12-12-12 அதிசய நாளான நேற்று தமிழ் சினிமா உலகின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த், தனது 63-வது பிறந்த நாளை தனது ரசிகர்களுடன் கொண்டாடினார். அவரது சிறப்புகள் பற்றி இங்கே சில பிரபலங்களின் கருத்து. டைரக்டர் எஸ்.பி.முத்துராமன்:- ரஜினிகாந்த் ஒரு சாதாரண நடிகரல்ல. சுமார் 25 படங்களை அவ ருக்காக டைரக்டு செய்துள்ளேன். 'புவனா ஒரு கேள்விக்குறி' படத்தை முதன்முதலாக ரஜினிக்காக டைரக்டு செய்தேன். அவருக்கு சிவகுமாரோடு சேர்ந்து
ஒரு சிறிய ரோல் அவ்வளவுதான். ஆனால் சூட்டிங் கொஞ்ச நாள் சென்றபிறகு அவரிடம் உள்ள நடிப்பாற்றலைக் கண்டு வியந்து போனேன். இப்படிப்பட்ட திறமை உள்ளவர்களுக்கு இதுமாதிரி சிறிய ரோல் காணாது மிகப்பெரிய 'ரோல்' கொடுக்க வேண்டும் என எண்ணினேன்.
ஏ.வி.எம். உடன் இணைந்து ‘ராஜா சின்ன ரோஜா’ படம் இயக்கினேன். தயாரிப்பாளர் சரவணன், ‘ராஜா சின்ன ரோஜாவோட’ என்ற பாடலை குழந்தைகளுக்காக கார்ட்டூன்களை இணைந்து பாடல் காட்சிகளில் வைக்க விரும்பினேன். ஆனால் அதே படத்தில் வந்த மற்றொரு பாடலான சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டா பாடல்தான் குழந்தைகளிடம் மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் கவர்ந்தது. அதன்பிறகே சூப்பர் ஸ்டார் என்ற வார்த்தை அவர் பெயரோடு ஒட்டிக் கொண்டது.
டைரக்டர் மகேந்திரன்:- பட அதிபர் வேணு செட்டியாரிடம் ‘முள்ளும் மலரும்’ படத்தில் ரஜினியை ஹீரோவாக போடவேண்டும் எனக் கூறினேன். ஆனால் அவரோ ரஜினிக்கு வில்லன் கேரக்டர்தான் பொருந்தும். ஏனென்றால் அவர் கறுப்பு என்றார். ஆனால் நான் விடாப்பிடியாக ரஜியை ஹீரோ ஆக்கினேன். அதனால் அப்படத்தின் சூட்டிங்குக்கூட வேணு செட்டியார் வருவதை தவிர்த்து விட்டார்.
ஆனால் ‘முள்ளும் மலரும்’ படம் 1978-ல் வெளியானபோது அது மாபெரும் ஹிட்டானது. அது ரஜினிகாந்தின் விருப்பமான படமாகவும் ஆனது. மேலும் எனது டைரக்ஷனில் 1980-ல் வெளிவந்த ‘ஜானி’ படமும் ரஜினியை அடுத்த உச்சிக்கு எடுத்துச் சென்றது.
கடந்த சில வாரங்களுக்கு முன் அவரை சந்தித்தேன். உலக அளவில் அவருக்கு ரசிகர்கள் இருந்தாலும், வானளாவிய புகழ் இருந்தாலும் அவர் மிகவும் எளிமையானவர். கடுமையான உழைப்பாளி. டைரக்டர்
கே.வி.ஆனந்த்:- டைரக்டர் சங்கர் எனக்கு ‘சிவாஜி’ படத்தில் ஒளிப்பதிவாளராக வாய்ப்பு தந்தபோது ‘அயன்’ படத்துக்கான திரைக்கதையுடன் நான் தயாராக இருந்தேன். எனது வீட்டில் நான் ரஜினி படவாய்ப்பு பற்றி சொன்னபோது எனது குழந்தைகள் முதல் அம்மா வரை அனைவரும் உற்சாகத்தில் கூச்சலிட்டார்கள். பிறகு அவர்கள் உடனே டைரக்ஷன் பண்ணும் திட்டத்தை கைவிட்டு ரஜினி படவாய்ப்பை ஏற்றுக் கொள்ளும்படி கூறினார்கள். இந்த சம்பவமே ரஜினியோட பிரபலத்துக்கு சிறந்த உதாரணம் என சொல்லலாம்.
