நகச்சுற்று (Paronychia)

இவரின் நகக் கண் வீங்கி மஞ்சளாகிச் சினத்து வீங்கியிருப்பதை படத்தில் காண்கிறீர்கள். அவ்விடத்தில் சீழ் பற்றியிருக்கிறது. நகச்சுற்று எனத் தமிழில் சொல்வோம். ஆங்கிலத்தில் Paronychia என்பர். திடீரென ஏற்பட்டதால் Acute Paraonychia எனப்படும்

நகத்தின் வெளி ஓரமாகவோ அன்றி நகத்தைச் பக்கங்களிலும் உள்ள நகமடலின் தோலில் ஏற்படும் ஒரு வகை கிருமித் தொற்றுத்தான் நகச்சுற்று. அவ்விடம் வீங்கிச் சற்று சிவந்து கடுமையான வலியையும் ஏற்படுத்தும். தொட முடியாதளவு கடும் வலி ஏற்படலாம்.
இது ஒரு வகையில் சிறிய கட்டுப் (Abscess) போன்றதுதான். 
பின்னர் பழுத்து வரும்போது சற்று மஞ்சள் நிறமாக மாறும்.
பக்றிரியா, பங்கஸ், மற்றும் ஈஸ்ட் போன்ற கிருமிகள் தொற்றுவதால் ஏற்படுகிறது.
எவ்வாறு ஏற்படுகிறது?
நகம் கடிக்கும் பழக்கம் உள்ளவர்களிடையே ஏற்படுவது மிக அதிகம்.
கை சூப்பும் பழக்கம் உள்ள குழந்தைகளிடமும் ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம்.
 நகத்தை வெட்டும்போது சற்று ஆழமாக வெட்டி நகமடலைச் சேதமாக்குவதாலும் ஏற்படலாம். அவ்வாறான செய்கைகளின் போது ஏற்படும் சிறுகாயங்களில் கிருமி தொற்றிச் சீழ் பிடிப்பதால் இது ஏற்படுகிறது.
சமையல் வேலை, தோட்ட வேலை, தச்சு வேலை போன்ற காயம் ஏற்படக் கூடிய எந்த வேலைகளின் போதும் தற்செயலாக அவ்விடத்தில் ஏற்படும் சிறுகாயங்களில் கிருமி தொற்றி நகச்சுற்றை ஏற்படுத்தும்.
சில சருமநோய்களால் ஏற்படலாம். பெம்பிகஸ் (Pemphigus Vulgaris) போன்ற நோய்களால் சருமத்தின் மிருதுத்தன்மை பாதிப்படையும்போது அதில் கிருமித் தொற்று ஏற்பட்டும் வரலாம்.
நகத்தின் ஓரமாகச் சிலருக்கு தோல் வளர்ந்து நீட்டிக் கொண்டிருக்கும். இதனை ஆங்கிலத்தில் Hang Nail என்பார்கள். இதைப் பிய்த்து எடுக்க முயலும்போது அல்லது கத்தரியால் வெட்டும்போதும் காயம் பட்டுச் சீழ்பிடிக்கலாம்.

பொதுவாகக் காயம் ஏற்பட்டு 2 முதல் 5 நாட்களில் அவ்விடத்தில் வலி தோன்றும் பின்னர் முன் கூறியதுபோல சீழ்ப்பிடித்து வீங்கும்.

மருத்துவம்
வீட்டு மருத்துவமாக ஆரம்ப நிiலையில் வெந்நீரில் 10-15 நிமிடங்களுக்கு அமிழ்த்தி வைப்பதன் மூலம் சுகம் கிட்டலாம். தினமும் 3-4 தடவைகள் அவ்வாறு செய்யலாம்.
மருத்துவரிடம் சென்றால், கிருமியெதிர் மருந்துகளை (antibiotics) உபயோகிப்பதன் மூலம் ஆரம்பத்தில் குணப்படுத்த முடியும். சற்று அதிகமானால் அவ்விடத்தை மரக்கச் செய்வதற்கு ஊசி மருந்து போட்ட பின் கீறி சீழை அகற்றுவதன் மூலம் சுகப்படுத்தலாம்.
ஏற்படாமல் தடுத்தல்
நகத்திற்கு அருகாமையில் உள்ள மென்மையான இடங்கள் காயப்படாது தடுப்பதே இதைத் தவிர்க்க ஒரே வழியாகும்.
நகம் கடிப்பதை முற்றாகத் தவிருங்கள்.
நகத்தையும் அதைச் சுற்றியுள்ள சருமத்தையும் அக்கறையுடன் பேண வேண்டும்.
நகம் வெட்டும் போது அருகில் உள்ள சருமம் பாதிக்கப்படாதவாறு கவனமாக வெட்டுங்கள்.
குளித்த பின் நகங்கள் மென்மையாக இருக்கும்போது வெட்டுவதால் அருகில் உள்ள சருமம் பாதிக்கப்படாது.
நல்ல கூரான கத்தரிக்கை அல்லது நகவெட்டியை மட்டுமே உபயோகியுங்கள்.
கை நகங்களின் முனைப்பகுதி சற்று வளைவாகவும் கால் நகங்களினது நேராகவும் இருக்குமாறு வெட்டவும். 
நகங்களை ஒட்ட வெட்டுவது கூடாது.

பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget