ஆதரவற்ற ஆண்ணன், தம்பி கதை. “பெண், போதைப்பொருள், கடத்தல்’ என வாழும் தாதாவின் கையாளாக அண்ணன், கல்லூரியில் படிக்கும் தம்பி, “என்கவுன்டரில்’ அண்ணனைப் போடத் துடிக்கும் காவல் அதிகாரியின் தங்கையோ... தம்பியின் காதலி(!) என வித்தியாச முடிச்சு. ஆனால் எல்லாவற்றையும் தொட்டு, பாதி வழியில் விட்டதால் “அல்லாடுகிறது’ படம்.
அறிமுக இயக்குனர் வினோத் ராகவ்விற்கு ஏற்பட்ட குழப்பங்கள் படம் நெடுக தெரிகின்றன. “தன் கதையில் நம்பிக்கை இல்லாமல், சொல்வார் பேச்சையெல்லாம் கேட்டு படம் எடுத்திருக்கிறார்’ என்பதை ஒவ்வொரு காட்சியும் தெளிவாக சொல்கிறது. நேர்க்கோட்டு கதையில், சம்பந்தமில்லாமல் காமெடி, பாடல்கள், “பாத்ரூம்’ வீடியோ என ஏகக் குழப்பங்கள்.
“கை’ என்கிற கைலாஷ் (போஸ் வெங்கட் - அருமையான நடிப்பு), தாதா குருஜியின் (“காதல்’ தண்டபாணி) வலது கரம். அவன் தம்பியாக சிவா (அறிமுகம் விஜித்). அண்ணனின் நிழல் வாழ்க்கை பற்றி அறியாத கல்லூரி மாணவனாக சிவா, காவல்துறை அதிகாரி துரையின் (சரண்ராஜ்) ஒரே தங்கை ப்ரியாவை (ஜோஷிமா) காதலிக்கிறான். துரையின் ஒரே குறிக்கோள் குருஜி கூட்டத்தை ஒழிப்பது! தம்பியைக் கொல்ல அண்ணனை ஏவுகிறார் குருஜி. “கை’யைப் போட்டுத் தள்ள துடிக்கிறான் காதலியின் அண்ணன். இப்படிப் போகும் கதையை... “தீயவை அழிந்து நல்லவை வெல்லும்!’ எனச் சொல்லி முடிக்கிறது “க்ளைமாக்ஸ்’.
நாயகன் விஜித்... தமிழ் படத்திற்கு அந்நிய முகம் என்றாலும், உச்சரிப்பில் வென்று விடுகிறார். ஜோஷிமா அழகாக இருக்கிறார். அளவாக ஆடுகிறார். அடுத்த படத்தில்தான், எதிர்காலம் நிர்ணயிக்கப்படும்! “கல்லூரிக் காமெடி’ என்கிற பெயரில், கஞ்சா கருப்பு அடிக்கும் லூட்டி, ரசிகனின் தலையில் பேரிடி! பரோட்டா சூரி, ஆரம்பக் காலங்களில் ஒத்துக் கொண்ட படம் போல! நகைச்சுவையும் இல்லாத, குணச்சித்திரமும் இல்லாத “டீக்கடை’ பிஸ்கெட்! படத்தில் ஒரே ஒற்றுமை... எல்லோரும் “தெய்வத்திருமகள்’ விக்ரம் போல குழறிப்பேசுவது! மோசமான ஒலிப்பதிவுக்கு “ஆஸ்கர்’ உண்டென்றால், பரிசீலனை இல்லாமல் இந்தப் படத்திற்கு கொடுத்து விடலாம்.
இஷான் தேவ்வின் இசையில் “கண்ணே கண்ணீர் சிந்தாதே...’யும் “கரையோரக் காற்றாக...’ பாடலும் தேறுகின்றன. படம் நகரும் வேகத்திற்கு இயக்குனருக்கு “நத்தை’ விருது நிச்சயம்.
மொத்தத்தில் கை - அல்லக் “கை’