விண்மீன்கள் திரை விமர்சனம்!


மூளை வளர்ச்சி குன்றிய குழந்தையாகப் பிறந்து, தன் தந்தையின் உதவியுடன் வாழ்க்கையை எதிர்கொண்டு, சொந்தக் காலில் நிற்க முயலும் ஒரு இளைஞனின் வாழ்க்கையை அழகாகவும் ஆழமாகவும் வெளிப்படுத்தியிருக்கும் படம் "விண்மீன்கள்'.
மேஜிக் கலைஞன் நரேன், அவன் மனைவி மீரா இருவரும் தங்களுக்கு பிறக்கப் போகும் குழந்தையைப் பற்றிய வண்ணக் கனவுகளில் திளைத்திருக்க, மூளைக்குறைபாடுடன்
(செரிபரல் பால்ஸி) பிறக்கிறது அந்த ஆண் குழந்தை. இது போன்ற குழந்தைகளை வீட்டில் வளர்ப்பது கடினம் என்றும், இவ்வகைக் குழந்தைகளுக்கென இருக்கும் இல்லத்தில் ஒப்படைத்துவிடலாம் என்றும், பிரசவம் பார்த்த மருத்துவர் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் இத்தம்பதி பிடிவாதமாக தாங்களே குழந்தையை வளர்க்க முற்படுகின்றனர்.
ஜீவா எனப் பெயரிடப்படும் அந்தக் குழந்தை வளர்ந்து வாலிபனாகி மலை வாசஸ்தலம் ஒன்றில் ஆசிரியர் பணிக்குச் செல்கிறான். அங்கு அவனுடன் பழகும் நிலா என்ற பெண் அவனுக்குள்  காதல் மலரக் காரணமாக இருக்கிறாள். அந்தக் காதலை முதலில் நிலா ஏற்க மறுத்தாலும் போகப் போக ஜீவாவை நேசிக்கத் தொடங்குகிறாள். இருவரும் இணைந்தார்களா இல்லையா என்பதை படத்தின் இறுதிப் பகுதி விவரிக்கிறது.
இப்படிப்பட்ட ஒரு கதையை தன் முதல் படத்துக்காக தேர்வு செய்த இயக்குநர் விக்னேஷ் மேனனின் துணிச்சலை முதலில் பாராட்ட வேண்டும். அதுவும் அதிக அனுபவமில்லாத புதிய கலைஞர்களை அழுத்தமான பாத்திரங்களில் திறம்பட நடிக்க வைத்து தனது முதல் படத்திலேயே நம் கவனத்தை ஈர்த்து விட்டார் இயக்குநர்.
வெறும் ஜடமாகத்தான் வளர்வான் என்று டாக்டரால் சொல்லப்பட்ட தங்கள் குழந்தையுடன் நரேன் மீரா சோகத்துடன் அமர்ந்திருக்க "பவர் கட்' ஏற்படுகிறது. உடனே ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வரும் நரேன் குழந்தைக்கு முன் அதை இப்டியும் அப்படியுமாக நகர்த்த குழந்தையின் விழிகள் அந்த ஒளியைப் பார்த்து அது செல்லும் திசையில் நகர்வதும் நரேன் உற்சாகமாகமடைவதும் ரசிக்கத் தக்க காட்சி. இதன் பிறகு பரிவு, பாசத்துடன் நம்பிக்கையையும் ஊட்டி தன் மகனை வளர்க்கிறான் நரேன்.
தன் மகனிடம் தான் கொண்ட நம்பிக்கையை மற்றவர்களிடம்-குறிப்பாக பள்ளியில் சேர்க்க மறுக்கும் பிரின்சிபாலிடம்-ஏற்படுத்தும் தந்தை வேடத்தில் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் விஷ்வா. மீராவாக வரும் ஷிகாவும் ஆழமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அதிலும் கணவனுக்கு "மைல்ட் ஹார்ட் அட்டாக்' என்ற டாக்டரின் ரிப்போர்ட்டைப் பார்த்து விட்டு, மகனை ஓட்டப் பந்தயத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டாம் என்று தடுக்கும் காட்சியில் சோபிக்கிறார்.
மற்றும் ஒரு முக்கிய வேடத்தில் வரும் பாண்டிய ராஜனும் குணச்சித்திர வேடத்தில் மிளிர்கிறார்.
மூளை வளர்ச்சி குறைந்த இளைஞனாக படம் முழுவதும் சக்கர நாற்காலியில் முடங்கிக் கிடந்தாலும் நடிப்பில் நிமிர்ந்து நிற்கிறார் ராகுல். இவரது காதலியாக வரும் அனுஜா அய்யரும் தன் பாத்திரத்தை உணர்ந்து செவ்வனே செய்திருக்கிறார். அனுஜா அய்யரின் தந்தையாக ஒரே ஒரு காட்சியில் வருபவர்கூட,""உன்னை திருமணம் செய்து கொண்டால் என் மகள் காலம் முழுக்க உனக்கு நர்சாகப் பணிவிடை செய்து கொண்டுதான் இருக்க வேண்டுமே தவிர மனைவியாக வாழ முடியாது'' என்று சீறும் காட்சியில் சிறப்பாக நடித்திருக்கிறார். சிறுவயது ஜீவாவாக வரும் கிருஷ்ணாகூட வயதில்தான் சிறுவனே தவிர நடிப்பில் பெரியவன்தான்.
"விண்மீன்கள்' படத்தின் மிகப்பெரிய பலம் ஆனந்தின் ஒளிப்பதிவும், புதியவர் ஜுபினின் இசையும்தான். நா.முத்துக்குமாரின் பாடல்கள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன என்றாலும் ""உன் பார்வை போதும்'' பாடல் கேட்டதும் மனதில் பதிகிறது.
"மைல்ட் ஹார்ட் அட்டாக்' ஏற்பட்ட பிறகும் மகனை சக்கர நாற்காலியில் வைத்து தள்ளிக் கொண்டே ஓடி ஓட்டப் பந்தயத்தில் நரேன் கலந்து கொள்ளும் காட்சியில் ஏதோ அசம்பாவிதம் நடக்கவிருப்பதைப்போல் காட்சியமைத்திருப்பது தேவையற்றது.
என்னதான் மாமாவின் ஆதரவுடன் ஆசிரியப் பணியில் ஜீவா இருந்தாலும்,அடுத்தவர் உதவியின்றி எந்தக் காரியமும் செய்ய முடியாத நிலையில் இருக்கும் மகனைப்பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் பெற்றோர் எங்கேயோ இருப்பார்களா?
இப்படி சிற்சில குறைபாடுகள் இருந்தாலும் ஒரு நல்ல படம் பார்த்த நிறைவு நமக்குக் கிடைக்கிறது.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget