பத்திரிகை நிருபராக வரும் கதாநாயகிக்கு, சேரிப்பகுதியில் வசிக்கும் மக்கள், வறுமை காரணமாக தங்களது பெண் குழந்தைகளை 13 வயதில் இருந்தே பாலியல் தொழிலுக்கு தள்ளி விடுகிறார்கள் என்ற தகவல் கிடைக்க, அங்கே புறப்படுகிறார். அதே சேரியில் மாற்றுத் திறனாளியாக வரும் கதாநாயகன் இந்த அவலங்களை கண்டு பொங்கி எழுகிறார். பாலியல் தொழிலில் சிறுமிகளை வலுக்கட்டாயமாக இழுத்து வரும் வில்லன் கூட்டத்தை கதாநாயகன் எதிர்க்கிறார்.
அக்கூட்டத்தை அழிக்க முயல்கிறார். சிறு போராட்டத்திற்குப் பிறகு போலீசாரிடம் அக்கூட்டத்தை பிடித்துக் கொடுக்கிறார்.
கதாநாயகரால் மீட்கப்பட்ட சிறுமிகள் படித்து பெரியாளாகிறார்கள். அவர்களில் ஒரு பெண் கதாநாயகனை ஒருதலையாக விரும்புகிறாள். பத்திரிகை நிருபராக வரும் கதாநாயகியும் கதாநாயகனை காதலிக்கிறார். இறுதியில் என்னாகிறது என்பதுதான் இப்படத்தின் மீதிக்கதை.
நாயகனாக வரும் ஆதித்யா பக்கவாதம் வந்த மாற்றுத் திறனாளி வேடத்தில் நன்கு நடித்திருக்கிறார். நாயகிகளாக வரும் கௌரி, அர்ச்சனா ஆகியோரின் நடிப்பும் நன்றாக இருக்கிறது.
மலையாள இயக்குனரான மோகன் ரூப், இப்படத்தில் உண்மை சம்பவங்களையும் கோர்த்து தந்திருக்கிறாராம். 30 வயதுள்ள கதாநாயகனை 16 வயதுப் பெண் காதலிப்பதாக சொல்வது ஏற்றுக் கொள்ளும்படி இல்லை.
சேரிப்பகுதி, கற்பழிப்பு, வில்லன்கள் இதையே சுற்றி சுற்றி காட்டியிருப்பது சலிப்பை ஏற்படுத்துகிறது. சொல்ல வந்த விஷயத்தை தெளிவாக சொல்லாமல் விட்டுவிட்டார் இயக்குனர்.
நிறைய இடங்களில் லாஜிக் ஓட்டைகள் இருப்பதை இயக்குனர் கண்டு கொள்ளாமல் விட்டது ஏனோ என கேட்கத் தோன்றுகிறது.
மொத்தத்தில் திரைக்கதையில் நன்கு கவனம் செலுத்தியிருந்தால் தூதுவன் ரசிகர்களிடம் நல்ல பெயர் வாங்கியிருப்பான்.