பேட்டில்ஷிப் (கடல்யுத்தம்), அதிரடியான வீடியோ கேம். அதே விறுவிறுப்போட படமாகவும் வந்திருக்கு. ஹூப்பர்னு ஒரு ஜாலி பேர்வழி. கடற்படையில் இருக்கற தன் அண்ணன் பேச்சை கேட்காம மனம்போன போக்குல ஊரை சுத்தி வம்பு இழுத்துட்டு, கடற்படை ஆபிஸர் பெண்ணுக்கே நூல் விட்டு, கெட்ட பேரை லிட்டர் கணக்குல வாங்கிட்டிருக்கான். அவரை வழிக்கு கொண்டு வர அவனையும் கடற்படையில் சேர்த்துவிடுறான் அண்ணங்காரன். அந்த நிமிஷத்துல இருந்து ஆரம்பிக்குது கடல் யுத்தம்.
பூமி மாதிரியே இருக்கிற ஒரு கிரகத்தை நாசா கண்டுபிடிச்சு அதுக்கு ப்ளானெட் ஜினு பேர் வைச்சு பூமியில இருந்து சிக்னல் அனுப்புறாங்க. ஒருநாள் அந்த கிரகத்துல இருந்து 5 விண்வெளிக் கப்பல்கள்ல வேற்றுக் கிரகவாசிகள், ஹூப்பர் கோஷ்டி பயிற்சி செய்ற அதே பசிபிக் பெருங்கடல்ல வந்து இறங்குறாங்க. வந்த கையோட, கடலுக்குள்ளே அவங்களை சுத்தி பாதுகாப்பு வளையத்தை உருவாக்கி வைக்கிறாங்க. இந்த வளையத்துக்குள்ளே பயிற்சியில் இருந்த ஹூப்பர் அவர் அண்ணன் உட்பட ஏகப்பட்ட வீரர்கள் போர் கப்பல்களோட மாட்டிக்கிறாங்க. அதிநவீன தொழில்நுட்ப வசதியோட இருக்கற எதிரிகள்கிட்ட சிக்கி ஹூப்பரோட அண்ணன் இறந்து போக, மத்தவங்க கதி என்ன? ஹூப்பரும், பூமியும் பிழைச்சாங்களா...?ங்கறது மீதி கதை.
பேட்டில்ஷிப் ஒரு பிரபலமான வீடியோ கேமோட கதைங்கறதால, மேலே சொல்லியிருக்கிற மொத்த கதையும் ரெண்டு மூணு காட்சியில் முடிஞ்சுபோயிரும். அப்புறம் படம் முழுக்க சண்டைதான். என்ன... விளையாட்டுல ஒவ்வொரு ஏலியனையும் நாம சுடுவோம். இங்கே நமக்கு பதிலா ஹீரோ ஹூப்பரும், மத்தவங்களும் சாகடிக்கிறாங்க. பிரம்மாண்டமான போர் கப்பல்கள், ஏவுகணைகள், வேற்றுக்கிரகவாசிகளோட ராட்சத இயந்திரங்கள், சக்கர உலோக உருளைகள்னு படம் முழுக்க வர்ற போர் இயந்திரங்களை பார்த்து ஆச்சரியத்துல திறந்த நம்ம வாயை கடைசிவரை மூட முடியலை! இந்த பரபரப்பான சண்டைக்கு நடுவுலேயும், காதல், சென்டிமென்ட், காமெடின்னு சுவாரஸ்யம் சேர்ந்து கலந்து கட்டி அடிச்சு நம்மளை சீட்டோ கட்டிப்போடுறாங்க.
பேட்டில்ஷிப்(கடல்யுத்தம்) - விறுவிறுப்பான விளையாட்டு