மருத்துவராக இருக்கும் கதாநாயகன் ஜீவா, அவர் படித்த மருத்துவ கல்லூரியில் அவருக்காக பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருக்க, அவ்விழாவிற்கு செல்லாமல் மது அருந்திவிட்டு லாரி ஒன்றில் அடிபட்டு கீழே விழுகிறார். அப்போதிலிருந்து பிளாஷ் பேக் விரிகிறது. கதாநாயகி கவிதா லண்டனில் இருக்கிறார். லண்டனில் பெரிய புள்ளியாக இருக்கும் சுமனின் ஒரே மகள் இவர். லண்டனில் உள்ள எப்.எம் ரேடியோ நடத்தும் கவிதைப் போட்டி ஒன்றில் சென்னையில் இருக்கும் நாயகனும்,
லண்டனில் இருக்கும் நாயகியும் கலந்து கொள்கின்றனர்.
இருவரும் வெற்றிபெற, கதாநாயகி மட்டும் பரிசினை பெற வருகிறார். அங்கே கதாநாயகனின் கவிதையைக் கண்ட நாயகி, எப்.எம். மூலம் நாயகனின் இமெயில் முகவரியைப் பெறுகிறார். இமெயில் சாட்டிங்காக மாற அது காதலாக மாறுகிறது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்காமல் காதலித்துக் கொள்கின்றனர்.
இந்நிலையில் சுமன் தன் மகளை தமிழ்நாட்டிற்கு கூட்டி வருகிறார். தனது காதலனின் தகவல்களை பென் டிரைவில் எடுத்து வரும் நாயகி, அதை தவற விட்டு விடுகிறார். சென்னை வரும் கதாநாயகி மருத்துவக் கல்லூரியில் சேர்கிறார். இக்கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கிறார் நாயகன்.
இருவருக்குமான சாட்டிங் தொடர்பு லண்டனோடு முடிந்து போகவே, இருவரும் தவித்துப் போகிறார்கள். இதனிடையே சில சந்திப்புகளால் நாயகன், நாயகி பெற்றோர்கள் ஒன்றிணைய, இருவருக்கும் வற்புறுத்தி கல்யாணம் செய்து வைத்து விடுகிறார்கள்.
தன் கணவர்தான் தான் காதலித்தவர் என்று நாயகிக்கு தெரியாமலும், தன் மனைவிதான் தான் காதலித்தது என நாயகனுக்கு தெரியாமலும் ஒரே வீட்டில் குடும்பம் நடத்துகின்றனர். இருவரும் தங்களது காதலை எண்ணி ஒருவரை ஒருவர் வெறுத்துக் கொள்கிறார்கள்.
இறுதியில் இவர்கள் இருவரும் சேர்ந்தார்களா இல்லையா என்பதே படத்தின் கிளைமாக்ஸ்.
ஜீவா கேரக்டரில் வரும் அனிருத் சிறப்பாக நடித்திருக்கிறார். கவிதா கேரக்டரில் வரும் ஜோஷ்னா கண்ணுக்கு பார்க்க அழகாக இருக்கிறார். போலி டாக்டர் சிங்காரம் கேரக்டரில் வரும் வடிவேலுவின் காமெடி படத்திற்கு மிகப்பெரிய பலம் என்றே சொல்ல வேண்டும்.
நாயகனின் தந்தையாக வரும் ஒய்.ஜி. மகேந்திரன், நாயகியின் தந்தையாக வரும் சுமன் ஆகியோர்கள் தங்களது கேரக்டரை நிறைவாய் செய்திருக்கிறார்கள். காதலை சுருக்கமாய் காண்பித்து, பிரிவினை பெரிதாக காண்பித்திருப்பது திரைக்கதையின் பலவீனத்தை காட்டுகிறது.
கண்ணனின் ஒளிப்பதிவும், ஸ்ரீகாந்த் தேவாவின் இசையும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கின்றன. நாயகன் நாயகியின் சோகத்தை ஒரு டிராக்கில் அமைத்து, மறு டிராக்கில் வடிவேலுவின் காமெடியை வைத்து படத்தை சமன் செய்ய முயன்றிருக்கிறார் இயக்குனர் வாசு பாஸ்கர். கிளைமாக்ஸில் எதிர்பாராத முடிவை தந்து படத்தை முடித்திருக்கிறார் வாசு பாஸ்கர்.