மனைவி விவாகரத்து செய்துவிட்டு சென்றுவிட, வாழ்க்கை வெறுத்து உதவாக்கரை அப்பாவாக வாழ்கின்றார் Bud Johnson. வயது பன்னிரண்டு என்றாலும், வீட்டையும், அப்பாவையும், தன்னையும் பராமரிக்கும் பொறுப்பை அநாசயமாக எடுத்து நடத்துகின்றாள் மகள் Molly. இப்படியாக இவர்கள் இருக்க, நாட்டில் ஜனாதிபதி தேர்தல் வருகின்றது. புத்திசாலியான Molly, நாட்டின் இறைமை, அரசியல் என்பவற்றில் மிகவும் அக்கறை உடையவள்; Bud’ஓ அதற்கு நேர் எதிர் அரசியல் பற்றிய
அறிவிலும், ஆர்வத்திலும். தேர்தல் அன்று பாடசாலை செல்லும் Molly, அப்பாவை வாக்குப் போடும்படி வற்புறுத்திவிட்டு செல்லுகின்றாள். பாடசாலை முடிய Molly’யும், Bud’உம் வாக்குச் சாவடியில் சந்திப்பதாக ஏற்பாடு. எதிலும் உதவாக்கரையாக இருக்கும் Bud’க்கு அன்று நாள் சரியில்லை — அன்று அவர் அவரது வேலையிலிருந்து நீக்கப் படுகின்றான். கவலைக்கு இலகுவான தீர்வாக, Bud தவறணைக்குச் சென்று ஊத்திப் போட்டுக்கொண்டு படுத்துவிடுகின்றார். இங்கே அப்பாவுக்காக வாக்குச் சாவடியில் காத்திருக்கிறாள் Molly. தகப்பன் வராமல்போக, வாக்குச் சாவடி மூடப்படும் தருவாயிலிருக்க, அங்கேயிருக்கும் வேலையாட்களிற்கு கடுக்காய் கொடுத்துவிட்டு, தகப்பனிற்காக தான் கள்ள ஓட்டு போட முயல்கின்றாள் Molly. அப்பாவிற்காக கள்ளக் கையெழுத்துப் போட்டுவிட்டு, வாக்குச்சீட்டை பெட்டியில் போடும் தருவாயில், மின்சாரம் சாவடியில் தவறுதலாக துண்டிக்கப் பட்டுவிட இவள் இட்ட வாக்கு சீராக பதியப் படவில்லை (அமெரிக்காவில் வாக்குப் பெட்டியெல்லாம் இப்போது இலத்திரனியலாக்கப் பட்டுவிட்டது.) இப்போது வெளியுலகின் பார்வையில், Bud வாக்களித்து விட்டாலும், அது கணக்கிடப் படவில்லை.
சாதாரணமாக அது ஒரு பிரச்சனையில்லை; ஆனால் இந்த முறை நிலைமை சாதாரணமில்லை — நடாளாவிய ரீதியில் அமெரிக்காவின் இரு ஜனாதிபதி வேட்பாளரிற்கான வாக்குகளின் எண்ணிக்கை சமப்பட்டுவிட, இப்போது Bud’இன் கணக்கில் எடுக்கப் படாத வாக்கு ஒன்றுமட்டுமே அமெரிக்காவின் ஜனாதிபதியை தீர்மானிக்கும் அதிகாரத்தைப் பெற்றுவிடுகின்றது. இப்படியான ஒரு நிலையைத்தான் “Swing Vote” என அழைப்பார்கள்.
இப்போது, அரசியல் பிரச்சாரத்திற்காக சாதாரணமாக பல மில்லியன் டாலர்களை செலவழிக்கும் இரு கட்சிகளும், தனி மனிதனை தன்பக்கம் இழுப்பதற்காக, வரைபடத்திலேயே இல்லாத குக்கிராமமான Bud’இன் ஊருக்கு வந்து இறங்குகின்றன. தண்ணி காணாத உடலும், ஊத்தை உடுப்புமாக இருக்கும் Bud ஒரே நாளில் நாடளாவிய பிரபல்யமாகி விடுகின்றான். திடீர் பிரபல்யத்தினால் Bud குழம்பிப் போனாலும், அப்போதும் அசையாமல் நிற்கின்றாள் Molly. இந்த நிகழ்வை பயன்படுத்தி அப்பாவை நல்வழிப் படுத்தலாம் எனவும் முயற்சிக்கின்றாள். என்றாலும் பணத்தை அள்ளிக் கொட்டும் இரு ஜனாதிபதி வேட்பாளர்களின் முயற்சிகள், Bud’ஐ மேலும் மேலும் Molly’யை விட்டுப் பிரிக்கின்றன. இந்த அரசியல் சகதியிலிருந்து Bud’உம், Molly’யும் எவ்வாறு மீளுகின்றார்கள், Bud’இன் ஓட்டு யாருக்கு போய்ச் சேருகின்றது என்பதை படம் சொல்கின்றது.
Bud ஆக வரும் Kevin Costner அந்த உதவாக்கரைப் பாத்திரத்தில் வந்து பொருத்தமாக வெறுப்பேத்துகின்றார். என்றாலும், இடையில், விட்டுச் சென்றுவிட்ட மனைவியை சந்திக்கும் காட்சியில் பரிதாபப் படவும் வைக்கின்றார். இருந்தாலும், படத்தின் கனத்தை பெரும்பாலும் தாங்கிச் செல்வது Molly’யாக வரும் Madeline Carroll‘தான். அலட்டிக் கொள்ளாமல் செய்திருக்கின்றார். படம் பெரும்பாலும் நகைச்சுவைதான் என்றாலும், தேவையான இடத்தில் எல்லாம் மனத்தைக் கனக்க வைக்கின்றது. கடைசிக் காட்சியில் Bud’இன் பேச்சும் அருமை; படத்தை முடித்திருக்கும் விதமும் அருமை (என்றாலும் அநேகருக்குப் பிடிக்காது என்று நினைக்கின்றேன்.) நம்ப முடியாத கதையை, சுவாரசயமாக தந்திருக்கின்றார்கள். பார்க்கலாம்; கொஞ்சம் நகைச்சுவை, கொஞ்சம் சென்டிமென்ட் என்று அலுப்பில்லாமல் போகும்.