பேட்மிண்டன் போட்டிகளுக்கு 6 மாதம் பிரேக் விட்டிருக்கும் வீராங்கனை ஜூவாலா கட்டா, தெலுங்கு சினிமாவில் நடிப்பது குறித்துப் பேசிக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். தன்னைத் தேடி நிறைய வாய்ப்புகள் வந்துள்ளதாகவும், தனக்குப் பொருத்தமான கதை அமைந்தால் நடிப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்திய இரட்டையர் பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டா. இவரும் அஸ்வினி பொன்னப்பாவும் இணைந்து இரட்டையர் போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர். ஒலிம்பிக் போட்டியில்
பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தார் ஜூவாலா. இந்த நிலையில் தற்போது 6 மாத காலம் விளையாட்டுக்கு விடை கொடுத்துள்ளார்.
இந்தப் பின்னணியில், அவர் சினிமாவில் நடிக்கப் போவதாக ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். இதனால் அவர் இனியும் தொடர்ந்து பேட்மிண்டன் போட்டிகளில் ஆடுவாரா என்பது பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.
இதுகுறித்து அவர் கூறுகையில், தெலுங்குத் திரையுலிகிலிருந்து என்னைத் தேடி நிறைய வாய்ப்புகள் வந்துள்ளன. அதுதொடர்பாக பேச்சும் நடந்து வருகிறது. சினிமா என்பது வித்தியாசமான சவாலாகும். ஒரு வேளை நான் படத்தில் நடித்தால் அதை எல்லோருக்கும் தெரிவித்து விட்டே நடிப்பேன் என்று கூறியுள்ளார் 28 வயதான ஜூவாலா.
ஓய்வுக்குப் பிறகு மீண்டும் ஆட வருவீர்களா என்ற கேள்விக்கு, ஆறு மாத காலமாவது எனக்கு ஓய்வு தேவை. உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நான் சோர்வடைந்திருந்திருக்கிறேன். இந்த பிரேக் எனக்கு மிகவும் அவசியம். மீண்டும் விளையாடுவேன். 2016 ஒலிம்பிக் போட்டியில் நான் விளையாட வேண்டும் என்றால் இந்த ஓய்வு எனக்கு மிக மிக அவசியம்.
இப்போதைக்கு நான் ஓய்வு குறித்து சிந்திக்கவில்லை. பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றார் ஜூவாலா.
ஏற்கனவே இப்படித்தான் சானியா பின்னால் ஒரு காலத்தில் சினிமாக்காரர்கள் விரட்டிச் சென்றனர். சிம்பு கூட முயற்சித்துப் பார்த்தார். ஆனால் அவர் சிக்கவில்லை. நைசாக நழுவி விட்டார். இந்த நிலையில் இந்தியாவின் கவர்ச்சிமிக்க விளையாட்டு வீராங்கனைகளில் ஒருவரான ஜூவாலா கட்டா சினிமா பக்கம் திரும்பவிருப்பது எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.