16ஆம் நூற்றாண்டின் இங்கில்லாந்து அரசன் 8ம் ஹென்றி காலத்தில், பணம், புகழ், செல்வாக்கு எவ்வாறு இரு ஆருயிர் சகோதரிகளின் வாழ்க்கைகளை சிதைக்கின்றது என்பதை படம் எடுத்துக்காட்டுகின்றது. படத்தில் வரும் முக்கிய பாத்திரங்கள் யாவரும் இங்கிலாந்தின் சரித்திரத்தில் உண்மைப் பாத்திரங்கள்; பெரும்பான்மையான சம்பவங்களும் உண்மைதான். அவற்றிற்கு ஒரு கற்பனையான கதைப் பிணைப்பை கொடுத்து மனத்தை கனக்க வைக்குமாறு படத்தை எடுத்திருக்கின்றார்கள்.
ஒரு நாவலை தழுவி எடுக்கப் பட்டிருந்தாலும், எந்தவித பிடியையும் நழுவவிடாமல் படம் ஓடுகின்றது (நான் அந்த நாவலை படிக்கவில்லை.)
ஓரளவு செல்வாக்கான Boleyn குடும்பத்தில் பிறந்த சகோதரிகள் Anne’உம், Mary’யும். Anne (Natalie Portman) கூர்மையான சிந்தனை, பெரிய வாழ்க்கைக்கான இலட்சியம் என்பவற்றோடு இருப்பவள்; Mary (Scarlett Johansson) அதற்கு எதிர் — அழகில் Anne’ஐ விட சற்றே அதிகம் என்றாலும், காதல் நிறைந்த, சிக்கலற்ற வாழ்க்கை போதும் என்று இருப்பவள். இவர்கள் இருவரின் வாழ்க்கைகளையும் வைத்து அரசியல் சதுரங்கம் ஆடத் தீர்மானிக்கின்றார்கள் இவர்களின் மாமனும், அப்பாவும். அரசன் Henry’யின் (Eric Bana) மனைவி தொடர்ந்து ஆண் வாரிசை தர தவறிவர தவிப்பில் இருக்கின்றான் Henry. இதன்பின் அரசன் எப்படியும் இன்னொரு பெண் துணையைத் தேடுவான் என்று உணரும் இவர்கள், அரசனின் கவனத்தை Boleyn பெண்களின் பக்கம் திருப்பத் திட்டம் தீட்டுகின்றார்கள். சமிபத்தில் Mary திருமணம் செய்து விட்டதால், அரசனை அடிபணியவைக்க Anne’ஐ தயார்ப் படுத்துகின்றார்கள். பகடைக்காய் போல தன்னை பயன்படுத்த இவர்கள் முயல்வது பிடிக்கவில்லை என்றாலும், வரப்போகும் செல்வாக்கை எண்ணி அந்தத் திட்டத்திற்கு சமமதிக்கின்றாள் Anne. இவர்களின் இருப்பிடத்திற்கு அரசன் Henry வருகை தரும் தருணத்தில் இவர்களது திட்டம் ஆரம்பிக்கின்றது. என்றாலும், இவர்களது திட்டத்திற்கு அடியாக, Henry’யோடும் அரச பட்டாளத்தோடும் வேட்டையாட செல்லும் Anne’ன் துடுக்குப் போக்கினால் அரசன் காயப்பட்டுப் போகின்றான். Anne’ஐ மீண்டும் முன்னணியில் வைத்திருந்து அரசனின் கோபத்திற்கு மேலும் ஆளாக விருப்பமில்லை; அதே சமயம் அரசனையையும் தங்களது வலையிலிருந்து தப்பிக்க விட விருப்பமில்லை. எனவே வேறு ஒரு கேவலமான திட்டத்திற்குப் போகின்றனர். காயம் பட்டுகிடக்கும் Henry’ஐ பராமரிக்க இப்போது Mary’ஐ அனுப்புகின்றார்கள். ஏற்கனவே திருமணமான Mary, கபடம் எதுவுமில்லாது தனது பணியைச் செய்ய, சபலக்காரணான Henry, அவளின் மீதில் மையல் கொள்கின்றான். எனவே, தனது விடுமுறையை முடித்துச் செல்லும்போது, Mary’ஐயும் குடும்பத்தையும் அரண்மனை வேலைக்கு வரும்படி ஆணையிட்டுவிட்டுச் செல்கின்றான் Henry. அரசனின் ஆணை Mary’ஐ வைப்பாட்டியாக வைத்துக்கொள்வதற்கான போர்வையென்று அனைவருக்கும் தெரிகின்றது. தங்களது திட்டம் பலித்ததாக பூரித்துப் போகும் அப்பாவும், மாமனாரும்; எதிர்த்துப் பேச வாயில்லாத கணவன்; தனது அபிலாசையை களவெடுத்துக் கொண்டதாக குற்றச்சாட்டும் சகோதரி Anne; இந்தக் குழப்பங்களுக்குள் நடப்பவை எதிலும் சற்றும் நாட்டம் இல்லையென்றாலும் அரசனது ஆணையையும் குடும்பத்தின் எதிர்காலத்திற்காகவும் கற்பை பலிகொடுக்கின்றாள் Mary.
