Twilight சினிமா விமர்சனம்


என்னவோ தெரியாது, இங்கே மேற்கத்தைய மக்களிற்கு இரத்தக்காட்டேறி (vampire) சம்பந்தப்பட்ட படங்கள் என்றால் அப்பிடியொரு நாட்டம். அப்பிடிப்பட்ட படம் எப்பிடியும் வருடத்திற்கு ஒன்றாவது வந்து விடும். அப்பிடியிருக்கையில் இரத்தக்காட்டேறியை மையமாகக் கொண்டு Stephenie Meyer எழுதிய Twilight புத்தகத்தொடர் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமாகிவிட அதை
விட்டுவைப்பார்களோ? அந்தத்தொடரின் முதலாவது பாகம்தான் இந்தப் படம்.

தாயார் மீள் திருமணம் செய்துகொண்டு, புது கணவனின் தொழில் காரணத்தால் அவருடன் வேறிடம் செல்லவேண்டியிருப்பதால், கொதிக்கின்ற Arizona மாநிலத்திலிருந்து, சொந்தத் தகப்பன் இருக்கும், எப்போதும் வானம் அழுது வடியும் Washington மாநிலத்திற்கு இடம் பெயர்கின்றாள் 17 வயது Bella Swan (Kristen Stewart.) புதுப் பாடசாலையில் இவளை இலகுவாக ஒரு மாணவர் குழாம் நண்பியாக ஏற்றுக் கொண்டாலும், இவளது கவனம் வித்தியாசமான போக்குடன், எல்லாரையும் விட்டு தனித்து இயங்கும் குழு ஒன்றின் மீது ஈர்க்கப் படுகின்றது; முக்கியமாக அதிலிருக்கும் சகமாணவன் Edward Cullen மீது (Robert Pattinson — நம்ம Harry Potter Cedric பாருங்கோ.) போதாக் குறைக்கு Edward’ஏ இவளுக்கு ஆய்வுகூட பங்காளியாகவும் அமர்த்தப் படுகின்றான். Bella இவனை நோக்கி ஈர்க்கப்பட, Edward’ஓ இவளைக் கண்டாலே அருவருப்பதுபோல தோற்றம் காட்டுகின்றான். இதனால் குழப்பமடையும் Bella அதற்கு காரணம் கேட்பதற்காக சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டிருக்கும்போது, வாகனத் தரிப்பிடத்தில் நடக்கும் விபத்திலிருந்து Bella’வின் உயிரைக் காப்பாற்றுகின்றான் Edward; அதுவும் சும்மாயில்லை — மோத வந்த வாகனத்தை கையினால் தடுத்து நிறுத்தி. Edward பற்றிய மர்மம் இன்னமும் முற்றிப் போக, மேற்கொண்டு ஆய்வுசெய்யும் (நம்ம Googling’தான்!) Bella, Edward ஒரு இரத்தக் காட்டேறி என உய்த்தறிகின்றாள். இந்தக் கண்டுபிடிப்போடு Edward’ஐ இவள் எதிர் கொள்ள, அவனும் அதை ஏற்றுக்கொள்கின்றான். அவன் மட்டுமல்ல, அவனது முழுக் குடும்பமுமே. என்றாலும், இவர்கள் மனித இரத்தத்தை உணவாகக் கொள்வதை விடுத்து மிருக இரத்தத்தோடு மட்டும் வாழ்க்கையை ஓட்டுகின்றார்கள். இரகசியங்கள் பரிமாறப் பட, இருவர்களிற்கும் இடையில் இரும்புப் பிணைப்பாகக் காதல் பிறக்கின்றது.

அடிபாடு, துரத்தல் என்றெல்லாம் படத்தின் பின்பகுதியில் இருந்தாலும், மொத்தத்தில் உருக உருக காதல் செய்வதைத் தவிர, அங்க பெரிசா ஒரு கதையும் இல்லை. வழமையாக இரத்தக் காட்டேறி படங்கள் என்றால், பயங்கரம், ஆக்ஸன், பாலியல் என்றுதான் அமைந்திருக்கும் — என்வே இவை பொதுவாக ஆண்களிற்கான படங்களாகத்தான் அமையும். அந்த விதத்தில் Twilight மாறுபட்டது — இதை ஒரு Chick-Flick என்று சொல்லிவிடலாம்; அதாவது பெண்களிற்கு மிகவும் பிடிக்கக் கூடிய படம். அதிலும் Teenage பெண்களிற்கு.

கதைப் புத்தகங்களிலிருந்து திரைக்கு வரும் படங்களின் வழமையான சாபக்கேடு இதற்கும் உண்டு — ஆங்காங்கே சில காட்சிகள், சம்பவங்களிற்கு படத்தில் தரப்படும் விளக்கம் போதுமானதாக இல்லை என்பதாக ஒரு குறைபாடு. என்றாலும் இரண்டு விடயத்தில் படம் சிறந்து நிற்கின்றது. ஒன்று, அந்தக் காதல் சோடி — காமம் இல்லாமல், திரை முழுவதும் காதலை கனிய கனிய வடிய விடுகின்றார்கள்! மற்றது, அழகான ஒளிப்பதிவு; படத்தில் ஓடும் காதலைப் போல, கமெராவும் மென்மையாக ஓடுகின்றது. எனவே, கதையின் ஆழத்திற்கு வரும் முன்னர், படத்தின் முன்பாதியில் அலுப்புத்தட்டினாலும், பின் பாதியை அலுப்பில்லாமல் கொண்டு போயிருக்கின்றார்கள். மென்மையுள்ளம் கொண்டவர் என்றால் பார்க்கலாம், குறை சொல்ல மாட்டீர்கள்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget