யூனிட்டுகளுடன் இணைந்த இன்சூரன்ஸ் திட்டம் (Insurance schemes). இது இருவித பயன்களை தருகிறது. பெற்றோருக்கு பாதுகாப்பும்; அதே நேரத்தில் என்ன நோக்கத்திற்காக இந்த திட்டம் துவங்கப்படுகிறதோ அந்த நோக்கத்தையும் நிறைவேற்றி வைப்பதுமான இரண்டு பணி களை செய்கிறது. துரதிருஷ்டவசமாக பாலிசிதாரர் காலமானால், வாரிசாக நியமிக்கப் பட்டவருக்கு ஒரு மொத்த தொகை ஈடாக கிடைக்கிறது. இதோடு பாலிசி முடிந்து போவதில்லை; மாறாக இச்சம்பவத்திற்குப் பிறகும் பாலிசி தொடர்கிறது. எப்படி?
பிரிமியம் செலுத்துகிறவர் தான் காலமாகி விட்டாரே? யார் பிரிமியம் செலுத்துவது? கவலையை விடுங்கள்! பாலிசி தொடரும்!! ஆனால், தொடர்ந்து பிரிமியம் செலுத்த வேண்டியதில்லை. பாலிசியின் முடிவில், முதலில் ஒப்புக்கொண்டபடி, பணத்தை கொண்டு வந்து சேர்க்கிறது இத்திட்டம்.
சாதாரண திட்டங்களை விட இதன் பிரிமியம் சற்று அதிகம் என்பதை மறுப்பதற்கில்லை. இத்திட்டத்தின் காலம் 12 லிருந்து 15 வருடங்களுக்குள் இருக்கும்படி பார்த்துக்கொள்வது நலம். முகவர் நல்ல விபரம் தெரிந்தவரானால் பாலிசி குறித்த அனைத்து தகவல்களையும் உங்களுக்கு தெரிவிப்பார். முகவர்களிடம் பாலிசியின் அனைத்து பயன்களையும் தெளி வாக கேட்டு தெரிந்து கொள்வது அவசியம். பாலிசியை தொடர்ந்தால் மட்டுமே திட்டத்தின் முழு பலனுக்கும் நீங்கள் உரியவர்களாவீர்கள். இடையில் நிறுத்தி விடுவதானால், கிடைக்கும் பலனும் குறைவாகவே இருக்கும்.
அப்படியானால் சில வருடங்களுக்குப்பின் பாலிசியை நிறுத்தி விடலாம் என சில முகவர்கள் கூறுவது ஏன்? அப்படி ஒரு வசதியை திட்டம் தன்னுள் கொண்டுள்ளது உண்மைதான். அது பாலிசியை தொடர முடியாத அளவுக்கு தவிர்க்க முடியாத இடையூறு கள் ஏதேனும் பாலிசிதாரருக்கு ஏற்பட்டால் அப்போது பயன்படுத்திக்கொள்வதற்காக மட்டுமே.
இன்சூரன்ஸ் ஒன்று தான் சேமிப்புக்கு வழியா? வேறேதுமில்லையா? ஏனில்லை? இருக்கிறதே பரஸ்பர நிதி
பொதுவாக, இன்சூரன்ஸ் திட்டங்கள் (Insurance schemes) நீண்டகால முதிர்வு கொண்டவையாக இருக்கும். உங்கள் குழந்தைக்கு இப்போதே வயது 10 என்றால், கல்லூரிக்கு செல்ல இன்னும் 7 வருடங்களே உள்ளன. எனவே பணம் தேவைப்படும் காலம் வெகு அருகாமையிலேயே இருக்கிறது. அப்படியானால் இன்சூரன்ஸ் திட்டங்கள் உங்கள் நோக்கத்திற்கு பொருத்த மாக இருக்காது. இங்குதான் உங்கள் உதவிக்கு ஓடோடி வருகிறது பரஸ்பர நிதி. சுலபமானது; அதிக செலவில்லாதது; புரிந்து கொள்வது எளிது. முதலீட்டாளர் சற்று கட்டுப்பாடு குறைந்தவராக இருக்கும் பட்சத்திலும் கூட பரஸ்பர நிதி கடினம் காட்டுவதில்லை. பரஸ்பர நிதியை பொறுத்தவரை, சந்தை ஏற்றத்திலிருக்கும் போது முதலீடு செய்ய விரும்புவதும்; சரியும் போது விலகிக்கொள்ள முனைவதும், சகஜமாக, முதலீட்டாளரிடையே காணப்படும் ஒரு மனோபாவம். இது ஒரு சரியான அணுகு முறையல்ல. முறையாகவும் தொடர்ந்தும் முதலீடு செய்யுங்கள். ஷிமிறி எனப்படும் சிஸ்ட மேடிக் இன்வெஸ்ட்மெண்ட் ப்ளான் ஒரு சரியான திட்டம். நீங்கள் விரும்பும் முதிர்வு காலம் 5 லிருந்து 8 ஆண்டுகளெனில், பரவலான பங்கு முதலீட்டு நிதி திட்டம் (Diversified Equity Fund) அல்லது சரிவிகித வளர்ச்சி திட்டங்களை (Balanced Scheme) தேர்வு செய்யலாம்.
யூனிட் திட்டமானாலும் சரி, பரஸ்பர நிதி திட்டமானாலும் சரி உங்கள் பிரிமிய தொகை என்னென்ன இனங்களில் முதலீடு செய்யப்படுகின்றன என்பதை உற்று கவனியுங்கள். ஆரம்ப காலங்களில் பங்கு முதலீடுகளிலும் திட்ட காலம் முதிர்வை நெருங்கும் போது கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்யத்தக்க திட்டங்களை தேர்ந்தெடுங்கள்.
முடிவாக, குழந்தை எப்போது மேற்படிப்புக்கு செல்ல வேண்டி வரும் என்பதை அறிந்து அதற்கு ஏற்றபடி முதிர்வடையும் திட்டங்களை தேர்ந்தெடுங்கள். நோக்கத்தை அடைய வேண்டிய இலக்காக கருதி, கட்டுக்கோப்பான முறையில் சேமிக்க பழகிக்கொள்ளுங்கள். சேமித்தால் உங்கள் குழந்தையின் கல்வி அப்படி ஒன்றும் கடினமில்லை.