நிகழும் நந்தன வருடம் வைகாசி மாதம் 4-ந் தேதி வியாழக் கிழமை (17.5.2012) கிருஷ்ண பட்சத்து துவாதசி திதியில் ரேவதி நட்சத்திரம் ஆயுஷ்மான் நாமயோகம் கரசை நாமகரணம் ஜீவனுள்ள சித்த யோகத்தில் சந்திரன் ஹோரையில் பஞ்சபட்சியில் மயில் வலுவிழந்த நேரத்தில் சூரிய உதயம் புக, பெயர்ச்சி நாழிகை 31.1 க்கு மாலை மணி 6.18 க்கு சர வீடான மேஷத்திலிருந்து ஸ்திர வீடான ரிஷபத்திற்குள் குருபகவான் நுழைகிறார்.
மனதாலும், சொல்லாலும், செயலாலும் யாருக்கும் எந்த உயிருக்கும் கனவிலும், நனவிலும் தீங்கு நினைக்காத பரிசுத்த ஆத்மாக்களெல்லாம் குருவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் தான். காசு பணம் கையூட்டு வாங்காமல், இன-மத பேதம் பார்க்காமல் பணியாற்றும் அரசு அதிகாரிகளின், அமைச்சர்களின் இதயத்தில் இருப்பவரும் இவர்தான். பகவத் கீதை முதல் பைபிள், திருக்குர்ரான் உள்ளிட்ட நீதி நூல்களையும் கற்றறிந்து எம்மதமும் சம்மதம் தான் என்று சமாதானத்தை விதைக்கும் சாதுக்களை ஆள்பவரும் இவர்தான். வியாபார நோக்கோடு பள்ளி, கல்லூரி, மருத்துவ மனைகள் நடத்தி பணம் பறிக்காத, சேவை மனசுக்காரர்களை வழி நடத்துபவரும் இவர்தான். உயரிய விருதுகள் கிடைத்தும், செல்வந்தனாகியும், அதிகாரப் பதவியில் அமர்ந்தும் அலட்டிக் கொள்ளாமல் அடக்கத்துடன் பணியாற்றி பிரபலங்களின் பின்னணியில் இருப்பவர் இவர்தான்.
தூய்மை, வாய்மை, நேர்மை, வேதங்கள், உபநிடதங்களுக்கெல்லாம் அதிபதியாய் விளங்கும் குருபகவான் 17.5.2012 முதல் 28.5.2013 வரை ரிஷப ராசியில் அமர்ந்து ஆட்சி செலுத்தப் போகிறார். கலைகளுக்கும், கட்டிடங்களுக்கும், சுகபோகங்களுக்கும், வாகனங்களுக்கும் அதிபதியான சுக்ரனின் வீடான ரிஷபத்தில் குரு அமர்வதால் மக்கள் சின்ன சின்ன ஆசைகளுக்கு அடிமையாவார்கள். சொந்த வீடு, வாகனம் வாங்குவதை வாழ்வின் குறிக்கோளாக மக்கள் நினைப்பார்கள். பாரம்பரிய பண்பாடு கலாச்சாரங்களிலிருந்து பலர் நழுவிச் செல்வார்கள். சினிமா, சின்னத்திரை துறைகளில் அடிக்கடி குழப்பங்களும், வேலை நிறுத்தங்களும், புகழ்பெற்ற கலைஞர்களுக்கு பாதிப்பும் உண்டாகும். மழைப்பொழிவு சீராக இல்லாமல் போகும். ஒரு பக்கம் வறட்சி, மறுபக்கம் வெள்ளப் பெருக்கும் நிலவும். பெண்கள் கை ஓங்கும். அனைத்துறைகளிலும் பெண்கள் சாதித்துக் காட்டுவார்கள். சில வங்கிகள் மூடப்படும். வங்கிகளின் வாராக் கடன் அதிகரிக்கும்.