ரஜினியின் மற்றொரு சிறப்பம்சம். மற்ற நடிகரை போல இல்லாமல் தொழிலை மிகுந்த ஈடுபாடோடு மனம் லயித்து செய்பவர். ஒரு சூட்டிங் நடந்தால் அந்த இடத்தைவிட்டு சூட்டிங் முழுமையாக முடியும் வரை எங்குமே போகமாட்டார். நான் ஷாட் ரெடி என்று சொல்லும் நேரத்தில் ஒரு வினாடிகூட தாமதிக்காமல் வந்து நிற்பார். ரஜினி, ரஜினிதான்.
அதாவது அவரது ஸ்டைலில் எந்த மாற்றமும் இருக்காது. ஆனால் ‘சிவாஜி’ படம் அவரது நடிப்பாற்றலுக்கு ஒரு பிரமாண்டமான எடுத்துக் காட்டுன்னு சொல்லலாம்.
டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணா:- ரஜினிகாந்த் ஒரு உன்னதமான நடிகர். அவர் தனது வித்தியாசமான, புத்திசாலித்தனமான நடிப்பாற்றல் மூலம் தனது வாழ்க்கையை திசை திருப்பியவர். அவர் தனக்கு வானளாவிய புகழ் உண்டு என்பதை நன்கு உணர்ந்து கொண்டிருக்கிறார். மேலும் ‘பாட்ஷா’ படத்துக்கு பிறகு தனது மார்க்கெட் மதிப்பும், புகழின் உச்சத்தை எட்டியுள்ளதாகவும் அவர் அறிவார். அதன்பிறகு அவர் தனக்குத்தானே, தனக்கே உரித்தான பாணியை வகுத்துக் கொண்டார். அதன் விளைவாக தனது படங்களை குறைத்துக் கொள்ள ஆரம்பித்தார்.
80-களில் ஒரு வருடத்துக்கு 4 அல்லது 5 படங்கள் கொடுத்துக் கொண்டு இருந்தார். அதன்பிறகு வருடத்துக்கு ஒரு படம் மட்டும் கொடுத்துக் கொண்டிருந்தார். ஆனால் ‘பாட்ஷா’வுக்கு பிறகு 2 அல்லது 3 வருடதுக்கு ஒரு படம் என சூப்பர்ஹிட் படம் கொடுத்து ரசிகர்களிடையே ஒரு பிரமாண்டமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளார். அதுதான் அவரது தனித்தன்மை.
நடிகை மீனா:- ரஜினியை ஒரு மந்திரக்கோல் இல்லாத ‘வசியக்காரர்’ என்றுதான் சொல்ல வேண்டும். காரணம், அவர் தனது வித்தியாசமான ஸ்டைல், நடிப்பினால் உலக ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்துள்ளார். எல்லா நடிகைகளும் ரஜினியோடு நடிக்கிறார்கள்.
ஆனால் அவர்களுக்கெல்லாம் கிடைக்காத ஒரு பெருமை எனக்கு உண்டு. அதாவது நான் 9 வயது குழந்தையாக இருக்கும்போதே அவருடன் ‘அன்புள்ள ரஜினிகாந்த்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றேன். அதன்பிறகு அவருடன் கதாநாயகியாகவும் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. இப்படி அவருடன் ஒரு உன்னதமான உறவு மற்ற எந்த நடிகைகளுக்கும் கிடையாது.
‘எஜமான்’ படப்பிடிப்பின்போது ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் சூட்டிங் நடந்தது. அந்த இடத்தில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. ரஜினி ஒரு இருக்கையில் அமர்ந்திருந்தார். அப்போது பெருந்திரளான ரசிகர் கூட்டம் என்னை நோக்கி மீனா, மீனா என்று உற்சாகமாக கத்தினார்கள். அதைப்பார்த்த ரஜினி, ஒரு குழந்தை நட்சத்திரமாக இருந்த நீ இன்று ஒரு பிரபலமான நடிகையாக உயர்ந்து இருக்கிறாய் என்று இதயத்தின் அடித்தளத்திலிருந்து சொன்னார். யாருக்கு வரும் இந்த பெருந்தன்மை?
