என்னவோ தெரியாது முதலாவது பாகம் பார்த்ததுமே Underworld திரைப்படம் பிடித்துப்போய் மூன்று பாகங்களையும் ஒரு நாளிலேயே பார்த்து முடித்தேன். இங்கு எழுதும் விமர்சனம் மூன்றாம் பாகத்துக்கானது. வம்பயர்ஸ், வேர்வூல்ப் இடையில் ஜென்மத்துப் பகை. காலம் காலமாக இருவரும் ஒருத்தரை ஒருத்தர் அடித்துக்கொள்கின்றனர். சாதாரண மனிதரை வம்பயர் கடித்தால் அவர் வம்பயராவார் அல்லது வேர்வூல்ப் கடித்தால் வேர்வூல்வ் ஆவார்.
அத்துடன் பலகாலம் சாகாவரம் பெற்றுவாழ்வர் (Immortality). திரைப்படத்தின் ஆரம்பமே அட்டகாசம். ஒரு குதிரைவீரன் காட்டுவழியே வருகின்றான். திடீரென அனைத்துப்பக்கங்களினாலும் வேர்வூல்ப்கள் அவனைத் துரத்துகின்றது. வழியில் தன்வழியில் குறுக்கிடும் வேர்வூல்ப்களை அடித்துவீழ்த்தியவாறே தன் கோட்டையை நோக்கித் தப்பி ஓடுகின்றான் அந்த வம்பயர் வீரன். கோட்டையினுள் நுழையும் வீரன் தன் தலைக்கவசத்தை அகற்றுகின்றான். அவன் அல்ல அவள். வம்பயர் அரசன் விக்டரின் அருமை மகள் சோன்யா. காட்சி அமைப்புகள் அபாரம். கதிரை நுனியில் உட்கார்ந்து பார்க்க வைக்க கூடிய காட்சியமைப்புகள் மற்றும் பிண்ணனி இசை.
உண்மையில் பார்க்கப்போனால் லைக்கன்சின் எழுச்சி (Rise of the Lycans) எனப்படும் மூன்றாம் பாகம் முதலாம் பாகமாக வந்திருக்கவேண்டும். லூசியஸ் எனப்படும் வேர்வூல்ப்பின் கதையே இது. சாதாரணமாக வேர்வூல்பாக மாறுபவர்கள் திரும்ப மனிதவுரு கொள்ள வாய்ப்பே இல்லை ஆனால் லூசியஸ் புதிய வலுவுடன் பிறக்கிறான். அதாவது விரும்பியபோது வேர்வூல்ப் வடிவம் கொள்ளவும் பின்னர் மனித வடிவம் கொள்ளவும் இவனால் முடிகின்றது.
முதலாம் பாகத்தில் இந்த லூசியசை நீங்கள் காணலாம் ஆனாலும் அவருடைய கதையை முழுமையாக காட்டவில்லை. மூன்றாம் பாகத்தில் தனியே லூசியசினுடைய கதையை காட்டுகின்றனர்.
வம்பயர்களின் சிறைக்கூடத்திலே பிறக்கும் இவனை முதலில் கொல்லத்துடிக்கும் வம்பயர் தலைவன் விக்டர் மனம்மாறி இவனை மையமாக வைத்து புதுத்திட்டம் தயாரிக்கின்றான். அதன்படி லூசியனை வம்பயர்கள் மத்தியில் ஒரு செல்லப்பிராணிபோல வளர்ப்பதுடன் அவனிடம் இருக்கும் அபாரமான ஆற்றலைக்கண்டு வியக்கின்றனர்.
லூசியனைப்போல பலரை உருவாக்கி வம்பயர்கள் அவர்களை காவல்நாய்களாகவும் அடிமைகளாகவும் நடத்த முடிவுசெய்கின்றனர். இதன்படி லூசியன் பசியாக இருக்கும் நேரத்தில் சாதாரண மனிதர்களை லூசியன் இருக்கும் சிறைக்கூடத்தினுள் அடைத்து வைக்கின்றனர். லூசியன் இவர்களை கடிப்பதனால் இவர்களும் லூசியனைப்போல ஒரு லைக்கன் ஆகின்றனர்.
இவ்வாறு உருவாகிய லைக்கன்கள் எவ்வாறு தமது எசமானரான வம்பயர்களை எதிர்த்து விடுதலைபெறுகின்றார்கள் என்பது மிகுதிக்கதை. சிறையில் அடைபடும் லூசியஸ் தன் சக லைக்கன் சகோதரர்களைப் பார்த்து இவ்வாறு கூவுவார்.
I’ve lived by their rules my entire life. I’ve protected them. envied them. and for what? To be treated like an animal. We are not animals! Is this want you want? We can be slaves, or we can be… LYCANS!
அருமையான நடிப்புத் திறமை அந்த மனிதரிடம். இத்தனை பழிக்குபழி வன்மம் வன்முறை மத்தியில் ஒரு அருமையான அழகான காதல் கதைவேறு இழையோடுகின்றது.
லூசியஸ் ஒரு லைக்கன், வம்பயர்களின் மூத்த தலைவர்களில் ஒருவனான விக்டரின்
மகளுடன் காதல் கொள்கின்றான். இருவரும் ஒருவரை ஒருவர் விரும்புவதுடன் காதலுக்குமேல் ஒரு படிசென்று உடலுறவுவேறு கொள்கின்றனர். இதையறியும் விக்டர் மகள்மீது தீராக்கோபம்கொள்கின்றான். சாதாரணமாக எங்கள் தமிழ் திரைப்படங்களில் வரும் சாதி பிரைச்சனைபோலவே இது.
வம்பயர்களின் பார்வையில் லைக்கன்கள் எல்லாரும் மிருகங்கள். மிருகத்துடன் தன்மகள் காதல்வயப்படுவதை எந்த அப்பன் விரும்புவான்????
இவர்கள் காதல் வெற்றிபெற்றதா இல்லையா மற்றும் லைக்கன்கள் வம்பயர்களின் கோட்டையைக் கைப்பற்றினார்களா இல்லையா என்பதை திரைப்படத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.