தனக்கு எதிர் கிரகமான சுக்ரனின் வீட்டில் குரு அமர்வதால் கட்டிடத்துறை பாதிப்படையும். பில்டர்ஸ், பிரம்மோட்டர்ஸ் கடன் வாங்கி பெரிய முதலீடுகள் செய்யாமலிருப்பது நல்லது. விற்பனையாகாத கட்டிடங்கள் அதிகரிக்கும். ரியல் எஸ்டேட் செய்பவர்களுக்கு ஏமாற்றங்களே மிஞ்சும். ஆனால் மணல், சிமெண்ட், இரும்பு, கம்பி விலை குறையாது. வாகன விபத்துகள் அதிகரித்துக் கொண்டே போகும். ரோகிணி நட்சத்திரத்திலேயே குரு பகவான் ஏறக்குறைய பத்து மாதங்கள் செல்வதால் பியூட்டி பார்லர், மசாஜ், வழுக்கைத் தலையில் முடி வளர்த்துக் கொள்ளுதல், டென்டல் கேர்(பல்) போன்ற தொழில்கள் சூடுபிடிக்கும். தண்ணீரால் பரவும் கிருமிகள் அதிகரிக்கும். புதிய நோய்கள் வரும். கண் நோய், தோல் நோய், யூரினரி இன்பெக்ஷன் போன்றவற்றால் அதிகமானவர்கள் பாதிப்படைவார்கள். பறவைக் காய்ச்சல், எலிக் காய்ச்சல் மீண்டும் வர வாய்ப்பிருக்கிறது.
குருபகவான் புதன் வீடான கன்னியை பார்ப்பதால் புத்தகம் படிக்கும் குணம் மக்களிடையே அதிகரிக்கும். சர்ச்சைக்குரிய புத்தகங்கள் வெளியாகி பிரபலமாகும். மாணவர்களிடையே ஆழமாகப் படிக்கும் போக்கு குறையும். பள்ளி, கல்லூரிகள் கட்டிடங்களால் நவீனமாகும். ஆனால் தகுதியற்ற போதிய அனுபவமற்றவர்கள் போதிக்கும் பணியில் அமர்த்தப்படுவதால் தனியார் கல்லூரிகளில் மாணவர்கள் சலிப்படைவார்கள். தேர்வு முறை எளிதாகும். வினாத்தாள்கள் முன்னரே வெளியாக வாய்ப்பிருக்கிறது. அரசு கல்வி நிறுவனங்களில் பணியாற்றுபவர்களை கட்டுப்படுத்த புதிய சட்டங்கள் வரும். மாணவர்கள் மன அழுத்தத்திற்குள்ளாவார்கள். சி.பி.எஸ்.இ பள்ளிகளில் சேர்க்கை அதிகரிக்கும். சிவில், மெக்கானிக், கேட்ரிங்க், ஆர்க்கி டெக்ட், சாட்டடு அக்கவுண்ட்ஸ் பாடப் பிரிவுகளில் அதிக மாணவர்கள் சேர்வார்கள். பள்ளி அங்கீகாரம் பெறுவதில் புதிய சட்டங்கள் அமலாகும். அரவாணிகள் நன்மை அடைவார்கள்.
குரு செவ்வாயின் விருச்சிக வீட்டை பார்ப்பதால் போலி மருந்துகள் அழிக்கப்படும். போலி மருந்துகளை தயாரிக்கும் தொழிற்சாலைகளை கண்டறியப்பட்டு மூடப்படும். போலி மருத்துவர்கள் பிடிபடுவார்கள். நகரத்திற்குள் பூமி விலை அதிகரிக்கும். புறநகர் பகுதிகளில் பூமி விலை குறையும். கேன்சர், எய்ட்ஸ் நோய்களை குணப்படுத்த புதிய மருந்துகள் கண்டுபிடிக்கப்படும். பெரிய பாரம்பரியமான கூட்டுக் குடும்பங்களின் சொத்துக்கள் கை மாறும். பாகப்பிரிவினை, சொத்துப் பிரச்சனை வழக்குகள் அதிகரிக்கும். ஆனால் வழக்குகளை விரைந்து முடிக்க நீதிபதிகள் ஆர்வம் காட்டுவார்கள். பாலியல் பலாத்காரங்களை கட்டுப்படுத்த சட்டங்கள் கடுமையாகும். காவல் துறையினர் கை ஓங்கும். கூடுதல் சலுகைகளை அனுபவிப்பார்கள். ராணுவத்திலிருக்கும் குளறுபடிகள் சரியாகும். ராணுவம் நவீனமாகும். கூடுதல் நிதி ஒதுக்கப்படும். மின்சார சாதனங்களின் விலை குறையும்.
