ரொம்ப நாட்களுக்குப் பிறகு நிருபர்கள் மத்தியில் நீண்ட நேரம் பேசினார் நகைச்சுவை நடிகர் சந்தானம். விமல் - நிஷா அகர்வால் நடித்துள்ள இஷ்டம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்புக்கு வந்திருந்தார் சந்தானம்.
வழக்கம்போல, இந்த நிகழ்ச்சியிலும் நாலு வார்த்தையோடு நிறுத்திக் கொண்டார் ஹீரோ விமல்.
ஆனால் சந்தானம் அரைமணி நேரம் பேசுவார் என பிஆர்ஓ மவுனம் ரவி அறிவிக்க, சிரித்த படி வந்த சந்தானம் சீரியஸாகவே சற்று அதிக நேரம் பேசினார்.
"எங்கிட்ட நிறைய பத்திரிகையாளர்கள் பேட்டி கேட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கெல்லாம் உடனடியாக தர முடியவில்லை. காரணம், நிற்க நேரமில்லாத அளவுக்கு ஷூட்டிங். ஆனா கண்டிப்பா தந்துடுவேன்..." என்று எடுத்த எடுப்பில் எக்ஸ்க்யூஸ் கேட்டவர், சினிமாவில் ஒருவர் நல்ல நிலைக்கு வரக் காரணத்தை விளக்கினார்.
"திறமை 90 பர்சென்ட் இருந்தாலும் ஒருவருடைய கேரக்டர்தான் அவரது வெற்றியைத் தீர்மானிக்கிறது. அடிப்படை குணம் சரியாக இருந்தால், இருக்கிற திறமையை வைத்து முன்னுக்கு வந்துவிடலாம்," என்றார்.
உங்களை வைத்துதான் இன்றைக்கு பட பிஸினஸ் நடக்கிறது எனும் அளவுக்கு வந்துவிட்டீர்கள். இன்னும் ஹீரோவின் காதலுக்கு உதவும் வேடம் ஏன்... ஹீரோவாக நடிப்பதுதானே? என்று ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.
பதறிய சந்தானம், "இதுக்குதான் நான் அதிகமா பேட்டியெல்லாம் குடுக்கிறதில்ல. ஏங்க, நமக்கு என்ன வருமோ அதை செஞ்சிட்டு போறதுதான் நல்லது. எனக்கு காமெடி நல்லா ஒர்க் அவுட் ஆகுது. ஹீரோவா நடிக்க பல பேர் இருக்காங்க.
தமிழ் சினிமாவுல 1000 காமெடியன்கள் இருந்தாலும் சொல்லிக் கொள்கிற மாதிரி ஒரு 10 பேர்தான் இருப்பாங்க. அந்த பத்துப் பேர்ல ஒருத்தனா இடம்பிடிச்சா போதும்னு நினைக்கிறேன்," என்றார்.
மொக்க பிகர், சப்ப பிகர்னு நீங்கள் கிண்டல் பண்றதை .. பெண்கள் அமைப்புகள் எதிர்க்கிறார்களே?
"ஏங்க, நான் என்ன ரோட்ல போற பெண்களையா கிண்டல் பண்ணேன். படத்துல வர்ற, அதுவும் நான் சம்பந்தப்பட்ட கேரக்டர்களை அப்படி கிண்டல் பண்ணியிருப்பேன். அந்த காட்சிக்கு அது தேவையா இருந்தாதான் செய்யறோம். இதுல தப்பு என்னன்னு தெரியலையே," என்றார்.
அடுத்து வந்த கேள்வியை ஒரு பெண் நிருபர் கேட்டார். சந்தானமே எதிர்ப்பார்க்காத கேள்வி அது...
கழுவிக் கழுவி ஊத்தறது, அப்பா டக்கர்னு படத்துல நீங்க பயன்படுத்தற சில பஞ்ச் லைனை எங்கிருந்து புடிக்கிறீங்க? என்று அவர் கேட்க, கழுவி கழுவி ஊத்தறதுன்னா என்னன்னு நீண்ட விளக்கத்தைத் தந்தார் சந்தானம்!