பாண்டி ஒலி பெருக்கி நிலையம் என்ற சவுன்ட் சர்வீஸ் கடையை நடத்தி வருபவர் பாண்டி. சிறு வயதிலேயே விபத்தில் பெற்றோரை கொடுத்தவர். அதே ஊரில் இருக்கும் ஒரு அடாவடியான குடும்பத்துக்கு ஒரே பெண்ணாக வளர்மதி. தங்கைக்காக எதையும் செய்யத் துணியும் நான்கைந்து அண்ணன்கள். இந்த அண்ணன்கள் அவர்களது தங்கையான வளர்மதியை யாராவது பார்த்தால் வித்தியாசமான தண்டனையை கொடுப்பார்கள். அப்படிப்பட்டவர்களின் தங்கையான வளர்மதி சாதாரண சவுன்ட் சர்வீஸ் பையனான பாண்டியை காதலிக்கிறார்.
ஆனால், தங்கையின் சந்தோஷமே தங்களது சந்தோஷம் என நினைக்கும் அண்ணன்கள் வளர்மதிக்கும் பாண்டிக்கும் திருமணம் நிச்சயிக்கிறார்கள்.
அப்போது நடக்கும் ஒரு எதிர்பாராத சம்பவத்தால், பாண்டி தனது மனநிலையில் தடுமாறி விடுகிறார். இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதி கதை.
பாண்டியாக சபரீஷ். கிராமத்து இளைஞனாகவே மாறியிருக்கிறார். அப்பாவியாக இருக்கும் இவர் சண்டைக் காட்சிகளில் மட்டும் உதைத்திருக்கிறார். ஆனால், காதல் காட்சிகளில் ‘உனக்கு ஏன்டா ரொமான்ஸே வராதா’ என்று கதாநாயகியே கேட்கும் அளவுக்கு நடித்திருக்கிறார்.
சுனைனா இறுதி காட்சியில் மட்டும் பரிதாபப்பட வைக்கிறார். மற்றபடி அவ்வப்போது வந்து போயிருக்கிறார். கொஞ்சம் வாய்ப்பு கொடுத்திருக்கலாம்.
படத்தில் பாராட்டும்படி இருப்பது காமெடி காட்சிகள்தான். சிம்கம்புலி, கருணாஸ், சூரி, கிங்காங் ஆகியோர் அடிக்கும் ரகளை சிரிப்பை வரவழைக்கிறது. கருணாஸ் சூரியிடம் ஒவ்வொரு பந்தயமாக வைத்து மாட்டிக் கொள்வது வயிறை பதம் பார்க்கிறது.
கவி பெரியதம்பி இசையில் பாடல்கள் சுமார் ரகம்தான். பின்னணி இசையை ஹாலிவுட் படத்திலிருந்து காப்பியடித்திருக்கிறார். செந்தில்குமாரின் ஒளிப்பதிவில் ஆக்சன் காட்சிகள் மட்டும் நன்றாக வந்திருக்கிறது.
கதை சொல்லும் முறையில் ஓரளவு வித்தியாசம் செய்ய முயற்சித்ததற்காக மட்டும் இயக்குனரை பாராட்டலாம். மற்றபடி படத்தில் எங்கேயும் ஒன்றிப் போக முடியவில்லை. ஒரு சோக காட்சி வந்தால் அடுத்து காமெடி காட்சி என்ற ஆர்டர்படி போவது எரிச்சலை தருகிறது.
படத்தில் ஏதோ ஒரு நல்லது இருக்க வேண்டும், படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு கருத்து சொல்ல வேண்டும் என்றே தம்பி ராமய்யாவின் கதாபாத்திரம் நுழைக்கப்பட்டுள்ளது. அவரும் வஞ்சனையில்லாமல் நடித்திருக்கிறார்.
இயக்குனர் ராசு மதுரவன் இப்படத்தில் எது தன்னுடைய பலம் என்று நினைக்கிறாரோ அதுதான் இந்த படத்தோட பலவீனம்.
மொத்தத்தில் ‘பாண்டி ஒலிபெருக்கி நிலையம்’ குறைவாக ஒலித்திருக்கிறது.