குருபகவான் சனியின் மகர வீட்டை பார்ப்பதால் தொழிற்சாலைகள் அதிகரிக்கும். வாகனங்கள் அதிக விற்பனையாகும். கண்ணாடித் தொழில் சூடுபிடிக்கும். ஹோட்டல், தங்கும் விடுதி தொழில்கள் அதிக லாபம் தரும். சுற்றுலா ஸ்தலங்களில் கூட்டம் அலைமோதும். சாலைகளை மேம்படுத்த அதிக நிதி ஒதுக்கப்படும். எலக்ட்ரானிக் சாதனங்களின் விலை குறையும். பெட்ரோல், டீசல் படுகைகள் கண்டறியப்படும். கடல் வாழ் உயிரினங்களை பாதுகாக்க புது சட்டங்கள் வரும். முதியோர் இல்லங்கள் அதிகரிக்கும். மக்களின் அன்றாட அத்தியாவசிய செலவுகள் கூடிக் கொண்டே போகும். விலையேற்றத்தால் மக்கள் மன உளைச்சலுக்குள்ளாவார்கள். அரசியலில் கட்சித் தாவல் அதிகரிக்கும். கூட்டணிகள் மாறும்.
குருபகவான் செல்லும் பாதை:
17.5.2012 முதல் 30.5.2012 வரை கார்த்திகை 2-ல்
31.5.2012 முதல் 14.6.2012 வரை கார்த்திகை 3-ல்
15.6.2012 முதல் 29.6.2012 வரை கார்த்திகை 4-ல்
30.6.2012 முதல் 15.7.2012 வரை ரோகிணி 1-ல்
16.7.2012 முதல் 03.8.2012 வரை ரோகிணி 2-ல்
04.8.2012 முதல் 27.8.2012 வரை ரோகிணி 3-ல்
28.8.2012 முதல் 09.10.2012 வரை ரோகிணி 4-ல்
10.10.2012 முதல் 13.11.2012 வரை ரோகிணி 4-ல் வக்ரநிலை
14.11.2012 முதல் 8.12.2012 வரை ரோகிணி 3-ல் வக்ரநிலை
09.12.2012 முதல் 11.01.2013 வரை ரோகிணி 2-ல் வக்ரநிலை
12.01.2013 முதல் 05.02.2013 வரை ரோகிணி 1-ல் வக்ரநிலை
06.02.2013 முதல் 13.02.2013 வரை ரோகிணி 1-ல் இயல்புநிலை
14.02.2013 முதல் 20.03.2013 வரை ரோகிணி 2-ல் இயல்புநிலை
21.03.2013 முதல் 09.04.2013 வரை ரோகிணி 3-ல் இயல்புநிலை
10.04.2013 முதல் 27.04.2013 வரை ரோகிணி 4-ல் இயல்புநிலை
28.04.2013 முதல் 12.05.2013 வரை மிருகசீரிடபம் 1-ல்
13.05.2013 முதல் 28.05.2013 வரை மிருகசீரிடபம் 2-ல்
இந்த குருமாற்றம் மக்கள் மனதிலே ஆசைகளை அதிகப்படுத்துவதாகவும், சுக போகங்களை அனுபவிக்கத் தூண்டுவதாகவும், பிற்பகுதியில் ஆன்மீக நாட்டத்தை அதிகப்படுத்துவதாகவும் அமையும்.
பரிகாரம்:
குருபகவான் கலை, இலக்கியம், இசை, ரசனைக்குரிய கிரகமான சுக்ரனின் வீட்டில் அமர்வதால் பிள்ளைகளை படிப்பில் மட்டுமில்லாது அவர்களிடம் மறைந்து கிடக்கும் விளையாட்டு மற்றும் இசை ஆர்வத்திற்கு அதிக முக்கியத் துவம் தருவது நல்லது. நலிவடைந்த கலைஞர்களுக்கு உதவுங்கள். முடிந்தால் கண் தானம் செய்யுங்கள். குருவின் திருவருள் உங்கள் இல்லம் தேடி வரும்.