3 டியில் தயாராகிவரும் தனது சிவாஜி - தி பாஸ் படத்தைப் பார்த்து ரசித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினி. இந்தப் படம் வரும் செப்டம்பரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஷங்கர் இயக்கத்தில் 5 ஆண்டுகளுக்கு முன்பு திரைக்கு வந்த இந்த படத்தில், சூப்பர் ஸ்டாரின் ஜோடியாக ஸ்ரேயா நடித்திருந்தார். வில்லனாக சுமனும் நகைச்சுவை வேடத்தில் விவேக்கும் நடித்திருந்தனர். உலக அளவில் இந்தியப் படங்களின் வர்த்தகப் பரிமாணத்தையே மாற்றிய பெருமை இந்தப் படத்துக்குதான் உண்டு. தமிழ்ப் படங்களையே பார்த்திராத நாடுகளிலும்
கூட, ஆங்கில சப் டைட்டிலுடன் வெளியான சிவாஜி கலக்கியது.
இப்போது குழந்தைகளையும், பெரியவர்களையும் கவரும் வகையில், 'சிவாஜி' படத்தை `3டி' தொழில்நுட்பத்தில் தயாரித்து மீண்டும் வெளியிட, ஏவி.எம். நிறுவனம் திட்டமிட்டது. அதன்படி, அந்த படத்தை '3டி'யில் உருவாக்கும் பணி கடந்த ஒரு மாதமாக நடைபெறுகிறது. பாடல் காட்சிகள் அனைத்தும் '3டி'யில் உருவாகி விட்டன. மற்ற காட்சிகளை '3டி'யில் மாற்றும் வேலைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.
'3டி' தொழில்நுட்பத்தில் மாற்றப்பட்ட பாடல் காட்சிகள், ரஜினிக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டன. அதைப்பார்த்து அவர் சின்ன குழந்தையைப் போல் உற்சாகமாக கைதட்டி, ரசித்துப் பாராட்டினார்.