சின்னத்திரையோ, சினிமாவோ இரண்டையும் சரியாக பேலன்ஸ் நடித்து பெயரையும், புகழையும் சம்பாதித்துக் கொண்டிருப்பவர் அகிலா. இவற்றோடு சீசன்ஸ் ஈவன்ட்ஸ் என்ற நிறுவனமும் நடத்திக் கொண்டிருக்கிறார். சின்னத்திரையில் ரோஜாக்கூட்டம்,சிவசக்தி, கோலங்கள், திருமதி செல்வம், இளவரசி, உதிரிப்பூக்கள் என பிரபலமான தொடர்களில் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். சினிமாவில் சினிமாவில் சரவணன், மனதோடு மழைக்காலம், கண்ணும்
கண்ணும், பொல்லாதவன், அரசாங்கம், திருவண்ணாமலை, வேதா என பல திரைப்படங்களில் தங்கை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் அகிலா.
தற்போதைக்கு சன் தொலைக்காட்சியில் திருமதி செல்வம் தொடரில் திரில் அனுபவங்களுடன் போய்க்கொண்டிருக்கிறது அகிலாவின் வாழ்க்கை. உதிரிப்பூக்கள் தொடரில் மாமனுக்காக ஏங்கும் பெண்ணாக சோக கீதம் வாசிக்கிறார். தன்னுடைய சின்னத்திரை, சினிமா அனுபவங்களை நம்மிடையே பகிர்ந்து கொள்கிறார் அகிலா படியுங்களேன்.
இப்பொழுது சினிமாவில் எனக்கு நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்து வருகின்றன. சினிமாக்களுக்கு இருக்கிற வரவேற்பைப் போல் சீரியல்களுக்கான வரவேற்பும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. ஆனாலும், சீரியல்களின் கதை களம் இன்னும் மாறவில்லை. அதை மாற்றினால் சீரியல்களுக்கான வரவேற்பு இன்னும் கூடும்.
சீரியல்களின் எல்லைகள் சினிமாவைப் போல் இப்போது விரிந்திருக்கிறது. சீரியல்களுக்காக பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் உள்பட அனைத்தும் மாறியிருக்கிறது. பல நாடுகளில் ஷூட்டிங் நடத்தி சினிமாவில் சொல்லுகிற மெசேஜை ஒரு வீட்டில் வைத்து சீரியல் சொல்லுகிறது. அவ்வளவுதான் சினிமாவுக்கும் சீரியலுக்கும் உள்ள வித்தியாசம். நாளுக்கு நாள் பெருகி வரும் டி.வி. சேனல்கள் போட்டி போட்டு சீரியல்களை வழங்கி வருகிறது. இந்த போட்டி என்னை போன்ற நடிகைகளுக்கு நல்ல உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. போட்டியிடும் எந்த துறையும் வருங்காலத்தில் சிறந்து விளங்கும். தற்போது திருமதி செல்வம் தொடரிலும், உதிரிப்பூக்கள் தொடரிலும் நடித்து வருகிறேன். இரண்டுமே சவால் நிறைந்த கேரக்டர்கள் பொழுது போக்கு என்று எனக்கு தனியாக எதுவும் கிடையாது. நடிப்பதே பொழுதுபோக்காக இருப்பதால் எப்போதும் அதை பற்றிதான் சிந்தனைகள் இருக்கிறது.
இளவரசி தொடரில் வில்லத்தனம் செய்த கயல்விழி கதாபாத்திரம் எனக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது அதற்காக வில்லி கதாபாத்திரம்தான் செய்வேன் என்றில்லை. மக்களின் மனதில் நிற்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து செய்வேன். சினிமாவில் நல்ல கேரக்டர்கள் கிடைக்க கொஞ்சம் காலம் ஆகும். அதற்காக காத்திருக்க முடியாது. எனவே சீரியல்களில் கிடைக்கும் திருப்தியான கதாபாத்திரங்களை செய்து வருகிறேன்.
சீசன்ஸ் ஈவன்ட்ஸ்'ங்கிற பேர்ல நானும் நண்பர் பிரதாப்பும் சேர்ந்து சென்னை தி.நகரில் நிறுவனம் ஒன்று வச்சிருக் கோம். ஸ்டார் நைட், ஸ்போர்ட்ஸ் ஸ்டார் புரோக்கிராம்ன்னு பல புரோக்கிராம்கள் நடத்திக் கொடுத்திருக்கோம். "பிளாக் அண்ட் ஒயிட்' என்ற டைட்டிலில் பழம்பெரும் நடிகர், நடிகைகள் கலந்து கொண்ட "ஸ்டார் நைட்' நிகழ்ச்சியும் நடத்திக் கொடுத் தோம்.
சின்ன நிகழ்ச்சிகளைவிட பெரிய நிகழ்ச்சிகள்ல நிறைய பிரச்னையை சந்திக்க வேண்டியிருக்கும். பிரச்னை வருதேன்னு நினைச்சு செய்த வேலையை பாதியில் விட்டுவிட்டு வந்துடமுடியாது. நான் செய்ய வந்ததை நல்லபடியாக செய்து முடிக்கணும்ங்கிற ஆர்வம் இருந்ததால தான் தனியா நிறுவனம் வச்சு நடத்துகிற அளவுக்கு தைரியமாக முயற்சிக்க முடிகிறது.
பெண்களை எப்படி நடத்தினா அவுங்க சுதந்திரமாக நினைச்ச இலக்கை எட்ட முடியும்ன்னு பெற்றோர்களுக்கு தெரிகிறது. அதனால் பெண்பிள்ளைகளுக்கு கட்டுப்பாட்டினால் தடைகள் அவ்வளவாக இப்போது இல்லை என்று சொல்வேன், என்று அழுத்தமாக சொன்னார் அகிலா.