மற்றொரு முறை, ‘முத்து’ படத்தின் “தில்லானா தில்லானா” பாடல் சூட்டிங்கில் ரஜினி உள்பட எல்லோரும் தீவிர நடனப்பயிற்சி செய்து கொண்டிருக்க நானோ ஒரு இருக்கையில் அமர்ந்திருந்தேன். அவர் திடீரென வேகமாக என்னிடம் வந்து முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு, என்ன நீ இப்படி உட்கார்ந்து இருக்கிறாய். மற்ற நடிகைகள் இதுமாதிரி நேரத்தில் என்னோடு எப்படி ஒத்துழைப்பார்கள் தெரியுமா? எனக் கேட்டார். நான் ஒரு வினாடி மிரண்டு போனேன். ஆனால் மறு வினாடியே அவர் வாய்விட்டு தனக்கே உரிய ஸ்டைலில் உரக்கச் சிரிந்தார். இதுமாதிரி அவரை பற்றி நிறைய சொல்லலாம்.
நடிகை ரோஜா:- நான் இரண்டு படங்களில் மட்டுமே ரஜினியோடு நடித்துள்ளேன். அவரிடம் பல சிறப்பு உண்டு. ஒருமுறை ‘வீரா’ பட சூட்டிங்கின்போது மதிய வேளை. நான் தூங்கிக் கொண்டிருந்தேன். திடீரென பலத்த சிரிப்பொலி கேட்டு நான் எழுந்து பார்த்தபோது ஒரு நிமிடம் சிலிர்த்துப் போனேன். காரணம் என் அருகில் ரஜினி சார் எனக்கு ஒரு குடையை பிடித்துக் கொண்டு நின்றிருந்தார். அங்கு ஜன்னல் வழியாக சூரிய வெளிச்சம் என் மீது அதிகமாக விழுந்தது. நடந்ததை புரிந்து கொண்டு நானும் சிரித்தேன்.
மற்றொரு முறை ‘உழைப்பாளி’ பட சூட்டிங். ஒரு பாடல் காட்சியில் நாம் இருவரும் அரை டிரவுசரில் நடிக்கலாம் என அவரே யோசனை சொன்னார். சூட்டிங் ஆரம்பித்தபோது நான் அரை டிரவுசருடன் வந்தேன். ஆனால் அவரோ முழு பேன்ட்டுடன் வந்தார். கேட்டதற்கு நீதான் அரை டிரவுசரில் பார்க்க அழகா இருக்கிறாய் என்றார்.
மற்றொரு தடவை, நான் அவரை பார்த்து சிகரெட்டை தூக்கி வாயில் போடுவது, ஒரு கையால் தலையைக் கோருவது, இதைத்தவிர உங்களுக்கு என்ன தெரியும்? என பட்டென அனைவருக்கும் முன்பாக கேட்டு விட்டேன். அவர் எனது கமெண்ட்டுக்கு மிகப்பெரிய அளவில் ரியாக்ட் செய்வார் என நினைத்தேன். ஆனால் துளியும் ஈகோ இல்லாமல் சத்தமாக வாய்விட்டு சிரித்தார்.
நடிகை ராதா:- ரஜினியை அவரது எளிமையான குணமும், கர்வம் இல்லாத தன்மையும்தான் இந்த அளவுக்கு உயர்த்தி உள்ளன. எனது மாமியார் எப்போதும் என்னிடம் ரஜினி சினிமாவில் பார்ப்பதற்கு சக்தி வாய்ந்த, ஸ்டைல் நிறைந்த ஒரு ஹீரோவாகத் தோன்றுகிறார். ஆனால் பொது இடங்களில் மட்டும் சாதாரண மனிதரைப் போல வருகிறாரே? என்பார். அதற்கு நான் அவரிடம் சொல்வேன், அவர்தான் மனிதன்.
நடிகை குஷ்பு:- ரஜினிகாந்த் மூடுக்கு ஏற்றாற்போல நடந்து கொள்வார். சில சமயம் அன்பாக அரவணைத்து பேசுவார். சில சமயம் வெறும் ஹாய்யோடு சரி. நாங்கள் நிறைய விஷயங்களை பகிர்ந்து கொள்வோம். நமது அழைப்புகளுக்கு அவர் சரியாக மதிப்பு கொடுப்பார். சமீபத்தில் சிலர் அவரை சந்திக்க வேண்டி இருந்தது. நான் அவரை தொடர்பு கொண்டேன். உடனே அவர் அதற்கு மதிப்பு கொடுத்து அவர்களை தொடர்பு கொண்டு மறுநாளே சந்தித்தார்.
இன்னொரு விஷயம் ரஜினியின் சிறப்பு அவரிடம் உள்ள பணிவான தன்மை. உயர்ந்து விட்டோம் என்கிற பெருமை துளிகூட இல்லாத தன்மை. ரஜினிக்கு இன்னொரு பெயர் பணிவு என்றுகூட சொல்லாம்.