் நடிக்கிறார். இருவரும் இணைந்து நடிப்பது இதுவே முதல் முறையாகும்.

படம் தீயாக இருக்கிறது. டிரைலர் பார்த்தே தியேட்டரில் கைத்தட்டினார்கள் என்று கூறி வருகின்றனர் ராஜ குமாரன், தேவயானி.

திருமதி தமிழ் படத்திற்கு யூ சான்றிதழ் கொடுக்கப்பட்டிருப்பதால், வரி விலக்கு கண்டிப்பாக கிடைக்கும் என்று கூறி சந்தோஷப்படுகிறார் தேவயானி.

படத்திற்கு வரி விலக்கு கிடைப்பது இருக்கட்டும். படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு தலைவலி, உடல் வலி, மன வலி ஆகியவற்றிலிருந்து விலக்கு கிடைக்குமா என்பது குறித்து தேவயானி ஒன்றும் சொல்லவில்லை.

தமிழகம் முழுவதும் எங்கள் சொந்த பேனரான ராதே பிலிம்ஸ் நிறுவனம் மூலமாக 360க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது என்றும் மகிழ்ச்சியில் பூரிக்கிறார் தேவா. முதல்ல எத்தனை தியேட்டர்ல படம் போடுறோம் என்பது முக்கியமல்ல... கடைசியில எத்தனை தியேட்டர்ல அது ஓடுதுங்கறதுதான் முக்கியம்... (நன்றி சிம்பு தம்பி...)!!!

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget