மாற்று சினிமாவுக்கான முயற்சிகளில் குறும்படங்கள் தனித்துவம் மிக்கதாக விளங்கி வருகிறது. குறைந்த நேரத்தில் மனதின் மதிப்பீடுகளை அலசும் விதத்தில் அவை அமைந்து விடுகின்றன. எத்தனையோ படங்கள் அப்படி வந்திருக்கிறது. வந்துகொண்டிருக்கிறது.
சினிமா என்பது கவர்ச்சிகரமான அம்சங்களால் மக்களை ஈர்க்கிறது என்றால் குறும்படம் கருத்து ரீதியில், எளிமையான காட்சிகளால் குறைந்த செலவில் யாராலும் தொடக்கூடிய கருப்பொருள் கொண்டு எடுக்கக்கூடியதாக இருக்கிறது. இதுதான் குறும்பட
வீச்சுக்கு மிக மிக முக்கிய காரணியாக அமைந்து அது வெகுஜன திரைமொழியாக மாற்றமடைகிறது.
அப்படி சமீபத்தில் நல்ல கருத்தம்சங்களைக் கொண்டு வெளிவந்திருக்கும் குறும்படம் துருவ நட்சத்திரம். இக்குறும்படம் அதன் உருவாக்கத்திலும் கருத்தாக்கத்திலும் சிறப்பானதொரு வடிவத்தைப் பெற்றிருக்கிறது. அரவிந்த் சுப்ரமணியன் இயக்கத்தில் விக்கியின் ஒளிப்பதிவில் அரவிந்த் மனோகரன் படத்தொகுப்பில் வெளிவந்திருக்கும் இந்தக் குறும்படத்தில் டெல்லி கணேஷ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
இனி.. இப்படத்தின் கதையைக் காண்போம்.
எட்டு ஆண்டுகள் வெளிநாட்டில் தங்கிவிட்ட தன் மகனையும் அவன் குடும்பத்தையும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் டெல்லிகணேஷ். ஒரு சராசரி தகப்பனாக அவரின் பிரமாதமான நடிப்பு அற்புதமாக இருக்கிறது. ஏக்கத்தையும், தவிப்பையும் கலந்து சிறப்பாக நடித்திருக்கிறார். "இந்தா வந்திற்றோம்... அந்தா வந்திர்றோம்' என்று சொல்லிவிட்டு பின் வேலை இருப்பதால் வர முடியவில்லை என்று எப்போதும் ஏதாவது காரணம் சொல்லும் மகன் குடும்பம். கடைசியில் ஒரு வழியாக டெல்லிகணேஷின் பேரனை மட்டும் அனுப்பி வைக்கிறார்கள்.
டெல்லி கணேஷுக்கு தன் பேரனைப் பார்க்கவோ பேசவோ கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை. அதற்குக் காரணம், அவனின் நுனி நாக்கு ஆங்கிலமும் அவனுடைய அமெரிக்க லைஃப் ஸ்டைலும்தான்.
அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் இருவருக்குள்ளும் ஒரு நெருக்கம் வருகிறது. இப்படி அவர்களுக்குள் நெருக்கம் வளர்ந்து வரும் நேரத்தில், மகனும் மருமகளும் அமெரிக்காவில் இருந்து வந்திறங்குகிறார்கள். அடுத்த நாளே கிளம்பவும் தயாராகிறார்கள். அதன்பின் என்ன நடக்கிறது என்பதைச் சொல்லி நிறைகிறது குறும்படம்.
இப்படத்தில் நடித்துள்ள அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். கதைக்கும் காட்சிக்கும் பொருத்தமான பின்னணி இசை மிகவும் அருமையாக இருக்கிறது. டெல்லி கணேஷ் பேசும் வசனங்கள், அவரின் தனித்துவமான நகைச்சுவை பாணி எல்லையிலேயே பயணிப்பது போன்ற உணர்வு, இருந்தாலும்கூட குறைசொல்ல முடியாத அளவுக்கு நன்றாகவே இருக்கிறது. அவரின் பேரனாக நடித்திருக்கும் அந்த சிறுவன் அசத்தல் நடிப்பில் நம்மைக் கவர்கிறான். படத்தில் குறை என்று சொன்னால் அது அந்த வெளிநாடு வாழ் தம்பதிகள்தான். அவர்களின் வாழ்க்கை முறையை இன்னும் கவனமாக காட்சிப்படுத்தி இருக்கலாம். அவர்கள் நடிப்பு உட்பட அனைத்திலும் நாடகத் தன்மை.
ராத்திரியோடு ராத்திரியாக வந்து, தன் மகனை தாத்தாவிடம் விட்டுவிட்டு மருமகள் திரும்பி உடனே அமெரிக்கா சென்று விட்டாள் எனக் காட்சிப்படுத்தியிருப்பது, பேரனை ஒரு வெறுப்புடனே தாத்தா பார்ப்பது, பெற்றோரைவிட்டு மகன் எட்டு வருடத்துக்கு ஏன் பிரிந்திருக்கவேண்டும்? அதுவும் நன்றாக (பல லட்சங்களில் சம்பளம் பெறுகிறவர்) இருக்கும் போது?
சரி, அப்படியே பிரிந்திருந்தாலும் இருவரும் சந்திக்கும் போது, மகனை பிரிந்த பெற்றோரின் தாக்கம் கொஞ்சம்கூட இல்லாமல் தந்தை இருப்பாரா? அவர் என்ன இயந்திரமா? டெல்லி கணேஷ் மனைவிக்கான காட்சிகளை எந்தத்தேவையும் இல்லாமல் குறைத்தது ஏன்? இப்படி பல கேள்விகள் இருந்தாலும், ஓர் உணர்வுபூர்வமான படம் என்கிற விதத்திலும், டெல்லிகணேஷின் அனாயசமான நடிப்பிலும் குறை மறைந்து போகிறது. படத்தொகுப்பும் ஒளிப்பதிவும் படத்தின் தேவைக்கேற்றபடி நன்றாக அமைந்திருக்கிறது. மொத்தத்தில் ஒரு சிறந்த குறும்படமாக "துருவ நட்சத்திரம்' ஒளிர்கிறது.