எழில் மிகு கர வருடம் நிறைவடைந்து புதிய தமிழ் வருடமான நந்தன வருடம் பிறந்துள்ளது. 13.4.2012 வெள்ளிக் கிழமை மாலை மணி 5.37க்கு கிருஷ்ண பட்சத்து அஷ்டமி திதி, உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதம், தனுசு ராசி கன்னியா லக்னம் 4-ம் பாதத்தில், நவாம்சத்தில் சிம்ம லக்னம் தனுசு ராசியில், சித்தி நாம யோகத்தில் கௌலவம் நாம கரணத்தில், சித்தயோகம், நேத்திரம், ஜீவனம் கூடிய நன்னாளில் பஞ்சபட்சியில் பகல் கடைசி சாமத்தில்
கோழி பலமிழந்த நேரத்தில் சூரிய தசையில், சந்திர புக்தியில், சனி அந்தரத்தில், குரு ஓரையில் நந்தன வருடம் சீரும் சிறப்புமாக பிறந்துள்ளது.
இந்த வருடம் இப்படித்தான்;
நந்தன வருஷத்திய பலன் வெண்பா
"நந்தனத்தில் மாரியாறு நாடெங்கும் பஞ்சமிகும்
நந்துமூயிர் நோயா னலியுமே - அந்தரத்தின்
மீனு திருந் தூமமெழு மிக்க கெடுதியுண்டாம்
கோன் மடிவா னென்றே நீ கூறு."
மேற்கண்ட வெண்பாவின் படி உலகெங்கும் அதிக மழைப் பொழிவால், ஆறுகள் பெருக்கெடுத்து ஓடி பயிர்கள் வெள்ளத்தால் சூழப்பட்டு உணவு பற்றாக்குறை ஏற்படும். புதிய நோய்களால் உயிர் சேதம் அதிகரிக்கும். ஆகாயத்தில் நட்சத்திரக் கூட்டங்கள் இடம் மாறும் அல்லது நட்சத்திரங்களில் காந்தப் புயல் வீசக்கூடும். வால் நட்சத்திரம் அல்லது புதிய நட்சத்திரம் வானத்தில் தெரியும். அதனால் கெடுதல் உண்டாகும். ஆட்சியாளர்களுக்கு ஆயுள் கண்டம் உண்டாகும் என்று சித்தர் பெருமான் இடைக்காடர் சூசகமாகக் கூறியுள்ளார்.
நந்தன வருடத்தின் மிக முக்கிய பதவிகளை சுக்ரனே ஏற்கிறார். ராஜாவாக, மந்திரியாக, அர்க்காதிபதியாக, மேகாதிபதியாக வருவதுடன் சேனாதிபதியாகவும் அசுரர்களின் தலைவன் சுக்ராச்சாரியே பொறுப்பேற்கிறார். ராஜாவாக சுக்ரன் வருவதால் ஜனநாயகம் தழைக்கும். ஆண்களுக்கு ஈடு இணையாக செயல்படுவதுடன், ஆண்களையும் தாண்டி பல துறைகளிலும் பெண்கள் சாதிப்பார்கள். மக்கள் ஆடம்பர வாழ்வை விரும்புவார்கள். நவீன குடியிருப்புகள், நவீன வர்த்தக மையங்கள், அதிகம் உயரம் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் உருவாகும். மகளிருக்கு முக்கியத்துவம் தரக்கூடிய நலத்திட்டங்கள் ஆள்பவர்களால் கொண்டு வரப்படும். வரதட்சணைக் கொடுமை, விவாகரத்துகள் படிபடியாக குறையும்.
அதிவேகமாக செல்லக் கூடிய பேருந்துகள், ரயில்கள், வாகனங்கள் அறிமுகமாகும். இரும்பு, கம்பி, ஜல்லி, சிமெண்ட், மணல் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை உயரும். வீட்டின் விலையும் அதிகரிக்கும். டீசல், பெட்ரோல், சமையல் எரிவாயு பற்றாக்குறை ஏற்படும். கம்ப்யூட்டர் துறை தொடர்ந்து வளர்ச்சியடையும். ஆள்பவர்கள் மக்கள் மீது அனைத்து வகைகளிலும் வரிகளை சுமத்துவர். விலைவாசி ஏற்றத்தால் மக்கள் அதிருப்தி அடைவார்கள். 25.5.2012 முதல் 2.7.2012 வரை சுக்ரன் வக்ரமாவதால் திரைத்துறை பாதிக்கும். 14.8.2012 முதல் மின்வெட்டு படிப்படியாக குறையும். மின் உற்பத்தி அதிகரிக்கும்.
