ஐ.நா., சிறப்பு கூட்டத்தில் பேச இருந்த நடிகை குஷ்பு, தனது மாமியாருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் ஐ.நா., பயணத்தை ரத்து செய்துள்ளார். இளைஞர்களின் தன்னிகரற்ற திறமையை வெளிக்கொணர வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஐ.நா. சபை சார்பில், கென்யாவில் உள்ள நைரோபியில் வருகிற மார்ச் 15ம் முதல் 18ம் தேதி வரை சிறப்புக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் நடிகை குஷ்பு கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. குஷ்புவும் கலந்து கொண்டு உரையாற்ற இருந்தார். இந்நிலையில்
திடீரென தனது பயணத்தை ரத்து செய்து இருக்கிறார் குஷ்பு.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, குடும்பச் சூழல் காரணமாக ஐ.நா., கூட்டத்திற்கு செல்ல முடியவில்லை. எனது மாமியாருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த வாரம் தான் அவருக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதனைத்தொடர்ந்து வருகிற 15ம் தேதி இருதய அறுவை சிகிச்சை நடைபெற இருக்கிறது. இந்தச்சூழலில் ஐ.நா. சபை மாநாட்டிற்கு செல்வது என்பது இயலாத காரியம். அதனால் என்னால் போக முடியவில்லை. இதுதொடர்பாக ஐ.நா., சபைக்கும் கடிதம் அனுப்பிவிட்டேன். இதுபோன்று நிறைய வாய்ப்புகள் எதிர்காலத்தில் வரலாம், ஆனால் மாமியார் அப்படி இல்லை. உடல்நலம் சரியில்லாமல் இருக்கும் அவரை பக்கத்தில் இருந்து கவனிப்பது தான் இப்போது எனக்கு முக்கியம் என்று கூறியுள்ளார்.