சாதாரணமாக காதல் படங்கள் என்றால் அவை chick-flick (பெண்கள் மட்டும் விரும்பிப்பார்க்கும் படம்) என்று முத்திரை குத்தப்படுவது வழமை. நிச்சயமாக அந்த வரையறையை தப்பி நிற்கிறது இந்தப்படம். வீதியோர கார் தரிப்பிடங்களை நெறிப்படுத்தும் வேலை Claireவினது. தவறாக தரிக்கப்பட்ட கார்களிற்கு தண்டம் விதிப்பது Jay’யின் வேலை. வாழ்கையின் நடுப்பகுதியில் ஒண்டைக்கட்டையாக நிற்கும் இருவரும் அடிப்படையில் முரண்பட்ட மனம் கொண்டவர்கள். மிகவும் மென்மையான Claire, வாயைத்திறந்தாலே
அடுத்தவரை சொற்களால் காயம்படுத்தும் Jay, இவர்கள் இடையில் காதல் மலர்வதும், அதை தக்கவைத்துக்கொள்ள இருவரும் படும் பாடுகளும் கதை. படம் பார்த்து முடிய, காதல் ஒன்று மலர்வதற்கு அடிப்படையாக என்ன தேவை என்பது பற்றிய உங்கள் எண்ணங்களை மீளாய்வு செய்யத்தோன்றும். வாழ்வின் இளமையில் எழும் காதலிற்கும், இளமையைத்தொலைத்த பின்பு உருவாகும் காதலிற்கும் இருக்கும் வித்தியாசத்தை அழகாகக்காட்டியிருக்கின்றார்கள். படத்தின் பிரதான இருபாத்திரங்களும் பொதுவாக ரசிக்க முடியாத குணாதியத்தைக் கொண்டிருக்கிறார்கள். அப்பிடி இரு பாத்திரங்களை பிரதானமாக வைத்து படம் எடுத்திருப்பது துணிச்சலான விடயம். நீங்கள் விரும்புகிறீர்களோ இல்லையோ, சொல்லவந்ததை சொல்லிவிட்டு படத்தை முடித்திருக்கிறார்கள். துணிச்சலான ஒரு காதல் படம்! என்றாலும் சிறுவர்களோடு பார்ப்பதற்கு ஏற்றதல்ல.