இயக்குனர் விஜய் இயக்கிய முதல் படம் கிரிடம் மலையாள ரிமேக். பொய் சொல்லப் போறோம் இந்திப் படத்தின் தழுவல். மதராசப்பட்டணம் டைட்டானிக் முதற்கொண்டு பல படங்களின் கலவை. தெய்வத்திருமகள் ஐ யம் சாமின் அப்பட்ட காப்பி. அப்படியானால் தாண்டவம் எதன் காப்பி என்ற கேள்வி வருமல்லவா? வந்திருக்கிறது. இந்தப் படம் மேட் டாமன் நடித்த பார்ன் சீரிஸை தழுவி எடுக்கப்பட்டது என்றொரு தகவல் படப்பிடிப்புக்கு கிளம்பும் முன்பே வெளியானது. இப்போது பூனை மெதுவாக வெளிக்கிளம்பியுள்ளது.
ராதாமோகனின் அசிஸ்டெண்ட் ஒருவர் இது தனது கதை என்று உரிமை கொண்டாடுகிறார். யுடிவி தனஞ்செயனிடம் ஸ்கிரிப்ட் ஒன்றை தந்ததாகவும், அதனை தனது அனுமதியில்லாமல் தாண்டவம் படமாக எடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். முழுப்படமும் முடிந்த நிலையில் தகராறு எதுக்கு என்று புகார் தந்த உதவி இயக்குனருக்கு காம்பன்சேஷன் தரும் முடிவில் பேச்சுவார்த்தை நடக்கிறது என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அடுத்து வரும் நாட்களில் தாண்டவம் விவகாரம் பலத்த இடியுடன் கோடம்பாக்கத்தில் மழையாக பெய்ய வாய்ப்புள்ளது.