அரவான் - திரை விமர்சனம்


உழவைத் தொழிலாகக் கொண்ட தாய்வழிச் சமூகமான தமிழர்களில், களவை மட்டுமே தொழிலாகக்கொண்டு வாழ்ந்த ஒரு கூட்டத்தின் கதையை வரலாறாக சித்தரிக்கும் முயற்சி இந்த அரவான். ஒரு களவுக் கூட்டத்தின் நடைமுறையான நரபலியே பின்னர் மரண தண்டனையானதாகவும், அதை பின்னர் பிரிட்டிஷார் ஒழித்ததாகவும், அப்படியும் இன்னும் 83 நாடுகளில் மரணதண்டனை நீடிக்கிறதே
என்ற ஆதங்க நீட்சியாகவும் இந்தப் படம் முடிகிறது. இயக்குநர் இரண்டரை மணிநேரம் சொன்ன களவுக் கதைக்கும், இந்த கடைசி நிமிடத்து டைட்டில் மெஸேஜுக்குமான தொடர்பைக் கண்டுபிடிக்க தனி வரலாற்றுப் படமெடுப்பார்கள் போலிருக்கிறது!


சின்னவீரம்பட்டி என்றொரு மலைக்கிராமம். பக்கத்து கிராமத்தான் ஒருவன் இந்த ஊரில் மர்மமாகக் கொல்லப்பட, இந்தக் கொலைக்கான காரணம் தெரியாததால், இரு கிராம மோதலைத் தவிர்க்க, பலியான உயிருக்கு பதிலுயிர் தர சின்னவீரம்பட்டி முடிவு செய்கிறது.


கிராமத்தின் காவல்காரன் ஆதிதான் இந்த பலியாள் என்று முடிவாகிறது. பலிபீடத்தில் பூஜையெல்லாம் செய்து பலியாளுக்கு 30 நாள் கெடு வைக்கிறார்கள். இருக்கிற 30 நாளில் இந்தக் கொலையின் உண்மையான பின்னணி தேடிப் புறப்படுகிறார் ஆதி. இடையில் காதலியுடன் கல்யாணமும் நடக்கிறது.


கொலையாளி யாரென்பது தெரிந்து, அவனை ஊர்மத்தியில் நிறுத்த அழைத்து வரும்போது, அருவியில் குதித்து செத்துப்போகிறான். அவனைப் பின்தொடர்ந்து குதிக்கும் ஆதிக்கு கால் முறிந்துவிட, குறித்த நாளில் பலிபீடத்துக்கு வரமுடியாமல் போகிறது.


ஊர் கொந்தளிக்கிறது. ஆதிக்கு பதில் அவன் நண்பனை பலிகொடுத்து, பக்கத்து ஊர் கோபத்தைத் தணித்தாலும், ஆதியால் ஏற்பட்ட அவமானத்துக்காக அவனைக் கண்டதும் பலியெடுக்க உத்தரவாகிறது.


இதெல்லாம் தெரியாத ஆதி, உயிர்பிழைத்து இரவில் ரகசியமாய் வீட்டுக்கு வருகிறான். உண்மை புரிந்து தன்னை ஒப்படைக்கப் போகும்போது, மனைவியும் மாமனாரும், ஒரு பத்தாண்டுகள் தலைமறைவாக இருந்துவிட்டால், ஊர்தண்டனையிலிருந்து தப்பிக்கலாம் என்கிறார்கள். உயிர்வாழும் ஆசையில் மீண்டும் தலைமறைவாகி, கொள்ளையடித்து வாழ்க்கையை ஓட்டுகிறார் ஆதி.


ஒரு களவின்போதுதான் பசுபதியிடம் சிக்கி நட்பாகிறார். ஒருகளவில் பசுபதியின் உயிரைக் காத்து நெருக்கமாகிறார். ஒருகட்டத்தில் தன் பிளாஷ்பேக்கைச் சொல்கிறார் ஆதி. ஆனால் எதிர்பாராமல் குறித்த காலம் முடிவதற்குள் தன் ஊர் ஆட்களிடம் சிக்கிக் கொள்கிறார் ஆதி.


ஊர்முடிவுப் படி பலியாகிறாரா? உண்மை அவரைக் காப்பாற்றுகிறதா என்பது க்ளைமாக்ஸ்.


இந்தப் படத்துக்கான காரணம், எதை முன்னிறுத்த அல்ல நிலைநாட்ட இந்த முயற்சி என்பது இயக்குநருக்கும் எழுதியவருக்குமே வெளிச்சம். களவுக்கு வரலாற்றுச் சாயம் பூசி தமிழரை அசிங்கப்படுத்த வேண்டாம். 


