நடிப்பு: வாசகர், தேவதை, வளவன், முரா, அப்புக்குட்டி
தயாரிப்பு: அ திரை
இயக்கம்: கீரா
இசை: அரிபாபு
ஒளிப்பதிவு: அன்பு ஸ்டாலின்
எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாம பார்க்க வேண்டிய படம். ஆனா, பல இடங்கள்ல நம்மளை ரசிச்சு சிரிக்க வைக்கிற படம் "பச்சை என்கிற காத்து".
தேனி மாவட்டம் செட்டிக்குளம் தான் கதைக்களம். வேலைக்கு போறது குலதெய்வத்துக்கு ஆகாது ன்னு சொல்லி, வெட்டித்தனமா ஊருக்குள்ள சுத்திட்டு இருக்கிற இளவட்டம் பச்சைக்கு(வாசகர்), பூ விற்கிற செல்வி(சரண்யா) மேல காதல். காதலி முன்னாடி அடிக்கடி சீன் போட்டுக்கிட்டே சுத்தற பச்சை ஒருநாள் ஒரு அரசியல் கட்சி தலைவனை செருப்பால அடிக்கிறான். டென்ஷன் ஆன தலைவர் உன்னை தீர்க்கறேன்டா!ன்னு சவால் விட்டுட்டு கிளம்புறான். ஆனா எதைப்பத்தியும் கவலைப்படாத பச்சைக்கு இன்னொரு கட்சி ஆதரவுக்கரம் நீட்ட... கட்சியில சும்மா காத்து மாதிரி நுழைஞ்சு கலக்குறான். கட்சி மூலமா காத்துங்கற பேர் கிடைக்குது. கட்சிக்கிட்ட பேர் வாங்கின பச்சை அவனோட காதல்ல ஜெயிச்சானா...? சவால்விட்ட தலைவன் கிட்ட இருந்து பொழைச்சானா...?ங்கறது மீதி கதை.
படம் எப்படி இருந்தா என்ன? அடிக்கிற வெயிலுக்கு இரண்டரை மணிநேரம் ஏசி-யில உட்கார்ந்துட்டு போகலாம்!ங்கற உயர்ந்த லட்சியத்தோடு வர்ற தமிழ் ரசிகர்களை இடைவேளை வரை சிரிக்க வைக்குது பச்சையோட பளிச் நடிப்பும், நகைச்சுவையான பேச்சும். சைட் அடிக்கிறதுக்கு முன்னாடியும், தண்ணி அடிக்கிறதுக்கு முன்னாடியும், தகப்பனை அடிக்கிறதுக்கு முன்னாடியும் மனிதன் வாழ்க்கையில் ஜாலியாக இருக்க வேண்டும் அதைத்தானே நான் செய்து கொண்டிருக்கிறேன்! ன்னு பஞ்ச் வைச்சு தன் ஸ்கோரை ஆரம்பிக்கிற பச்சை அதுக்கப்புறம் சிக்குன பந்தையெல்லாம் சிக்ஸருக்கு விரட்டுறாரு. உதாரணத்துக்கு தன் காதலி படிக்கிற கிறித்துவ பள்ளிக்கூடத்துக்குள்ள அத்துமீறிப் போய் கர்த்தர் அழைத்தார்... காற்றாய் வந்தேன்!ன்னு கலாய்க்கிற போதும், தமிழ் பரிட்சை எழுதிட்டு இருக்கற தன் காதலிக்கு மைக் செட் போட்டு கோனார் நோட்ஸ் வாசிச்சு உதவி செய்றபோதும் பச்சையோட நடிப்புல அப்படி ஒரு வசீகரம். படம் நல்லாத்தான்யா இருக்கு! ரசித்து மகிழ்கிறது திரை அரங்கம். ஆனா... எல்லாமே இடைவேளை வரைக்கும்தான்.
இடைவேளைக்கு அப்புறம்... படத்தை பத்தி அதுவரைக்கும் நாம நினைச்சதை மறுபரிசீலனை பண்ண வைக்கிறாரு டைரக்டர் கீரா. க்ளைமாக்ஸ்... அப்படி ஒரு வறட்சி! ஆனாலும்... இசையமைப்பாளர் ஹரிபாபுவின் மீசை இல்லாத சூரப்புலி... நான் உன்னை பார்த்தேன்... பாடல்களில் உள்ள குளுமையிலும், தென்பகுதி மக்களின் நக்கல், நையாண்டி கலந்த வாழ்க்கை முறையை சொன்ன அழகிலும் மனம் நிறைகிறது.