ஒரு வழியாக எந்தெந்தப் படங்கள் தீபாவளிக்கு வரும்.. என்ற லிஸ்ட் தயாராகிவிட்டது. அதன்படி ஜஸ்ட் 5 படங்கள்தான் இந்த தீபாவளிக்கு. இந்தப் பட்டியலில் தவறிப் போன மூன்று படங்கள் தீபாவளிக்கு இரு வாரங்கள் கழித்து வெளியாகின்றன.
அஜந்தா
தீபாவளிக்கு நான்கு நாட்கள் முன்னதாகவே வந்திருக்கும் படம் அஜந்தா. இளையராஜா இசையமைத்துள்ளார் என்பதைத் தவிர வேறு எதுவும் இந்தப் படம் குறித்து தெரியாது. இன்று முதல் காட்சிக்கு வந்த 300 பேருக்கு படத்தின் பாடல்கள் விசிடியை கொடுத்துள்ளார் இயக்குநரும் தயாரிப்பாளருமான ராஜ்பா ரவிசங்கர்.
காசி குப்பம்
காசி குப்பம் ஸ்டில்களெல்லாம் ஏதோ பிட்டு படம் ரேஞ்சுக்கு உள்ளன. நரேன், லிவிங்ஸ்டன் என ஒன்றிரண்டு தெரிந்த முகங்கள். மற்றவர்கள் புதுமுகங்கள். அருண் இயக்கியிருக்கிறார். நவம்பர் 13-ம் தேதி வெளியாகிறது.
போடா போடி
சிம்பு - வரலட்சுமி நடித்துள்ள படம். திடீர் பலகாரம் மாதிரி திடீரென தீபாவளிக்கு வந்துள்ளது. ஜெமினி நிறுவனம் வெளியிடும் இந்தப் படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவா. இந்தப் படம் தன்னை தேற்றிவிடும் என ரொம்பவே நம்பிக் கொண்டிருக்கிறார் தயாரிப்பாளர் நேமிச்சந்த் ஜபக்.
அம்மாவின் கைப்பேசி
புலம்பல் ஸ்பெஷலிஸ்ட் ஆகிவிட்ட தங்கர் பச்சானின் அம்மாவின் கைப்பேசிதான் இந்த தீபாவளிக்கு ரெடியான முதல் படம். அவரது வழக்கமான சென்டிமெண்ட் படம்தான். இந்தப் படம் ஜெயித்தால் சாந்தனுவுக்கு புதிய திருப்புமுனை கிடைக்கும். ஆனால் இயக்குநருக்கும் சரி, ஹீரோவுக்கும் சரி... வாய் வாய்.. ரொம்பவே வாய். அது மட்டும் கொஞ்சம் அடங்கினா, மத்ததெல்லாம் தானாகவே வரும்!
துப்பாக்கி
விஜய் - முருகதாஸ் கூட்டணியில் ஏகப்பட்ட வில்லங்கங்கள், பஞ்சாயத்துகள், சிராய்ப்புகளுடன் வரும் படம் துப்பாக்கி. பொதுவாகவே இந்த ஆண்டு பெரிதாக பேசப்பட்டு, பெரும் பட்ஜெட்டில் வரும் படங்கள் எல்லாமே ஊத்திக் கொண்டன. அந்த ராசி இந்தப் படத்துக்கும் தொடராது என நம்புவோம்.
இந்த தீபாவளிக்கு வந்தே தீருவேன் என துப்பாக்கியுடன் மல்லுக்கட்டிய கள்ளத் துப்பாக்கி சத்தத்தையே காணோம். நீர்ப்பறவை நவம்பர் 23-க்கு தள்ளிப் போயிருக்கிறது. கார்த்தியின் அலெக்ஸ் பாண்டியனும் நீர்ப்பறவையுடன் வெளியாகக் கூடும். நீதானே என் பொன்வசந்தம் டிசம்பர் 14-ல் வெளியாகிறது.