தீபாவளி தினத்தில் புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆவது அந்தக்காலம். இப்போது எந்த சேனலில் என்ன புதுப்படம் போடுகிறார்கள் என்றுதான் பெரும்பாலோனோர் எதிர்பார்க்கின்றனர். இந்த வருட தீபாவளிக்கு சன் டிவியில் சிறப்புத்திரைப்படமாக ‘தல' அஜீத் நடித்த மங்காத்தா திரைப்படம் ஒளிபரப்பாகிறது. அதேநேரத்தில் விஜய் டிவியில் தளபதி விஜய் நடித்த நண்பன் படம் ஒளிபரப்பாகிறது. ஒரே நேரத்தில் தொலைக்காட்சிகளில் ‘தல'யும், ‘தளபதி'யும் நடித்த புதுப்படங்கள் ஒளிபரப்பாவதால் ரசிகர்களுக்கு
இந்த வருடம் அதிரடி தீபாவளியாக அமைந்துள்ளது.
இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக தீபாவளி தினத்தன்று மாலை 6 மணிக்கு சூப்பர் ஹிட் அதிரடித் திரைப்படம் மங்காத்தா ஒளிபரப்பாகிறது என்ற அறிவிப்பு களை கட்டத் தொடங்கிவிட்டது. அதற்கான முன்னோட்டம் இன்றிலிருந்தே சன் டிவியில் அரை மணி நேரத்திற்கு ஒருமுறை ஒளிபரப்பாகிறது. தீபாவளி தினத்தன்று அஜித் நடித்த திரைப்படம் வெளியாகவில்லை என்று கவலைப்பட்ட ரசிகர்கள் சன் டிவியில் மங்காத்தாவைப் பார்த்து ‘தல' தீபாவளியை உற்சாகமாகக் கொண்டாடலாம்.
விஜய் டிவியில் காலை 11 மணிக்கு மாதவன், ஆர்யா, அமலாபால், சமீரா ரெட்டி நடித்த ‘வேட்டை' புத்தம் புதிய திரைப்படம் ஒளிபரப்பாகிறது.
விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் நடித்த நண்பன் திரைப்படம் விஜய் டிவியில் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகிறது. ஒரே நேரத்தில் தீபாவளி தினத்தன்று அஜீத், விஜய் மோதிக்கொள்கின்றனர். இதன் மூலம் ரசிகர்கள் தல - தளபதி தீபாவளியை கொண்டாடலாம்.
இதைத் தவிர விஜய் டிவியில் துப்பாக்கி படத்தின் சிறப்பு கண்ணோட்டோம், கும்கி குழுவினருடன் விக்ரம் பிரபு கொண்டாடும் தீபாவளி, ‘என் தங்க மகன்' விஜய் பற்றி சோபா சந்திரசேகர் பகிர்ந்து கொள்ளும் பேட்டி, ஆர்யா ஸ்பெசல் என விஜய் டிவியில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளும் ஒளிபரப்புகின்றனர். இதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.