தனது எதிர்காலத்தை Mary திருடிவிட்டதாக தொடர்ந்து குற்றம் சாட்டும் Anne, எந்தவிதத்திலாவது தனது எதிர்காலத்தை நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற அவாவில் ஏற்கனவே திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கும் வேறு ஒரு அரச பிரபல்யத்தை கைக்குள் போட்டு இரகசியத் திருமணம் செய்து கொள்கின்றாள். இதை அறியவரும் Anne’இன் குடும்பம், Anne’ஐ பிரான்ஸ் நாட்டிற்கு அனுப்பி விடுகின்றது. அதற்கும், Mary’தான் தன்னைக் காட்டிக் கொடுத்ததாக குற்றம் சாட்டுகின்றாள் Anne.
Anne பிரான்ஸ் போய்விட, Mary’க்கும் Henry’க்கும் இடையிலான உறவு வலுப்படுகின்றது. Mary காதல் வயப்படுகின்றாள்; கூடவே கர்ப்பமும் அடைகின்றாள். கர்ப்ப காலத்தின் ஆரம்பத்தில் வரும் உடற் சிக்கல் ஒன்றினால், 24 மணிநேரமும் படுக்கையில் ஓய்வெடுக்க வேண்டும் என வைத்தியர்களினால் பணிக்கப் படுகின்றாள் Mary. மீளவும், பெண்துணையின்றி சபலக் காரணான Henry; Mary’யினது தகப்பனாரிற்கும், மாமனிற்கும் மீண்டும் தலையிடி. வழமைபோல தங்களிற்குத் தெரிந்த ஒரேயொரு தீர்வை எடுக்கின்றார்கள் — இப்போது Mary’யின் இடத்தை நிரப்புவதற்கு, Anne’ஐ பிரான்ஸிலிருந்து வரவழைக்கின்றார்கள்!
பிரான்ஸிலிருந்து புதிய கோலத்துடன் வந்து இறங்குகின்றாள் Anne — அப்பாவினது, மாமாவினதும், அரசனதும் பேச்சுக்கெல்லாம் மாடுமாதிரி தலையாட்டுவதை விடுத்து, அழகினாலும், புத்தியினாலும், நரித்தனத்தினாலும் தனது வாழ்க்கையைத் தீர்மானிக்க ஆரம்ப்பிக்ககின்றாள் Anne. கூப்பிட்டதும் கட்டிலுக்கு வரமாட்டேன் என்றுகொண்டு, அதே சமயம் Henry’ஐ கொஞ்சம் கொஞ்சமாக வசியப் படுத்துகின்றாள் Anne. தனது அபிலாசைக்கு குறுக்கே நிற்கும் அனைவரின் வாழ்க்கையையும் நசித்துத் சின்னாபின்னப் படுத்துகின்றாள். அதற்குள் கூடப் பிறந்த சகோதரி Mary, Henry’யின் உத்தியோக பூர்வ மனைவி, எல்லோரும் அடங்கும். Henry’யின் முதல் மனைவியை விவாகரத்து பண்ணவைத்து அரசியாக சிம்மாசனம் ஏறுகின்றாள். இப்படியாக பலரின் வாழ்வினையும் சிதைத்து தனது இலட்சியத்தை எட்டும் Anne, எப்படி அதை அனுபவிக்க முடியாமல் போகின்றது என்பது மிகுதிக் கதை.
படத்தில் சகல கதாபாத்திரங்களும் கச்சிதம். வழமையாக நெஞ்சத்தை அள்ளிப்போகும் பாத்திரங்களில் வரும் Natalie Portman (“Star Wars” படங்களில் Senator Padme’யாக வருபவர்) வில்லியான பாத்திரத்தில் வெளுத்து வாங்குகின்றார்! அதிலும் கடைசியாக தனது வாழ்வைத் தானாகவே சிதைத்து தடுமாறும்போதில் மனம் இரங்கவும் வைக்கின்றார். Scarlett Johanson’ற்கு இயல்பாக ஒட்டுகின்ற பாத்திரம். அடிக்கு மேல் அடிவாங்கிய பின்னரும் சகோதரியையும், அரசனையும் காதலிக்கின்ற ஒரு பாத்திரத்தை அலட்டிக் கொள்ளாமல் செய்திருக்கின்றார். வசன அமைப்புகள், உடை, மற்றும் நகைகள் எல்லாம் அந்தமாதிரி.
இப்படியான வரலாற்றுக் படங்களை மேலைத்தேயர்கள் எடுக்கக் கூடியதாக இருப்பதற்கு காரணம், அந்தளவு தூரம் வரலாற்றுக் குறிப்புகள் இவர்களிற்கு கிடைக்கக் கூடியதாக இருப்பதுவே. இந்தியாவில் என்னதான் செழிப்பான அரச பரம்பரைகள் வாழ்ந்திருந்தாலும், வரலாற்றில் உண்மையில் என்ன நடந்தது என்பது எங்களிற்கு தொடர்ந்து கேள்விக்குறியாக இருப்பது மிகவும் கவலைக்குரிய் விடயம். வரலாற்றில் ஈடுபாடு உள்ளவர்களிற்கு ஒரு விருந்து இந்தப் படம்.