களவை எப்படி செய்தார்கள், கன்னம் எப்படி வைத்தார்கள், களவாடிகளின் பெருந்தன்மை, கொள்கைகள் போன்றவற்றையெல்லாம் மிகமிகத் துல்லியமாக ஆவணப்படுத்துவதில் காட்டிய சிரத்தையை, சுவாரஸ்யமான சம்பவங்கள், களவு சமூகத்தின் இழிநிலையை முன்னிலைப்படுத்துவதிலாவது காட்டியிருக்கலாம்.


இந்த 'வரலாற்றுப் பெருமை'யை வசந்தபாலனும் அவரது அருமை எழுத்தாளருமே வைத்துக் கொள்வது நல்லது... கொள்ளை, கொலை, வழிப்பறி, கழுத்தறுப்பு என ஏற்கெனவே சகல ஒழுங்கீனங்களும் நிறைந்த இந்தத் தலைமுறைக்கு வேண்டாம்!


படத்தில் நிறைய பாத்திரங்கள். ஒவ்வொருவரும் 100 ரூபாய் கொடுத்தால் 1 லட்ச ரூபாய்க்கு நடித்திருக்கிறார்கள். குறிப்பாக பசுபதியும் கரிகாலனும். தெருக்கூத்து எஃபெக்ட்!


இவர்களில் ஆதி கச்சிதமாகச் செய்திருக்கிறார். தெலுங்கு வாடை வீசும் அந்த பாளையக்கார மன்னரும் நன்றாக நடித்துள்ளார்.


தன்ஷிகா, அஞ்சலி, பரத் ஆகியோர் வசந்தபாலன் ஆட்டுவித்தபடி ஆடியிருக்கிறார்கள்.


சிங்கம்புலியிருக்கிறார். ஓரிரு காட்சிகளில் அவரையும் தனித்துத் தெரியும்படி காட்டியிருக்கிறார்கள்.


படத்தின் முக்கிய பலவீனம் இசையும் ஒளிப்பதிவும். ஒரு காட்சியின் பரிமாணத்தை அதிகப்படுத்தத்தான் பின்னணி இசை. இல்லாவிட்டால் மவுனமே அங்கு சிறந்த இசை. கார்த்திக்கு இந்த மவுனத்தைக் கூட சரியாகப் பயன்படுத்தத் தெரியவில்லை. திருவிழா, பலிபீடக் காட்சிகள், பரத்தின் சாவு என எதிலுமே அழுத்தமான உணர்வு வராமல் போகக் காரணம்... சாட்சாத் கார்த்திக்தான். முதல் படத்திலேயே இத்தனை வலுவான குற்றசாட்டுகளை வைக்க தயக்கமாக இருந்தாலும்... உண்மை அதுதான்.


நிலா நிலா போகுதே... ஓகே. 


சித்தார்த்.. இயற்கையின் வண்ணத்தை கெடுத்துவைப்பதுதான் நவீன ஒளிப்பதிவின் இலக்கணம் என யாரோ இவருக்கு தப்புத் தப்பாக சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்போல. எந்தக் காலமாக இருந்தாலும் இயற்கையின் வண்ணம் ஒன்றுதான். கறுப்புக் கண்ணாடியை கழட்டி வைத்துவிட்டு ஒளிப்பதிவு செய்யப்பா!


படம் கிட்டத்தட்ட நத்தை வேகத்தில் நகர்கிறதே... கொஞ்சம் கத்தரி போடலாம் என்ற சிந்தனையே இல்லாமல் வேலைபார்த்திருக்கிறார்கள் படத்தின் எடிட்டர்கள்.


தொழில்நுட்ப ரீதியில் உச்சமாக எடுத்துவிட்டதாக நினைத்து கோட்டைவிட்டிருப்பது பல காட்சிகளில் தெரிகிறது.


வசந்த பாலன் நல்ல இயக்குநர்தான்... நல்ல சினிமா தரவேண்டும் என்ற ஆறாத தாகம் கொண்டவர்தான். தன்னை வருத்திக் கொண்டு படமெடுப்பதிலும் அவர் சிறந்தவரே. ஆனால் நினைவிருக்கட்டும், தன்னைத் தானே வருத்திக் கொண்டு சினிமா பார்க்க வேண்டும் என்ற தலையெழுத்து ரசிகனுக்கு இல்லை!

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget