சைக்கிளை ஒரு கதாபாத்திரமாக வைத்து அதன் பார்வையிலே கதையைச் சொல்லி கடைசியில் அந்த சைக்கிளும் தன் உயிரையே தியாகம் செய்வதுபோன்று சுவாரஸ்யமாக சொல்லியிருக்கும் கதை பாகன். இதற்கு திரைக்கதை அமைத்து வசனம் எழுதி இயக்கி இருப்பவர் அறிமுக இயக்குனர் அஸ்லாம். பொள்ளாச்சியில் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் அவரது நண்பர்கள் சூரி, பாண்டி மூவரும் எந்த வழியிலாவது சீக்கிரமாக பெரும் பணக்காரர்களாக விரும்புகிறார்கள். இதற்காக பலரிடம் கடன்வாங்கி தொழில் தொடங்குகிறார்கள்.
ஆனால் எல்லாமே அவர்களை காலைவாரி விடுகிறது.
கடைசியாக பொள்ளாச்சி ஏரியாவிலே பெரும் பணக்கார பெண்களை மடக்கிவிட்டால் உடனடியாக பணக்காரன் ஆகலாம் என்று ஸ்ரீகாந்ந் முடிவு செய்கிறார். இதற்காக ஜனனி அய்யரை துரத்தி துரத்தி காதலிக்கிறார். ஜனனி இதை உண்மையான காதல் என்று நம்பி பெற்றோரை விட்டுவிட்டு ஸ்ரீகாந்துடன் வந்து விடுகிறார்.
வசதி இல்லாததால் காதலியுடன் குடும்பம் நடத்த முடியவில்லை. எனவே பணத்திற்காகதான் உன்னைக் காதலித்தேன் என்று சொல்லும் ஸ்ரீகாந்த், ஜனனியை விரட்டி விட்டு திருப்பூர் சென்று விடுகிறார். ஜனனியின் அப்பாவுக்கு பயந்து நண்பர்களும் பிரிந்து விடுகிறார்கள்.
திருப்பூர் செல்லும் ஸ்ரீகாந்துக்கு சிறுவயது முதலே ஜனனி தன்னை உயிருக்கு உயிராய் நேசித்த விபரம் தெரியவர மனம் மாறி உண்மையான காதலோடு ஜனனியை சந்திக்க ஸ்ரீகாந்த் செல்கிறார். அதற்குள் ஜனனி வெளிநாடு போய்விட அவரை பார்ப்பதற்காக கிடைக்கிற வேலையெல்லாம் செய்து பணம் சேர்க்கிறார். காதல் ஜோடி மீண்டும் சேர்ந்தார்களா? கதை சொல்லும் சைக்கிள் என்னவானது? என்பதை சுவாரஸ்யமாக சொல்வது மீதிக்கதை.
ஸ்ரீகாந்த் சைக்கிள் சுப்பிரமணியாக வந்து அப்ளாஸ் அள்ளுகிறார். ஆம்லேட்டா இருந்தாலும், புரோட்டாவா இருந்தாலும் எல்லாவற்றுக்கும் கணக்கு பார்த்து செலவழிப்பதும், ஒவ்வொரு நேரமும் பணம் சம்பாதிக்க அவர் செய்யும் குறுக்குவழி வியூகங்களும் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கின்றன. ஆனால் ஸ்ரீகாந்த் பேசும் கோவை தமிழ் ஒட்டவில்லை. ஜனனி, ஸ்ரீகாந்தை அலைய விடும் பொள்ளாட்சி காட்சிகளில் மட்டும் ஈர்க்கிறார்.
சூரி, பாண்டி கூட்டணி பல இடங்களில் சிரிக்க வைக்கிறார்கள். சில இடங்களில் பேசிப்பேசியே அறுக்கிறார்கள். இந்த கூட்டணி இன்னும் நல்ல காமெடியோடு வந்திருந்தால் "சூப்பர் ஹிட்" ஆகி இருக்கும்.
ஸ்ரீகாந்தின் அம்மாவாக வரும் கோவை சரளாவும் அப்பாவாக வருபவரும் சிரிக்க வைக்கிறார்கள்.
லஷ்மண் ஒளிப்பதிவு. இவர் படத்தின் முன் பாதியில் வரும் பொள்ளாச்சியின் அழகை அள்ளி இருக்கிறார். மறுபாதியில் இடம்பெறும் திருப்பூரின் பரபரப்பை சரியாக பதிவு செய்யவில்லை.
ஜேம்ஸ் வசந்தன் இசையில் பிண்ணனி இசை 'ஓகோ' என்று சொல்லும்படி இல்லையென்றாலும், ஜனனியின் அழகான கண்களை வர்ணிப்பதற்காக எழுதப்பட்ட 'இப்படி ஓர் கண்களை' என்ற பாடல் முணுமுணுக்க வைக்கிறது.
பணம் பணம் என்று அலையும் நாயகனுக்கு சைக்கிள் மீது மட்டும் அப்படி ஒரு காதல் எப்படி வந்தது? என்ற கேள்விக்கு பதில் தரும் காட்சிகளை படத்தில் சேர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
பணம் சம்பாதிக்க இவ்வளவு குறுக்கு வழியை தேடும் நாயகன் திருப்பூரை ஆப்பிரிக்கா என்று நினைத்து புலம்புவது நம்பும்படியாக இல்லை.
ஆயிரம் கோடிக்கு வசதி படைத்த பணக்கார பெண் ஜனனி, காதலுக்காக அடுத்த காட்சியிலே காதலன் ஸ்ரீகாந்துடன் வீட்டை விட்டு வருவதை நம்பமுடியவில்லை.
கிளைமாக்ஸ் காட்சி அமைத்த விதம் கலகலப்பு. மொத்தத்தில் "பாகன்" நகைச்சுவையை அள்ளித்தரும் புதிய கூட்டணி.