படத்தின் ஹீரோ பீட்டரை சிறு வயதிலேயே தனது உறவினர் வீட்டில் விட்டுவிட்டு எங்கோ சென்றுவிடுகிறார் அவனது அப்பா. ஒரு கட்டத்தில் தனது தந்தையும், தாயும் ஒரு விமான விபத்தில் இறந்துவிடும் தகவலை அறிந்து கொள்கிறான். உறவினர் வீட்டில் வளரும் பீட்டர், பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும்போதே, அவனுடைய தந்தை விட்டுச்சென்ற பரிசோதனைகள் பற்றிய தகவல்கள் அவனுக்கு கிடைக்கின்றன.
இதைத்தொடர்ந்து, அந்த ஆராய்ச்சிக்கு தனது அப்பாவுக்கு உதவியாக இருந்த அவரது நண்பரான கர்ட் கான்னர்ஸை சந்திக்கிறான். அவருக்கு ஒரு கை இல்லாத காரணத்தினால் செயற்கையாக மனிதனின் உடல் பாகங்கள் வளரும் தொழில்நுட்பத்தை ஆராய்ச்சி செய்து வருகிறார்.
அந்த ஆராய்ச்சிக் கூடத்தில் உள்ள சிலந்தி பீட்டரை கடித்து விடுகிறது. இதன்பின் அவர் ஸ்பைடர்மேனாக மாறுகிறான். அதேநேரத்தில் நல்ல விஞ்ஞானியான கான்னர்ஸ் ஆராய்ச்சிக்கூடத்திலிருந்து வெளியேற்றப்படுவதால், தான் ஆராய்ச்சி செய்த மருந்தை மனித உடலில் செலுத்தினால் மோசமான விளைவுகள் ஏற்படும் என தெரிந்தும், அவரது உடலிலேயே செலுத்திக் கொள்கிறார். இதையடுத்து அவர் கொடூரமான உருவம் கொண்ட பல்லியாக உருவெடுக்கிறார்.
தன்னை ஆராய்ச்சிக்கூடத்தில் வெளியேற்றியவரை கொலை செய்ய முயற்சிக்கும் கான்னர்ஸை ஸ்பைடர்மேன் தடுக்க இருவருக்கும் பகை மூள்கிறது. ஒரு கட்டத்தில் பல்லியாக உருமாறியது ஆராய்ச்சியாளர்தான் என்பதை ஸ்பைடர்மேன் தெரிந்து கொள்கிறான்.
இதனை தனது பள்ளித் தோழியின் தந்தையான சிட்டி கமிஷனரிடம் சென்று சொல்கிறான். ஆனால் இதை அவர் நம்ப மறுக்கிறார். வேறு வழியின்றி தானே அந்த பல்லியை அழிக்க முடிவு செய்கிறார். இதில் அவர் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதே மீதிக் கதை.
ஸ்பைடர் மேன் என்ற கதாபாத்திரம், உலகின் அத்தனை பேருக்கும் தெரிந்த கதாபாத்திரம். எப்படித் தெரியும் என்றால் முந்தைய மூன்று பாகங்களும் வசூலில் சாதனை படைத்தவை. அப்படங்களை எடுத்தவரோ திகில் மன்னன் ஸாம் ரெய்மி. மக்களுக்கு அந்த மூன்று படங்களும் மறக்கவேயில்லை.
ஸாம் ரெய்மியால் நான்காவது பாகம் எடுக்க முடியவில்லை. அதற்கேற்ற நல்ல கதை தயார் செய்யமுடியவில்லை என்று அவர் ஒப்புக்கொண்டு இதிலிருந்து விலகிவிட்டார். இதையடுத்து மார்க் வெப் என்ற இயக்குநரிடம் இந்தப் பொறுப்பை அளித்தது சோனி நிறுவனம். அந்த பொறுப்பை சரியாக செய்திருக்கிறார் மார்க் வெப்.
இந்தப் படத்தில் 3டி உபயோகிக்கப்பட்டிருக்கும் விதத்தில், சமீபகாலமாக வேறு எந்தப் படத்திலும் 3டியை அனுபவித்திருக்க முடியாது என சொல்லலாம். ஸ்பைடர்மேன் தாவுவதை இப்படித்தான் பார்க்கவேண்டும். அசத்தல்! இந்தப் படத்தை 3டியிலேயே பாருங்கள். பழைய ஸ்பைடர்மேன் படங்களைவிட இப்படம் நன்றாகவே வந்திருக்கிறது.
பிற கதாபாத்திரங்கள் வழக்கப்படியே. பீட்டர் பார்க்கரின் முதல் காதலியாக வரும் v, இப்படத்தின் மூலம் பிரபலமாகிவிடுவாள்.
கட்டாயம் பார்க்க வேண்டிய படம்.