சீரியசான படங்களை இயக்கிய சுந்தர்.சி ஒரு புதுப் பொலிவுடன் முழுக்க முழுக்க காமெடி படம் எடுத்திருக்கிறார். பல இடங்களில் லாஜிக் மீறல்கள் இருந்தாலும், எதையும் சீரியசாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. அந்த அளவுக்கு படு ஜாலியான படம்.
விமல், சிவா, அஞ்சலி, ஓவியா, சந்தானம், இளவரசு என்று காமெடி செய்வதற்கு ஒரு பட்டாளமே படத்தில் இருக்கிறது. கும்பகோணத்தில் பாரம்பரியம் மிக்க மசாலா கஃபே ஹோட்டலுக்கு சொந்தக்காரர் விமல். ஹோட்டல் வியாபாரம் ஓஹோன்னு இருந்தது, ஆனா அது விமலோட தாத்தா காலத்துல. இப்போது ஹோட்டலில் ஈ ஓட்டுவதற்கே நேரம் சரியாக இருக்கிறது. எப்படியாவது ஹோட்டலை பழைய நிலைக்கு கொண்டுவர வேண்டும் என்பது விமலின் கனவு.
மசாலா கஃபே ஹோட்டலை மூடச் சொல்லி உத்தரவிடுகிறார் கும்பகோணம் புது ஹெல்த் இன்ஸ்பெக்டர் அஞ்சலி. அதெல்லாம் முடியாது என்று சொல்லி விமல் அடம்பிடித்து குறும்புத் தனமாக கலாட்டா பண்ண, இருவருக்கும் இடையே காதல் மலர்கிறது.
இதற்கிடையில் கலகலப்பான எண்ட்ரி கொடுக்கிறார் விமலின் தம்பி சிவா. ஜெய்யிலில் இருந்து ரிலீசாகி வந்தாலும் தான் துபாய்யில் இருந்து வருவதாக சொல்லி பீலா விடும் அலப்பரைகள் அசத்தல்! சிவாவின் காதலுக்கு ஓவியா ஓ.கே சொல்லிவிட காதல் கலாட்டாக்கள் கலைகட்டுகிறது.
அஞ்சலியின் முறை மாமனாக சந்தானம் வழக்கம் போலவே சிரிக்க வைக்கிறார். அவரைவிட அவருக்கு அடியாட்களாக வரும் மூன்று பேரின் காமெடி கலக்கல். கவுன்சிலர் தேர்தலுக்காக மனோபாலா தண்ணீர் குழாயில் பால் வரவழைத்து மக்களுக்கு கொடுக்க, அதற்கு போட்டியாக சந்தானம் பம்பு செட்டில் சாராயம் வரவழைத்து கொடுப்பதும் என காலாட்டா காட்சிகள் ஏராளம்.
வில்லன் மாதிரி சஸ்பென்ஸ் கொடுக்கும் பஞ்சு சுப்பு, சிரிப்பு வில்லனாக மாரி மேலும் சிரிக்க வைக்கிறார். போலிசுக்கு பயந்து விதவிதமான கெட்டப்களுடன் அலைந்து கொண்டிருக்கும் இளவரசு வரும் காட்சிகளில் சிரிப்பு வெடிகள் தான். அடப்பாவிகளா... என்ன தசாவதாரம் கமலவிட அதிகமான கெட்டப்கள போட வச்சிட்டீங்களே என்று புலம்பும் வசனம் நச்!
பாடல் காட்சிகளில் கும்முன்னு இருக்கிறார் அஞ்சலி. ஓவியாவிம் விடுவதாக இல்லை. 'இவளுக இல்லாம இருக்க முடியல' பாட்டில் யாரு அதிகமா ஆடுவதுன்னு (ஆட்டுவதுன்னு) அஞ்சலிக்கும் ஓவியாவிற்கும் இடையே பெரிய போட்டியே நடக்குது.
படத்தின் முதல் பாதியில் சந்தானம் இல்லாமலே காமெடிக்கு பஞ்சமில்லை. ஓவரா எதிர்பார்ப்பதை விட, எதையுமே எதிர்பார்க்காம படத்துக்கு போனா, சிரிச்சிட்டு வரலாம் என்பது சத்தியம்.
மொத்ததில் சலிப்பு இல்லாத கலகலப்பு!