மந்திரியாகவும் சுக்ரன் வருவதால் இரண்டாம் தர அதிகார மையங்கள், நிழல் உலக தாதாக்கள் கை மீண்டும் ஓங்கும். சாதாரணமானவர்கள் பெரிய பதவியில் அமருவார்கள். பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுக்க புது சட்டம் வரும். மத்தியில் எதிர்கட்சிகள் வலுவடையும்.
அர்க்காதிபதியாகவும் சுக்ரன் வருவதால் ஆடை, பொன் ஆபரணங்கள் விலை உயரும். வெள்ளி விலையும் அதிகரிக்கும். மொத்த வியாபாரம் செய்பவர்கள் பாதிப்படைவார்கள். உணவுப் பதுக்கலுக்கு எதிராக கடும் சட்டம் வரும்.
சஷ்யாதிபதியாக சந்திரன் வருவதால் தட்பவெப்ப நிலை அடிக்கடி மாறும். வெயில், மழை, குளிர் எதுவாக இருந்தாலும் அதிகமாக காணப்படும். ஆறு, குளம், அணைக்கட்டு ஆகியவை சீர்திருத்தம் செய்யப்படும். அதிக மழைப் பொழிவால் நீர் தேக்கங்கள், பயிர்கள் சேதமடையும். புண்ணியத் தலங்கள் புதுப்பிக்கப்படும்.
சேனாதிபதியாக சுக்ரன் வருவதால் தீவிரவாதிகளை ஒடுக்க கடும் சட்டம் வரும். ராணுவத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்படும். நவீன ஆயுதங்கள், ஏவுகணைகள் இராணுவத்தில் சேர்க்கப்படும். இந்தியாவின் அண்டை நாடுகளில் கலவரம் தொடரும். என்றாலும் அண்டை நாடுகளின் அச்சுறுத்தலுக்கு பதிலடி கொடுக்கும். சந்திரனுக்கும், சுக்ரனுக்கும் புதிய செயற்கை கோள்கள் ஏவப்படும். சுனாமி, நிலநடுக்கம் இவற்றை முன்னரே அறிய செயற்கை கோள்கள் துணை புரியும்.
மேகாதிபதியாக சுக்ரன் வருவதால் உலகெங்கும் கனமழைப் பொழியும். நிலப்பரப்புகள் மற்றும் குடியிருப்புகள் பல நீரால் சூழப்படும். வெள்ளப் பாதிப்பால் பொருட்சேதம், உயிர்சேதம் அதிகரிக்கும்.
தான்யாதிபதியாக சூரியன் வருவதால் வெள்ளை நிற தானியங்கள் அதிகம் விளையும். என்றாலும் வெள்ளப் பெருக்கால் அரிசி விலை உயரும்.
இந்தாண்டு வெள்ளிக் கிழமையில் பிறந்திருப்பதாலும் ஆடி மாதம் 5-ம் தேதியும் வெள்ளிக் கிழமையில் வருவதாலும் உலகெங்குமுள்ள அணைகள் நிரம்பும். காடுகள் செழிக்கும்.
வங்கிகளில் வாராக்கடனை வசூலிக்க சட்டங்கள் கடுமையாக வரும். கல்வித்துறையில் 12.09.2012 முதல் குழப்பங்கள் தீரும். ஆனால் ஆசிரியர்கள் நியமனத்தில் பிரச்னைகள் வெடிக்கும். உள்நாட்டு வியாபாரங்கள் வெகுவாக பாதிக்கும். அயல்நாட்டில் வேலைப் பார்ப்பவர்கள் தாய்நாட்டிற்கே திரும்ப வேண்டிய சூழல் உருவாகும். வாகன விபத்துகள் அதிகரிக்கும்.
23.6.2012 முதல் 14.8.2012 ; 12.9.2012 முதல் 27.9.2012 வரை சனியும், செவ்வாயும் சேர்ந்திருப்பதாலும் 28.9.2012 முதல் 6.12.2012 வரை செவ்வாயும், ராகுவும் சேர்ந்திருப்பதாலும் 17.10.2012 முதல் 15.11.2012 சூரியனும், சனியும் சேர்ந்திருப்பதாலும் 2.12.2012 முதல் 13.4.2013 வரை சனியும், ராகுவும் சேர்ந்திருப்பதாலும் இக்காலக்கட்டங்களில் கலவரம், சாலை விபத்துகள், நிலநடுக்கம், கனமழை உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள், பிரபலங்களின் உயிரிழப்புகள், புது நோய்கள் உருவாகுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
பொதுவாக இந்த நந்தன ஆண்டு இயற்கை சீற்றங்கள் மற்றும் செயற்கை விபத்துகளால் மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தினாலும் ஆன்மீக பலத்தால் எங்கும், எதிலும் மகிழ்ச்சியும் தங்கும்.