ஆந்திராவிலுள்ள நெல்லூரில் வசிக்கும் ஒரு நாடக நடிகரின் குடும்பத்தினர், தன் மகளை ஒரு நாடக நடிகையாக்கி பார்க்க ஆசைபடுகிறார்கள். ஆனால் அவள் நாடக வாழ்க்கையில், வாய்ப்புகள் மறுக்கப்பட்டு அவமானப்படுத்தப்படுகிறாள். இதனால் கோபமடைந்த அவள் அம்மா, தன் மகளை மிகப்பெரிய நடிகையாக்கி காட்டுகிறேன் என்று சபதம் போடுகிறாள்.
இதனால் தன் மகள் சோனியாவுடன், சென்னைக்கு புறப்பட்டுச் செல்கிறாள். இவர்கள் கூடவே சோனியாவின் தாய்மாமனும் செல்கிறார். பிறகு வறுமையை வென்று முன்னணி கதாநாயகி ஆகிறாள். இதனால் பணம் கையில் புரளுவதால் சோனியாவின் அம்மா மிகுந்த சந்தோஷத்தில் ஆர்ப்பரிக்கிறார். ஆனால் சோனியாவோ தன் வாழ்க்கையை தொலைத்த விரக்தியில் இருக்கிறார்.
சினிமா உலகில் இவர்கள் இருவரும் சந்தித்த போராட்டங்கள் என்னென்ன..? இறுதியில் சோனியா அகர்வால் என்ன ஆனார்..? என்பது தான் மீதி கதை.
படத்தின் நிறை - குறைகள் :
இப்படி ஒரு கதையில் நடித்திருப்பதற்கு முதலில் பாராட்டை பெற வேண்டியர் சோனியா அகர்வால். எப்போதும் தன் முகத்தில் ஒரு சோகத்தை வைத்திருப்பது, சோனியாவின் கதாபாத்திரத்திற்கு கனகச்சிதமாக பொருந்துகிறது. சோனியாவின் அம்மாவாக ஊர்மிளா தன் கதாபாத்திரத்தை வெளுத்து வாங்குகிறார். இவருடைய நடிப்பு மிகப்பிரமாதம். ஆர்ட்டிஸ்ட் கோ-ஆர்டினேட்டராக கஞ்சா கருப்பு, நடிக்க வரும் பெண்களை பக்குவப்படுத்தும் ஜோதி லட்சுமி, பைனான்சியரின் சின்ன வீடாக கோவை சரளா இவர்கள் தங்களுடைய கேரக்டர்களை அப்படியே நிறைவேற்றியிருக்கிறார்கள்.
ஆதிஷ் பின்னணி இசை படத்திற்கு சுமார் ரகம் தான். சோனியா மற்றும் ஊர்மிளா இவர்களின் திரைக்கதையில் கொஞ்சம் தடுமாறியிருந்தாலும், கதை ஆபாசமாகிவிடும் என்று பாராமல், திரைக்கதையை கையில் எடுத்திருக்கிறார் இயக்குனர் ராஜ்கிருஷ்ணா.
சினிமா துறையில் இருக்கும் தவறான மனிதற்களை மட்டுமே காட்டியிருக்கும் இயக்குனர், நல்ல மனிதர்களையும் காட்டியிருந்தால் கொஞ்சம் நியாயமாக இருந்திருக்கும்.