சில்க்குடன் என்னை ஒப்பிட்டு விமர்சனம் செய்யாதீர்கள் என்று நடிகை சானாகான் கூறியுள்ளார். சானாகான் தற்போது மலையாளத்தில் உருவாகும் சில்க் ஸ்மிதா வாழ்க்கை கதையான ‘கிளைமாக்ஸ் படத்தில் நடிக்கிறார். அவர் சில்க் வேடத்தில் நடிப்பதால் கேரளாவில் சானாகான் பற்றிய செய்திகள் தினம் தினம் வெளியாகி வருகின்றன. அவற்றில் சில சில்க்குடன் ஒப்பிட்டு வருகின்றனவாம். இதனால் கோபமடைந்திருக்கிறார் சானாகான்.
சில்க் வேடத்தில் நடிப்பது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், கூட்டத்தில் வந்து ஆடிவிட்டு போகும் நடிகை அல்ல சில்க் ஸ்மிதா. இந்திய சினிமா வரலாற்றில் தனக்கென தனி இடம் பிடித்திருக்கிறார். துணிச்சல் மிக்கவரான சில்க் வேடத்தில் நான் நடிப்பது எனது அதிர்ஷ்டம். அவருடன் என்னை ஒப்பிட்டு சிலர் விமர்சனம் செய்கிறார்கள். சில்க் ஸ்மிதா கதாபாத்திரத்தில்தான் நடிக்கிறேனே தவிர; நான் சில்க் ஸ்மிதா அல்ல. அதனால் விமர்சகர்கள் இத்துடன் தங்கள் விமர்சனங்களை நிறுத்திக் கொள்ள வேண்டும். இப்படத்தில் முழு ஈடுபாட்டுடன் நடித்து வருகிறேன். 32 நாட்கள் தினமும் 13 மணி நேரம் சூட்டிங்கில் பங்கேற்றேன். ஒவ்வொரு காட்சியிலும் புத்துணர்வுடன், கவர்ச்சியாக இருப்பது என்பது கடினம். சில்க் வேடம் என்பதால் பல்வேறு ஹீரோக்களுடன் காதல் காட்சிகளில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது, என்று கூறியிருக்கிறார்.